பாங்காக் இராஜமங்கள தேசிய அரங்கத்தில் திருப்பலி பாங்காக் இராஜமங்கள தேசிய அரங்கத்தில் திருப்பலி 

பாங்காக் இராஜமங்கள தேசிய அரங்கத்தில் திருப்பலி

பாங்காக்கில் திருத்தந்தை - கத்தோலிக்கரும் புத்த மதத்தினரும், நல்ல அயலவர்களாக வாழ முடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

நவம்பர் 21, இவ்வியாழன் உள்ளூர் நேரம் மாலை 6 மணியளவில், பாங்காக் இராஜமங்கள தேசிய அரங்கம் சென்று, தாய்லாந்து சிறுபான்மை கத்தோலிக்கருக்குத் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். புனித அன்னை மரியா மூன்று வயதில் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழாத் திருப்பலியை நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். விசுவாசிகள் மத்தியில் திருத்தந்தை திறந்த காரில் வந்தபோது, வத்திக்கான் கொடிகளுடன், அம்மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அரங்கமே மஞ்சள் நிறத்தில் அழகுறக் காட்சியளித்தது. சிவப்பு நிற கம்பளம் விரிக்கப்பட்ட தரையில் திருப்பலி பீடமும், நாற்காலிகளும், தாய்லாந்து கலையழகில் அமைக்கப்பட்டிருந்தன. மொத்த மக்கள் தொகையில், 0.46 விழுக்காட்டு கத்தோலிக்கர் வாழ்கின்ற தாய்லாந்தில் இத்திருப்பலியில் ஏறத்தாழ அறுபதாயிரம் விசுவாசிகள் கலந்துகொண்டனர். இத்திருப்பலியில் இஸ்பானிய மொழியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரையில், தாய்லாந்து மண்ணில் தூதுரைப் பணியாற்றிய முதல் மறைப்பணியாளர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இயேசுவின் சீடர்களாக வாழுங்கள் என, தாய்லாந்து கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டார். திருப்பலியின் இறுதியில், அழகிய நடன நிகழ்வும் நடைபெற்றது. இத்திருப்பலி, தாய்லாந்து மண்ணில் பொதுவில் திருத்தந்தை ஆற்றிய முதல் திருப்பலியாகும். இத்துடன் திருத்தந்தையின் இவ்வியாழன் தின பயண நிகழ்வுகள் நிறைவு பெற்றன. இவ்வியாழனன்று, பாங்காக்கில் பாலியல் தொழிலில் சிறார் துன்புறுவது, மனித வர்த்தகம் போன்ற சமுதாயத் தீமைகளைக் குறிப்பிட்டு, மனித மாண்புக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை. அமைதி மற்றும் உடன்பிறந்த உணர்வை மதங்களால் ஊக்குவிக்க முடியும். கத்தோலிக்கரும் புத்த மதத்தினரும், நல்ல அயலவர்களாக வாழ முடியும் என, புத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழ்கின்ற தாய்லாந்தில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை. தாய்லாந்தில் மூன்று நாள்கள் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து, நவம்பர் 23, இச்சனிக்கிழமை காலையில் ஜப்பானுக்குச் செல்வார் மற்றும், நவம்பர் 26ம் தேதி, ஜப்பானிலிருந்து உரோம் திரும்புவார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் திருத்தந்தையின் 32வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் முற்றுப்பெறும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2019, 15:44