காவல் தூதர்கள் காவல் தூதர்கள்   (© BAV, Vat. lat. 3769, f. 27v)

திருத்தந்தையின் டுவிட்டர்- நாம் ஒருபோதும் தனிமையில் இல்லை

1582ம் ஆண்டு, இஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரில்தான், முதன்முறையாக காவல் தூதர்களுக்கு விழாக் கொண்டாடும் வழக்கம் ஆரம்பிக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நாம் ஒருபோதும் தனிமையில் இல்லை என்ற உறுதியை காவல் தூதர்கள் தருகின்றார்கள் என்று, புனித காவல் தூதர்கள் விழாவாகிய அக்டோபர் 2, இப்புதனன்று, ஹாஸ்டாக் (#HolyGuardianAngels) குடன், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“புனித காவல்தூதர்களை நினைக்கும்போது, அந்நினைவு நம்மில், நாம் தனிமையில் இல்லை என்ற உறுதியைப் பலப்படுத்துவதாக; கடவுளன்பில் புதுப்பிக்கப்பட்ட ஓர் உலகில், கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கவும், வாழவும் அந்நினைவு நம்மைக் காத்து பேணுவதாக” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஹாஸ்டாக் (#HolyGuardianAngels) குடன் வெளியான டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

கத்தோலிக்கத் திருஅவையில் காவல்தூதர்கள் விழா 16ம் நூற்றாண்டிலிருந்தே சிறப்பிக்கப்பட்டு வந்துள்ளது. 1582ம் ஆண்டு, இஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரில்தான், முதன்முறையாக காவல்தூதர்களுக்கு விழாக் கொண்டாடும் வழக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1608ம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் பவுல் அவர்கள், இவ்விழாவை, மக்கள் மத்தியில் பரப்பினார். திருத்தந்தை பத்தாம் கிளமென்ட் அவர்கள், இவ்விழாவை அக்டோபர் 02ம் நாள் கொண்டாடப் பணித்தார். திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் அவர்கள், இவ்விழாவை ஒரு பெருவிழா போன்று கொண்டாடுமாறு கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2019, 15:41