திருத்தந்தை பிரான்சிஸ், மற்றும், கேப் வெர்தே அரசுத்தலைவர் Jorge Carlos de Almeida Fonseca திருத்தந்தை பிரான்சிஸ், மற்றும், கேப் வெர்தே அரசுத்தலைவர் Jorge Carlos de Almeida Fonseca 

திருத்தந்தை பிரான்சிஸ், கேப் வெர்தே அரசுத்தலைவர் சந்திப்பு

Cape Verde, அட்லாண்டிக் பெருங்கடலின் மத்தியில், பத்து எரிமலைத் தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடாகும். இத்தீவுக்கூட்டங்களுக்கு, 15ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் செல்லும் வரை, மக்கள் அங்கு வாழவே இல்லை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கேப் வெர்தே அரசுத்தலைவர் Jorge Carlos de Almeida Fonseca அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் நவம்பர் 16, இச்சனிக்கிழமை காலையில், ஏறத்தாழ 25 நிமிடங்கள் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பிற்குப் பின், தனது துணைவியார் உட்பட, தான் அழைத்துச் சென்றிருந்த குழுவினரையும் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்த அரசுத்தலைவர் De Almeida அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீட செயலகத்தின் நேரடி பொதுச் செயலர் அருள்பணி Mirosław Wachowski அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

திருப்பீடத்திற்கும், கேப் வெர்தே குடியரசுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், இவ்விரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்திடப்பட்டு, 2014ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி அமலுக்குவந்த ஒப்பந்தம், நாட்டின் வருங்காலம், நாட்டின் பொதுநலனில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள், கேப் வெர்தே நாட்டினராகிய அடிமை மானுவேல் அவர்களை அருளாளராக உயர்த்தும் பணிகளின் தற்போதைய நிலவரம், மேற்கு ஆப்ரிக்காவில் அமைதி போன்ற தலைப்புகள், இச்சந்திப்புகளில் இடம்பெற்றன. 

Cape Verde அல்லது Cabo Verde என்றழைக்கப்படும் நாடு, அட்லாண்டிக் பெருங்கடலின் மத்தியில், பத்து எரிமலைத் தீவுகளைக் கொண்ட, ஒரு தீவு நாடாகும். இத்தீவுக்கூட்டங்கள், 15ம் நூற்றாண்டுவரை மக்கள் வாழாத இடங்களாக இருந்தன. பின்னர் போர்த்துக்கீசியர்கள் இத்தீவுகளைக் கண்டுபிடித்து, காலனிகளை, குறிப்பாக, அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்திற்கு முக்கிய இடமாக அமைத்தனர்.

ஐ.நா. தலைமையகத்திற்கு புதிய திருப்பீட பிரதிநிதி

மேலும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நியுயார்க் தலைமையகத்தில், திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றுவதற்கு, பேராயர் Gabriele Giordano CACCIA அவர்களை, நவம்பர் 16, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.  

பிலிப்பீன்சில் திருப்பீட தூதராகப் பணியாற்றிவரும் பேராயர் CACCIA அவர்கள், 1958ம் ஆண்டு மிலானில் பிறந்தவர். 1983ம் ஆண்டில் அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்ட இவர், 2009ம் ஆண்டில், லெபனான் திருப்பீட தூதராக நியமிக்கப்பட்டார். 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதியன்று, பிலிப்பீன்சின் திருப்பீட தூதராக நியமிக்கப்பட்டார், பேராயர் CACCIA.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2019, 14:51