நாகசாகி அமைதி நினைவிடத்தில் திருத்தந்தை வழங்கிய உரை நாகசாகி அமைதி நினைவிடத்தில் திருத்தந்தை வழங்கிய உரை 

நாகசாகி நினைவிடத்தில் திருத்தந்தை வழங்கிய உரை

பாதுகாப்பு, அமைதி, நிலையானத் தன்மை ஆகியவற்றிற்காக ஏங்கும் மனித இதயத்தின் பதில் மொழி, அணு ஆயுதங்களோ, அழிவு தரும் ஏனைய ஆயுதங்களோ அல்ல – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, நாம் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு வேதனையையும், பயங்கரத்தையும் திணிக்க முடியும் என்பதை மிக ஆழமாக உணர்த்தி நிற்கிறது, இந்த நாகசாகி நினைவிடம். பாதுகாப்பு, அமைதி, நிலையானத் தன்மை ஆகியவற்றிற்காக ஏங்கி நிற்கிறது, மனித இதயம். இந்த ஏக்கத்திற்குரிய பதில் மொழி, அணுஆயுதங்களோ, அழிவு தரும் ஏனைய ஆயுதங்களோ அல்ல. அவை, இந்த ஏக்கத்திற்கு எதிராகவே செயல்படுகின்றன. ஒருவரையொருவர் அழிப்பது என்ற அச்சத்தின் அடிப்படையில் அமைதியையும் நிலையான தன்மையையும் கட்டியெழுப்ப முடியாது, மாறாக, ஒருவரையொருவர் சார்ந்து வாழும் நிலை, பொறுப்புணர்வை பகிர்தல் ஆகியவற்றின் துணையுடன் வருங்காலத்தை கட்டியெழுப்பும் நோக்கம் கொண்ட ஒத்துழைப்பு, ஒருமைப்பாடு என்பவற்றின் அடிப்படையிலேயே அமைதியையும், நிலையானத் தன்மையையும் கொணரமுடியும்.

ஆயுதப் போட்டியில் வீணாகும் உலக வளங்கள்

இயற்கையைப் பாதுகாப்பதற்கும், மனிதகுலத்தின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கும் தேவைப்படும், விலைமதிப்பற்ற வளங்களை, இன்றைய உலகம், ஆயுதப் போட்டியில் வீணாக்கிக் கொண்டிருக்கிறது. இலட்சக்கணக்கான குழந்தைகளும், குடும்பங்களும், மனிதாபிமானமற்ற சூழல்களில் வாழும்போது, கோடிக்கணக்கான பணத்தை அழிவு தரும் ஆயுதங்களில் செலவழிப்பது, ஏற்புடையது அல்ல. அணு ஆயுதங்களற்ற உலகில் வாழ்வது, பல கோடி மக்களின் ஏக்கமாக உள்ளது. இதை நனவாக்க, அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. ஒருவர் மீது மற்றவர் கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் அமைதியை கட்டியெழுப்ப முடியுமேயொழிய அணு ஆயுதங்களின் அச்சுறுத்தல் வழியாக அல்ல என்பதை, ஏற்கனவே, 1963ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 23ம் ஜான், 'Pacem in Terris' என்ற சுற்றுமடலில் வலியுறுத்தியுள்ளார்.

அமைதியின் பணியில் திருஅவை

 மக்களிடையேயும் நாடுகளிடையேயும் அமைதியை ஊக்குவிக்கும் பணியில் தன்னையே அர்ப்பணித்துள்ளது திருஅவை. இறைவனின் முன்னால், இவ்வுலகின் ஒவ்வொரு மனிதருக்கும் ஆற்றவேண்டிய ஒரு கடமையாக இதனை எண்ணுகிறது திருஅவை. அணுஆயுத களைவு, ஆணு ஆயுத பயன்பாட்டு தடை, போன்றவற்றிற்காக உழைப்பதில் நாம் ஒரு நாளும் சோர்வடையக்கூடாது.

அணுஆயுத ஒழிப்புக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ஜப்பான் ஆயர்கள், ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் மாதம், அமைதிக்காக, பத்து நாள் செபமுயற்சிகளை மேற்கொள்கின்றனர். உண்மையான அமைதிக்குரிய உறுதியைத் தரும் ஒருமைப்பாடு, மற்றும், நீதியுடன் கூடிய ஓர் உலகை கட்டியெழுப்ப உதவும் உரையாடல்கள் இடம்பெற, செபம் எனும் ஆயுதத்தை நம்புவோம்.

அணு ஆயுதங்களற்ற உலகம் சாத்தியமே

அணு ஆயுதங்களற்ற ஓர் உலகம் என்பது சாத்தியமே என்பதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டுள்ள நான், இந்த அணு ஆயுதங்களின் வழியாக உலக பாதுகாப்பை உறுதி செய்யமுடியாது என்பதை, உலகத் தலைவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

அணு ஆயுதங்கள், மனிதகுலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும், விளைவிக்கும் அழிவுகள் குறித்து நாம் சிந்திக்கவேண்டும். நீடித்த, நிலையான வளர்ச்சியை நோக்கி திட்டமிட்டு செயல்படும் நாம், இவ்வுலகின் வளங்களை, அந்தப் பாதையில் எவ்விதம் பயன்படுத்த முடியும் என்பது குறித்து சிந்திப்போம். இராணுவச் செலவிலிருந்து ஒரு பகுதியை எடுத்து, ஏழை மக்களுக்கு உதவும் நோக்கம் கொண்ட ஒரு நிதி, உலக அளவில் உருவாக்கப்பட வேண்டும் என, புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்களும், 1964ம் ஆண்டில் பரிந்துரைத்தார்.

மனமாற்றம் இடம்பெற வேண்டும்

இன்றையக் காலக்கட்டத்தில் நம் மனச்சான்றை உறுத்தும் பல இலட்சக்கணக்கான மக்களின் துன்ப துயரங்கள் கண்டு எவரும் பாராமுகமாக இருக்கமுடியாது. தேவையில் இருக்கும் நம் சகோதர சகோதரிகளின் குரல்களுக்கு நாம் செவிமடுக்காமல் இருக்கமுடியாது. உரையாடலை ஊக்குவிக்காத ஒரு கலாச்சாரத்தால் உருவாகும் அழிவுகளை, கண்டும் காணாதவர்களாக எவராலும் செயல்படமுடியாது. வாழ்வு, ஒப்புரவு, மற்றும், உடன்பிறந்த உணர்வு கொண்ட கலாச்சாரம் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கத்தில், மனமாற்றங்கள் இடம்பெற வேண்டும் என, என்னுடன் இணைந்து செபிக்குமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். இங்கு கூடியிருப்போரில் சிலர் கத்தோலிக்கர்கள் அல்ல என்பது எனக்குத் தெரியும், இருப்பினும், அமைதி வேண்டி, அசிசி நகர், புனித பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய செபத்தை, நம்முடையதாக மாற்றி, இணைந்து செபிக்கமுடியும்.

புனித பிரான்சிஸ் உருவாக்கிய அமைதியின் செபம்

இறைவா, என்னை உமது அமைதியின் கருவியாக்கும். எங்கு பகைமை நிறைந்துள்ளதோ, அங்கு அன்பையும், எங்கு கயமை நிறைந்துள்ளதோ, அங்கு மன்னிப்பையும், எங்கு ஐயம் நிறைந்துள்ளதோ, அங்கு விசுவாசத்தையும், எங்கு அவநம்பிக்கை நிறைந்துள்ளதோ, அங்கு நம்பிக்கையையும், எங்கு இருள் சூழ்ந்துள்ளதோ, அங்கு ஒளியையும், எங்கு மனக்கவலை உள்ளதோ, அங்கு அகமகிழ்வையும் விதைத்திட அருள்புரியும்.

பாராமுகம் எனும் போக்கை உலுக்கிப்பார்க்கும் இந்த நினைவிடத்தில், நம்பிக்கையுடன் இறைவனை நோக்கியவர்களாக, அமைதியின் கருவிகளாக மாறவும், கடந்தகாலத் தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்கவும், வேண்டுவது மிகப் பொருத்தமானது.

நீங்களும் உங்கள் குடும்பங்களும், இந்த நாடு முழுவதும், வளம் மற்றும் சமூக இணக்கத்தின் ஆசீர்களைப் பெற்று, செயல்படுவீர்களாக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2019, 12:56