புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை 

திருத்தந்தையின் ஜப்பான் திருத்தூதுப் பயணம், ஒரு முன் தூது

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், ஜப்பானுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட 38 ஆண்டுகள் (பிப்.23-26,1981) மற்றும், தாய்லாந்திற்கு மேற்கொண்ட 35 ஆண்டுகளுக்குப் (1984) பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்நாடுகளுக்குச் செல்கிறார்.

மேரி தெரேசா-வத்திக்கான்

வருங்காலத் திருஅவையின் நம்பிக்கையாக விளங்கும் ஆசியா மீது அளவுகடந்த பற்றுவைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 19, இச்செவ்வாய் மாலையில், ஆசியாவுக்கு, தனது நான்காவது திருத்தூதுப் பயணத்தைத் துவங்குகிறார். திருத்தந்தையின் 32வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாகவும் அமைந்துள்ள இப்பயணத்தில், நவம்பர் 20 இப்புதன் முதல், நவம்பர் 23, வருகிற வெள்ளிக்கிழமை வரை தாய்லாந்து நாட்டிலும், நவம்பர் 23ம் தேதி முதல், 26ம் தேதி வரை ஜப்பானிலும் இப்பயணத்தை மேற்கொள்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசு சபை துறவியாகிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளம் துறவியாக இருந்த காலத்திலே ஜப்பானில் தூதுரைப் பணியாற்றுவதற்கு அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அந்த ஆவல் தற்போது திருத்தந்தையாக நிறைவேறுகிறது. ஏறத்தாழ 85 விழுக்காடு நிலப்பகுதி, மலைகளாக உள்ள ஜப்பானில், அரியவகை பல்லுயிரினங்களைக் கொண்ட ஒன்பது காடுகள் உள்ளன. இந்நாட்டில், மாநிறக் கரடி, கிழக்கு ஆசியாவுக்கேயுரிய ஜப்பானிய raccoon நாய்,  நீளமான ஜப்பானிய சுண்டெலி, ஜப்பானிய இராட்சத பல்லி உள்ளிட்ட, 90 ஆயிரத்திற்கும் அதிகமான வனவிலங்கு உயிரினங்கள் உள்ளன. ஏறத்தாழ ஏழாயிரம் தீவுகளை உள்ளடக்கி, அதிசய இயற்கை வனப்புகள் உள்ள ஜப்பானில், “எல்லா வாழ்வையும் பாதுகாத்தல்” எனும் தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

சூரியன் உதயமாகும் நாடு

ஜப்பான், "சூரியன் உதயமாகும் நாடு" என்று பரவலாக அழைக்கப்படுகின்றது. ஜப்பான் நாட்டிற்கு, Nippon, Nihon ஆகிய பெயர்கள் உள்ளன. இவை, ஜப்பானிய மொழியில் Kanji  (日本) என எழுதப்படுகின்றன. நிப்போன் அல்லது நிஹோன் என்றால், "சூரியன் உதிக்கும் இடம்" என்று பொருள். உலகின் கிழக்கு கோடியில் அமைந்துள்ள ஜப்பானில்தான், உலகத்திலேயே முதன் முதலாக சூரியன் உதிக்கிறது என்று சொல்லப்படுகின்றது. இதற்கு அறிவியல் முறைப்படி காரணம் எதுவாக இருந்தாலும், தாங்கள் சூரிய பகவானின் நேரடி அருள் பெற்றவர்கள் என்று ஜப்பானிய மக்கள் பெருமையோடு கூறிக்கொள்கின்றனர்.  அந்நாட்டின் தேசிய அடையாளமும், சூரியன்தான். ஜப்பானிய தேசியக் கொடியில், சூரியன், ஒரு சின்னமாக இடம்பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது. ஆசியாவின் கிழக்கு கரையில், வட பசிபிக் பெருங்கடலின் மேற்கில், ஏறத்தாழ 2,400 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஜப்பான். இந்நாடு, மக்கள் தொகை பெருக்கமுள்ள நகரங்களையும், பேரரசர்களின் மாளிகைகளையும், மலைப்பகுதி தேசிய பூங்காக்களையும், ஆயிரக்கணக்கான கோவில்களையும், ஆலயங்களையும் கொண்டு, உலகில் நான்காவது பெரிய தீவு நாடாக உள்ளது.

ஜப்பானை, வடக்கிலிருந்து தெற்காக, நான்கு முக்கிய தீவுகள் இணைக்கின்றன. Okinawa வெப்பமண்டல கடற்கரைகளைக் கொண்டுள்ள Kyushu, இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டால் தாக்கப்பட்ட ஹிரோஷிமா, மற்றும் தலைநகர் டோக்கியோ நகரங்கள் அமைந்துள்ள Honshu, புகழ்பெற்ற பனிச்சறுக்கு இடம் அமைந்துள்ள Hokkaido, Shikoku போன்ற முக்கிய தீவுகள் உள்ளன. இத்தீவுகளை, Shinkansen எனப்படும் அதிவேக இரயில் பாதை இணைக்கின்றது. தலைநகர் டோக்கியோ, உலகில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமுள்ள நகரங்களில் ஒன்றாகும். கி.மு.660ம் ஆண்டில் ஜப்பானிய முதல் பேரரசர் ஜிம்மு (Jinmu-tennō) அவர்கள் அரியணையில் அமர்ந்ததை நினைவுகூரும் நோக்கத்தில், பிப்ரவரி 11ம் தேதியன்று, ஜப்பான் உருவாக்கப்பட்ட தேசிய நாளாக, தற்போதைய நவீன ஜப்பானில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஜப்பானிய தீவுக்கூட்டங்களில் ஏறத்தாழ முப்பதாயிரம் ஆண்டில் மனிதர்கள் முதலில் குடியேறியதாகச் சொல்லப்படுகிறது. ஆயினும், இந்நாட்டின் வரலாறு, முதலில் ஹான் (Han) என்ற சீன நூலிலே எழுதப்பட்டுள்ளது. அக்குறிப்புக்களின்படி, மூன்றாம் நூற்றாண்டில், Yamataikoku எனப்படும் மூன்று அரசுகள் மிகுந்த வல்லமைமிக்கதாய் இருந்தன எனத் தெரிகிறது.  

ஜப்பானில் மதங்கள்

கி.மு.18ம் ஆண்டில் கொரியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்ட Baekje முடியாட்சியால், ஜப்பானில் புத்தமதம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், Shōtoku என்ற இளவரசர்தான், புத்தமதத்தைப் பரப்பியுள்ளார். பின்னர், கி.பி. 592ம் ஆண்டு முதல், 710ம் ஆண்டு வரை ஆட்சி செய்த Asuka ஆட்சி காலத்தில், புத்த மதம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் Baekgang போரில், சீனப் பேரரசரான Tang, ஜப்பானைத் தோற்கடித்தார். அதற்குப்பின் ஜப்பானில் கன்பூசிய கருத்தியல்களும், மெய்யியலும் அமல்படுத்தப்பட்டன. ஜப்பானில் அனைத்து நிலங்களையும், தேசிய உடைமையாக்கி, விவசாயிகளுக்கு அவை சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டன. அரசு பிரதிநிதிகளும், மாணவர்களும் சீனாவுக்கு அனுப்பப்பட்டு, சீன எழுதும்முறை, இலக்கியம், மதம், கட்டடக்கலை போன்ற அனைத்தையும் கற்கும்படி வலியுறுத்தப்பட்டனர். இன்றும், ஜப்பானிய கலாச்சார வாழ்வில், சீனர்கள் கொண்டிருந்த இந்த சீர்திருத்தங்களின் தாக்கங்களைக் காண முடிகின்றது. கி.பி. 710ம் ஆண்டில் ஜப்பானில் ஆட்சிக்குவந்த Nara காலத்தில், மீண்டும் புத்த மதம் வளர்ச்சி கண்டது. 11ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில், ஜப்பான், முழுவதும் புத்த மத நிலமாக அமைந்திருந்தது. பின்னர், 16ம் நூற்றாண்டில், போர்த்துக்கீசிய வர்த்தகர்களும், இயேசு சபை துறவிகளும் ஜப்பானில் முதல்முறையாக கால்பதித்தனர். ஜப்பானில் முதன்முதலில் கிறிஸ்தவத்தை அறிமுகப்படுத்தியவர், புனித பிரான்சிஸ் சவேரியார். இவர், 1549ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று, சில இயேசு சபை துறவியருடன் மலாக்காவிலிருந்து ஜப்பான் சென்றார். ஏறத்தாழ அறுபது ஆண்டுகள், இயேசு சபையினர், தொமினிக்கள் சபையினர், பிரான்சிஸ்கன் சபையினர் ஆகியோர் நற்செய்திப் பணியாற்றினர். 1588ம் ஆண்டில் Funayல் மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் மையமாக நாகசாகி நகரம் அமைந்திருந்தது. அச்சமயத்தில் ஜப்பானில் 3 இலட்சத்திற்கு அதிகமான கத்தோலிக்கர் இருந்தனர்.  பின்னர், 16ம் நூற்றாண்டின் இறுதியில், 1597ம் ஆண்டில் கிறிஸ்தவத்திற்கெதிரான சித்ரவதைகள் துவங்கின. 6 பிரான்சிஸ்கன் துறவியர், 3 இயேசு சபையினர் மற்றும், 17 பொதுநிலை விசுவாசிகள் என, 26 மறைசாட்சிகள் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டனர். 17ம் நூற்றாண்டில் ஜப்பானில் கிறிஸ்தவத்திற்கெதிரான மிகக் கொடூரமான வன்முறைகள் இடம்பெற்றன. பின்னர், 19 மற்றும், 20ம் நூற்றாண்டுகளில், ஜப்பானில் திருஅவை புதுப்பிறப்பெடுத்தது. 1597ம் ஆண்டில், மறைசாட்சிகளான 26 பேர், 1862ம் ஆண்டில் புனிதர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். 1863ம் ஆண்டில் நாகசாகியில் அவர்களுக்கென ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது. 1871ம் ஆண்டில், Meiji  பேரரசு நிறுவப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் வலியுறுத்தலின் பேரில், ஜப்பானில் சமய சுதந்திரம் வழங்கப்பட்டது. பல நாடுகளிலிருந்து மறைப்பணியாளர்கள் ஜப்பானுக்குச் சென்றனர். 1927ம் ஆண்டில், ஜப்பானைச் சேர்ந்த ஒருவர், முதன் முதலாக ஆயராகப் பொறுப்பேற்றார். பல ஆண்டுகள் சித்ரவதைக்கு உள்ளான ஜப்பான் திருஅவையில், தற்போது கத்தோலிக்கர் 0.42 விழுக்காடு மட்டுமே. ஷின்டோயிசம், புத்தம், கன்பூஷியம், கிறிஸ்தவம் மற்றும், ஏனைய மதத்தினர் உள்ளனர்.

மொழிகள்

ஜப்பானில், 99 விழுக்காட்டிற்கு அதிகமான மக்கள், தங்களின் முதல் மொழியாக, ஜப்பானிய மொழியையே பேசுகின்றனர். இம்மொழி, ஜப்பானிய சமுதாயத்தின் பாரம்பரிய இயல்பைப் பிரதிபலிக்கின்றது. மேலும், Ryukyu தீவில் Ryukyuan மொழிகள் (Amami, Kunigami, Okinawan, Miyako, Yaeyama, Yonaguni) பேசப்படுகின்றன. அண்மை ஆண்டுகளாக, உள்ளூர் அரசுகள், பாரம்பரிய மொழிகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்து வருகின்றன. அந்நாட்டில், 98.5 விழுக்காட்டினர், ஜப்பானியர்கள், 0.5 விழுக்காட்டினர் கொரியர்கள், மற்றும், 0.4 விழுக்காட்டினர் சீனர்கள். 2050ம் ஆண்டுக்குள் அந்நாட்டு மக்கள் தொகை 9 கோடியே 50 இலட்சமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், தற்போது ஜப்பானிய அரசு, ஆண்டுக்கு, 9,500 பேரை புதிய ஜப்பானிய குடிமக்களாக ஏற்று வருகிறது. ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அவையின் கூற்றுப்படி, ஜப்பான், 2012ம் ஆண்டில் 18 புலம்பெயர்ந்தோரை மட்டுமே ஏற்றுள்ளது கவனிக்கத்தக்கது. தற்கொலைகள் அதிகமுள்ள ஜப்பானில், 2009ம் ஆண்டில் முப்பதாயிரத்திற்கு அதிகமானோர் தற்கொலை செய்தனர். முப்பது வயதுக்குட்பட்டவர்களின் இறப்புக்கு முக்கிய காரணம் தற்கொலை என சொல்லப்படுகிறது.

நவீன ஜப்பான்

19ம் நூற்றாண்டின் இறுதி கட்டம், மற்றும், 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், முதல் சீன-ஜப்பான் போர், இரஷ்ய-ஜப்பானிய போர், முதல் உலகப் போர் ஆகியவற்றில் ஜப்பான் அடைந்த வெற்றிகளால், ஜப்பானியப் பேரரசு, தனது இராணுவ பலத்தை அதிகரித்தது. 1937ம் ஆண்டில் இடம்பெற்ற இரண்டாவது சீன-ஜப்பான் போரால், இரண்டாம் உலகப் போரில் 1941ம் ஆண்டில் தனது பகுதியை விரிவுபடுத்தியது. ஆயினும், ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் அணுகுண்டுகளால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து 1945ம் ஆண்டில் ஜப்பான் சரணனடைந்தது. 1947ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி, ஜப்பான் தனது அரசியலமைப்பை சீரமைத்தது. பாராளுமன்ற அமைப்பையும், பேரரசரையும் கொண்ட இறையாண்மை கொண்ட நாடாக ஆனது. தற்போது, ஐ.நா., OECD எனப்படும் பொருளாதார, ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு, ஜி7, ஜி8, ஜி20 ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது ஜப்பான். தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பில் உறுப்பினராக உள்ள ஜப்பான், உலகில் மிகுந்த வல்லமை கொண்ட நாடாக விளங்குகிறது. உலக உள்நாட்டு உற்பத்தியில் 3வது இடத்தையும், ஏற்றுமதி மற்றும், இறக்குமதிகளில் நான்காவது இடத்தையும் கொண்டிருக்கிறது. உலகில், கல்வி சார்ந்த பட்டயங்களை கொண்டிருப்பவரில் அதிக எண்ணிக்கை இந்நாட்டில் உள்ளது. இந்நாட்டில் ஆண்களும் பெண்களும் நூறு விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்கள். போரை அறிவிப்பதற்கு உரிமை கிடையாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பினும், உலகில், எட்டாவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது ஜப்பான். இதனை, தன் நாட்டுப் பாதுகாப்பு மற்றும், அமைதி காப்பதற்கென பயன்படுத்துகின்றது ஜப்பான்.

ஜப்பான், வாழ்க்கைத் தரத்திலும், மனித வளர்ச்சி குறியீட்டிலும், மிகவும் வளர்ச்சியடைந்த நாடாகும். அந்நாடு, மக்களின் ஆயுட்காலம் அதிகம், அதேநேரம், உலகில் மிகவும் குறைவான குழந்தை இறப்பு இடம்பெறுவதில் 3வது இடத்தில் உள்ளது. 2019ம் ஆண்டின் நிலவரப்படி, 189 நாடுகளுக்கு இலவச விசா அனுமதி அல்லது, நாட்டிற்கு வந்தவுடன் விசா வழங்கும் சலுகையை அளித்துள்ளது இந்நாடு. இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டுகளாய், கொடூரமாய்த் தாக்கப்பட்ட ஜப்பான், அதிலிருந்து மீண்டு எழுந்து, உலகினர் புருவங்களை உயர்த்திப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது வியப்புக்குரியதாகும். இந்த வளர்ச்சியடைந்த நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவுள்ள திருத்தூதுப்பயணம், சிறுபான்மை கத்தோலிக்கர் விசுவாசத்தில் ஆழப்பட, உறுதிப்பட, வளர உதவும் என நம்புவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 November 2019, 15:41