அணு குண்டுகளால் தாக்கப்பட்ட ஹிரோசிமா, நாகசாகி அணு குண்டுகளால் தாக்கப்பட்ட ஹிரோசிமா, நாகசாகி 

போர்களுக்காக அணு சக்தியைப் பயன்படுத்துவது, நன்னெறிக்கு முரணானது

உறுதியான மனபலமும், விசுவாசமும் கொண்ட ஜப்பானியர்கள், தங்கள் வரலாறு முழுவதும், கடும் சோதனைகளை வெற்றிகண்டு, மீண்டெழுந்து வந்துள்ளவர்கள். இவர்கள் மீது ஆழ்ந்த நன்மதிப்பு கொண்டிருக்கிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜப்பானிய மக்கள், மிகவும் துன்பம்தரும் சோதனைகளிலிருந்து மீண்டெழுவதற்குத் திறமை படைத்தவர்கள் மற்றும், இம்மக்கள் எப்போதும் முன்னோக்கிப் பார்ப்பவர்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜப்பானிய தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்த காணொளி நேர்காணலில் பாராட்டியுள்ளார்.

ஜப்பான் நாட்டு KTN தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த நேர்காணலில், ஜப்பான் நாட்டின் கிறிஸ்தவ மறைசாட்சிகளின் வரலாற்றையும், அணு குண்டுகளால் தாக்கப்பட்ட ஹிரோசிமா, நாகசாகி நகரங்களின் வரலாற்றையும் வாசிக்கையில், அந்நாட்டு மக்களைப் பார்த்து நான் வியப்பில் ஆழ்ந்துபோகிறேன் என்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ மறைசாட்சிகள், தங்களின் கிறிஸ்தவ விசுவாசத்தில் பற்றுறுதியுடன் இருந்து, தாங்கள் விசுவசித்ததை, உறுதிப்பாட்டை மற்றும், கிறிஸ்தவ சுதந்திரத்தைப் பாதுகாத்த முறை பற்றி நினைத்துப் பார்க்கிறேன் என்றுரைத்த திருத்தந்தை, மற்றுமொரு மனித மறைசாட்சியம், அதாவது அணு குண்டுகளால் துன்புற்ற மக்களின் மறைசாட்சியம் பற்றியும் நினைத்துப் பார்க்கிறேன் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இவ்வளவு துன்பங்களிலிருந்து அம்மக்கள் மீண்டெழுந்துவந்த முறையை எண்ணி வியப்படைகிறேன், இதேநேரம், ஜப்பானியர்களாகிய உங்கள் மீது அணு குண்டை வீசியவர்கள், அறக்கொடியவர்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  போரை உருவாக்க அணு சக்தியைப் பயன்படுத்துவது, நன்னெறிக்கு முரணானது என்ற உண்மையை மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன் என்றும், தொலைக்காட்சி காணொளி நேர்காணலில் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜப்பானில், வருகிற நவம்பர் 23ம் தேதி முதல், 26ம் தேதி வரை, திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவேற்றுவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2019, 15:45