இறைவனின் தாய் அன்னை மரியா இறைவனின் தாய் அன்னை மரியா 

நம்பிக்கையின் மனிதர், சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்பவர்

மரியின் ஊழியர் சபை, பிளாரன்ஸ் நகருக்கருகில் செனாரியோ மலையில், 1233ம் ஆண்டில், அந்நகரின் ஏழு துணி வர்த்தகர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஏழுவரையும் திருத்தந்தை 13ம் சிங்கராயர் அவர்கள்,1888ம் ஆண்டில் புனிதர்கள் என அறிவித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நம்பிக்கையின் மனிதர்களாக இருப்பது என்பது, புனித வாழ்வின் அடையாளங்களான உரையாடல், குழும வாழ்வு மற்றும், உடன்பிறந்தநிலையின் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரியின் ஊழியர் சபை துறவியரிடம் கூறினார்.

அக்டோபர் 25, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் தன்னைச் சந்தித்த, மரியின் ஊழியர் சபை ஆண் துறவியருக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சபையின் தோற்றம், சபையை நிறுவியவர்களின் தனிவரம், மற்றும், அச்சபையின் மறைப்பணி ஆகியவற்றை விளக்கினார்.

214வது பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும் இச்சபையின் பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை, நம்பிக்கையின் மனிதர்கள், இக்காலத்தின் சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்பவர்கள் என்றும் கூறினார்.

13ம் நூற்றாண்டில் பிளாரன்ஸ் நகரில், வர்த்தகம் மற்றும், தன்னார்வலப் பணிகளில் ஈடுபட்டிருந்த, ஆண்கள் குழு ஒன்றினால் ஆரம்பிக்கப்பட்ட இச்சபை, அன்னை மரியின் வாழ்வால் தூண்டப்பட்டு நற்செய்திக்குச் சான்று பகர்ந்து வருவது குறித்து குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தனக்கு இயேசு பிறப்பு பற்றிய மங்களச் செய்தி அறிவிக்கப்பட்ட பின்னர், அன்னை மரியா எலிசபெத்திற்கு உதவிசெய்யச் சென்றது, காணாவூர் திருமண விருந்தில், இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்ற உதவியது, இயேசுவின் சிலுவையடியில் முழு விசுவாசம் மற்றும், வேதனையோடு நின்றது, திருத்தூதர்களோடு செபத்தில் நிலைத்திருந்து, தூய ஆவியாருக்காகக் காத்திருந்தது ஆகிய, அன்னை மரியாவின் நான்கு முக்கிய பண்புகளால் தூண்டப்பட்டு இச்சபையினர் வாழ்ந்து வருவதைக் குறிப்பிட்டுப் பேசினார் திருத்தந்தை.

இச்சபையை ஆரம்பித்த ஏழு புனிதர்கள், மலையிலும் நகரத்திலும் வாழும் முறையைக்  கற்றுக்கொண்டவர்கள் என்றும், கடவுள் அனுபவத்தால் உறுதிப்படுத்தப்பட்டு, மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தெரிந்தவர்கள் என்றும் உரைத்த திருத்தந்தை, புதிய மறைப்பணித் தளங்களில் மலரும் இறையழைத்தல்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

நற்செய்தியை அறிவிப்பதற்கு அனுப்பப்படும் புதிய தளங்களிலுள்ள மக்களின் அழகு, கலாச்சாரம் மற்றும், வியத்தகு ஆன்மீகத்தை அனுபவிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நம்பிக்கையின் மனிதர்களாக வாழ்வது எப்படி என்பதையும் விளக்கினார்.

இக்காலத்தின் சமூகத்தொடர்பு சாதனங்கள், நேர்மறை செய்திகளைத் தருகின்றன, அதேநேரம், மக்களின் மாண்பை அழிக்கின்றன, ஆன்மீகத்தை பலவீனப்படுத்துகின்றன, மற்றும், உடன்பிறந்த உணர்வுகொண்ட வாழ்வைச் சிதைக்கின்றன, எனவே, இக்கருவிகளை நற்செய்தி அறிவிப்பிற்கென பயன்படுத்துகையில், ஒருவர் நன்கு பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

இப்பொதுப் பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பல்வகை கலாச்சாரம் பற்றியும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

மரியின் ஊழியர் சபை குழுமங்கள், உலகளாவிய உடன்பிறந்தநிலையின் அடையாளங்களாக, வரவேற்கும் மற்றும், ஒருங்கிணைக்கும் பள்ளிகளாக, திறந்தமனம் மற்றும் உறவுகளை வளர்க்கும் இடங்களாக அமையட்டும் என்று வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய சாட்சிய வாழ்வு, பிரிவினைகளையும், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற முற்சார்பெண்ணங்களையும், இன, கலாச்சார, மொழி ஆகிய பிரிவினைச் சுவர்களையும் விலக்கி நிற்க உதவுவதாக என்ற தன் ஆவலை தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2019, 15:35