அமேசான் மாமன்றம் அமேசான் மாமன்றம் 

இயேசுவை அறியும் வாழ்வு வழியாக சான்றுபகர்தல்

துர்க்மெனிஸ்தான் தலத்திருஅவை, அக்டோபர் 'சிறப்பு மறைபரப்புப்பணி மாத'த்தை, அம்மக்களின் மொழியில் மறைப்பணியாற்றும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருஅவையில் நற்செய்தி அறிவிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நடைபெறும் அக்டோபர் மாதம் 'சிறப்பு மறைபரப்புப்பணி மாத'மாகச் சிறப்பிக்கப்படுவதையொட்டி, அப்பணியின் பல்வேறு பரிமாணங்களை விளக்கும் வகையில், இம்மாதத்தில் #ExtraordinaryMissionaryMonth என்ற ‘ஹாஷ்டாக்’குடன் தன் டுவிட்டர் செய்திகளைப் பதிவு செய்து வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 26, இச்சனிக்கிழமையன்று பதிவு செய்துள்ள டுவிட்டர் செய்தியில், “ஒருவர், இயேசுவை அறியும் வாழ்வு வழியாகச் சான்று பகர்ந்து, மறைப்பணியாளராக மாற முடியும். இதுவே வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கும்” என்ற சொற்களை  திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.

துர்க்மெனிஸ்தானில் மறைப்பணி

மேலும், தலத்திருஅவைகள், அக்டோபர் 'சிறப்பு மறைபரப்புப்பணி மாத'த்தை, பல்வேறு நிகழ்வுகளால் சிறப்பித்துவரும்வேளை, துர்க்மெனிஸ்தான் தலத்திருஅவை, அம்மக்களின் மொழியில் மறைப்பணியாற்றும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது என, பீதேஸ் செய்தி கூறுகிறது.

துர்க்மெனிஸ்தானில் மறைப்பணியாற்றும் அமலமரி தியாகிகள் சபையின் அருள்பணியாளர் Andrzej Madej அவர்கள், இப்பணி பற்றிக் கூறுகையில், தாங்கள் இதுவரை இரஷ்ய மொழியிலேயே மறைப்பணியாற்றி வந்தோம், ஆனால், இரஷ்ய மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், துர்க்மெனிஸ்தான் மொழியில் மறைப்பணியாற்றுவது, தற்போது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது என்று கூறினார்.

இந்த அக்டோபரில் மூன்றாவது நபராக எங்களது குழுவில் இணைந்திருக்கும் எங்கள் சபை அருள்பணியாளர் ஒருவர், துர்க்மெனிஸ்தான் மொழியைக் கற்கத் துவங்கியுள்ளார் என்றும், அருள்பணி Madej அவர்கள் தெரிவித்துள்ளார்.

துர்க்மெனிஸ்தான் நாட்டிலுள்ள ஏறத்தாழ ஐம்பது இலட்சம் மக்களில், 90 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். அந்நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை, 1997ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் உருவாக்கப்பட்டது. அந்நாட்டில் கடந்த 13 ஆண்டுகளாக, அமலமரி தியாகிகள் சபையினர் மறைப்பணியாற்றி வருகின்றனர். (Fides)  

மத்திய ஆசியாவிலுள்ள துர்க்மெனிஸ்தான், 1925ம் ஆண்டில், முன்னாள் சோவியத் யூனியனோடு இணைக்கப்பட்டது. சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதையடுத்து, 1991ம் ஆண்டில் துர்க்மெனிஸ்தான் தனி குடியரசானது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2019, 15:18