Nishizaka குன்றில் மறைசாட்சிகள் நினைவிடத்தில் திருத்தந்தையின் மலர் அஞ்சலி Nishizaka குன்றில் மறைசாட்சிகள் நினைவிடத்தில் திருத்தந்தையின் மலர் அஞ்சலி 

நாகசாகி மறைசாட்சிகள் நினைவிடம்

21ம் நூற்றாண்டு நவீன மறைசாட்சிகளின் சான்று, இயேசு கூறிய பேறுகள் பாதையில் துணிச்சலுடன் நம்மை செல்ல வைக்கின்றது

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 24, இஞ்ஞாயிறு, உள்ளூர் நேரம் காலை 10.35 மணிக்கு, நாகசாகி அமைதியின் நினைவிடத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, Nishizaka குன்றுக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இக்குன்றின் உச்சியில்தான், 1597ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி, இயேசு சபை அருள்பணியாளர் புனித பவுல் மிக்கியும், அவரோடு சேர்ந்து, மூன்று சிறார் உட்பட 25 பேரும் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த இடத்தில் 1962ம் ஆண்டு, மறைசாட்சிகளைக் குறிக்கும் விதமாக, செங்கற்களால் சிலுவை வடிவில் ஒரு நினைவிடம் எழுப்பப்பட்டது. இந்த மறைசாட்சிகள் நினைவிடத்திற்குச் சென்ற திருத்தந்தையை, ஓர் அருள்பணியாளரும், ஓர் இயேசு சபை துறவியும் வரவேற்றனர். ஒரு குடும்பம் திருத்தந்தையிடம் மலர்கள் அளித்தது. திருத்தந்தை, அம்மலர்களை அங்கு வைத்தார் அக்காலத்தில் கிறிஸ்தவத்திற்கெதிரான சித்ரவதைகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், திருத்தந்தையிடம் மெழுகுதிரி ஒன்றைக் கொடுத்தார். அதை திருத்தந்தை அங்கு ஏற்றி வைத்தார். மறைசாட்சிகளின் புனிதப்பொருள்களுக்குத் தூப மரியாதை செலுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு கூடியிருந்தவர்களுடன் தன் சிந்தனைகளையும், பகிர்ந்துகொண்டார்.

திருத்தந்தையின் பகிர்வு

ஒரு திருப்பயணியாக செபிப்பதற்காகவும், ஜப்பானில் கத்தோலிக்கரை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும் இவ்விடத்திற்கு வந்துள்ளேன். இந்த மறைசாட்சிகள் நினைவிடத்தில்  பொறிக்கப்பட்டுள்ள உருவங்களையும், பெயர்களையும் பார்க்கையில், இத்திருத்தலம், மரணத்தைவிட மேலும் அதிகமாக, அதாவது, மரணத்தின் மீது வாழ்வு வெற்றி கண்டது பற்றியும், மறைசாட்சியத்தின் இருள் பற்றியும், அதேநேரம், உயிர்ப்பின் ஒளி பற்றியும் பேசுகின்றது. புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் இவ்விடத்திற்கு வந்தபோது, இதனை மறைசாட்சிகளின் மலையாக மட்டும் பார்க்காமல், பேறுபெற்றவர்களின் உண்மையான மலையாகப் பார்த்தார். நற்செய்தியின் ஒளி, சித்ரவதைகளையும், கத்தியையும் வெற்றி கண்டுள்ளது. இந்த நினைவிடம், மரணத்திற்கு அல்ல, வாழ்வுக்கு உரியது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, உயிர்ப்பின் நினைவிடம். மறைசாட்சிகளின் சான்று, நம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்துகின்றது மற்றும், நம் மறைப்பணி சீடத்துவ அர்ப்பணத்தைப் புதுப்பிக்க உதவுகின்றது. அனைவருக்கும், குறிப்பாக, அதிகத் தேவையில் இருப்பவர்களுக்கு, ஆரவாரமின்றிப் பணியாற்றும் அன்றாட மறைசாட்சியம் வழியாக, அனைத்து உயிர்களையும் பாதுகாத்துப் பேணுவதற்குரிய, கலாச்சாரத்தைப் படைக்க இது நம்மைத் தூண்டுகிறது. ஓர் இளம் இயேசு சபை துறவியாக, உலகின் அடுத்த எல்லையிலிருந்தபோது, துவக்ககால மறைப்பணியாளர்கள் மற்றும் ஜப்பானிய மறைசாட்சிகளின் வாழ்வால், நான் மிகவும் தூண்டப்பட்டேன் என்பதை, தாழ்மையோடு இங்கு சொல்கிறேன். மறைசாட்சிகளின் புனிதப்பொருள்கள், மகிமையுள்ளவை அல்ல, ஆனால் உயிருள்ள நினைவுகள். இந்த நம் காலத்தில், விசுவாசத்திற்காக மறைசாட்சியத்தால் உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவர்களோடு இந்த இடத்தில் நாம் ஒன்றிணைந்துள்ளோம். இந்த 21ம் நூற்றாண்டு நவீன மறைசாட்சிகளின் சான்று, இயேசு கூறிய பேறுகள் பாதையில் துணிச்சலுடன் நம்மை செல்ல வைக்கின்றது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், ஆசியாவிலும், உலகெங்கிலும் சமய சுதந்திரம் நிலவ அழைப்பு விடுத்தார். அவ்விடத்தில் மூவேளை செபத்தையும் சொன்னார். மறைசாட்சிகள் நினைவிடத்திற்கு, 120 செ.மீ. உயரமுடைய, வெள்ளியாலானத் தீபத் தூண் ஒன்றைப் பரிசாக அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இது, திருப்பீட தலைமையகத்தால் தயாரிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்குப்பின், நாகசாகி பேராயர் இல்லம் சென்று மதிய உணவு அருந்தினார். “நம் காலத்தில் விசுவாசத்திற்காக மறைசாட்சியத்தால், உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவர்கள் அனைவரோடும் நாம் ஒன்றித்திருக்கிறோம். அவர்கள், 21ம் நூற்றாண்டு மறைசாட்சிகள். அவர்களின் சான்றுகள், பேறுகள் பாதையில் துணிச்சலுடன் நாம் செல்லத் தூண்டுகிறது” என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியில், #ApostolicJourney #NishizakaHill என்ற ஹாஸ்டாக்குடன் திருத்தந்தை வெளியிட்டார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2019, 14:31