திருத்தந்தையுடன் எஸ்டோனியா குடியரசுத் தலைவர் Kersti Kaljulaid திருத்தந்தையுடன் எஸ்டோனியா குடியரசுத் தலைவர் Kersti Kaljulaid 

திருத்தந்தையைச் சந்தித்த எஸ்டோனியா குடியரசுத் தலைவர்

எஸ்டோனியா குடியரசுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2018ம் ஆண்டு மேற்கொண்ட திருத்தூதுப்பயணம், எஸ்டோனியாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்து, இச்சந்திப்பில் பேசப்பட்டன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

எஸ்டோனியா குடியரசுத் தலைவர் Kersti Kaljulaid அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, நவம்பர் 28, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்து, 40 நிமிடங்கள் தனியே உரையாடினார்.

வருங்காலத் தலைமுறையினரை ஏந்தி நிற்கும் அடையாளமாக, விரிந்த இருகரங்கள் அடங்கிய ஒரு உருவத்தை, எஸ்டோனியா அரசுத்தலைவர், திருத்தந்தைக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.

புனித பேதுரு பெருங்கோவிலின் உருவம் பதிக்கப்பட்ட ஒரு பதக்கமும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய Evangelii Gaudium, Amoris Laetitia, Laudato si', Gaudete et Exsultate, மற்றும் Christus Vivit ஆகிய மடல்களும், எஸ்டோனியா அரசுத்தலைவருக்கு, நினைவுப் பரிசுகளாக வழங்கப்பட்டன.

எஸ்டோனியா குடியரசுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2018ம் ஆண்டு மேற்கொண்ட திருத்தூதுப்பயணம், எஸ்டோனியாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டின் கல்வி மற்றும், நலவாழ்வுத் துறைகளில், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் ஆகியவை குறித்து, இச்சந்திப்பில் பகிர்ந்துகொள்ளப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

எஸ்டோனியா குடியரசின், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 12 பேர் கொண்ட குழுவுடன் திருப்பீடம் சென்ற அரசுத்தலைவர் Kaljulaid அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்துப் பேசிய பின்னர், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

எஸ்டோனியா குடியரசுத் தலைவருடன் நடைபெற்ற இச்சந்திப்பைத் தொடர்ந்து, தங்கள் ‘அத் லிமினா’ சந்திப்பை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் மூன்றாவது குழுவைச் சேர்ந்த 19 ஆயர்களையும், நெவார்க் பேராயரான கர்தினால் Joseph William Tobin அவர்களையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2019, 14:40