செல்வம் நிறை நாடுகளில் வீணாக்கப்படும் உணவுப் பொருள்கள் செல்வம் நிறை நாடுகளில் வீணாக்கப்படும் உணவுப் பொருள்கள் 

உலக உணவு நாளையொட்டி திருத்தந்தையின் செய்தி

பட்டினியாலும், உணவுக்குறைபாட்டாலும் துன்புறும் நமது சகோதரர், சகோதரிகள் விடுக்கும் துயரம் நிறை விண்ணப்பத்தை, ஒவ்வோர் ஆண்டும், உலக உணவு நாளன்று, நாம் கேட்டு வருகிறோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் பட்டினியாலும், உணவுக்குறைபாட்டாலும் துன்புறும் நமது சகோதரர், சகோதரிகள் விடுக்கும் துயரம் நிறை விண்ணப்பத்தை, ஒவ்வோர் ஆண்டும், உலக உணவு நாளன்று, நாம் கேட்டு வருகிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக நிறுவனம் ஒன்றுக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

அக்டோபர் 16 இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட உலக உணவு நாளையொட்டி, உலக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், உணவை வீணாக்குவோரையும், உணவின்றி தவிப்போரையும் இணைத்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

பூஜ்ய பட்டினி உலகிற்காக...

FAO நிறுவனத்தின் தலைமை இயக்குனர், திருவாளர் Qu Dongyu அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியில், இவ்வுலக நாளுக்கென, "நமது செயல்பாடுகள் நமது எதிர்காலம். பூஜ்ய பட்டினி உலகிற்காக நலம் மிகுந்த உணவு முறைகள்" என்ற மையக்கருத்தை இந்நிறுவனம் தெரிவு செய்துள்ளதற்காக, திருத்தந்தை, தன் பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

நமக்கு வழங்கப்பட்டுள்ள இயற்கையின் கொடைகளுக்கு நன்றியுள்ளவர்களாக வாழ்வதன் வழியே, நமது உணவு முறைகளில் உள்ள தவறுகளை நாம் சரி செய்துகொள்ள முடியும் என்று தன் செய்தியில் எடுத்துரைக்கும் திருத்தந்தை, தகுதியான உணவு முறைகள் வழியே, உணவு பற்றாக்குறையையும் நம்மால் சீராக்க முடியும் என்று கூறியுள்ளார்.

உணவைக் குறித்து பெண்கள் தரும் அறிவு

குடும்பங்கள் மீது, குறிப்பாக, கிராமப்புறங்களில், வேளாண்மையில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள் மீது, FAO நிறுவனம் தனி கவனம் செலுத்துவது குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ள திருத்தந்தை, குடும்பங்களில், உணவைக் குறித்து, பெண்கள் வழியே நாம் பெறக்கூடிய அறிவுசார் விடயங்கள், படைப்பை மரியாதையுடன் நடத்துவதற்கு சொல்லித்தருகின்றன என்று கூறியுள்ளார்.

உணவு உற்பத்தி, மற்றும் விற்பனையை மையப்படுத்தியுள்ள வர்த்தக சக்திகள் அளவின்றி வளரும்போது, உணவு வீணாக்கப்படுத்தலும், உணவு பற்றாக்குறையும் வளர்கின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக உணவு நாளுக்கென விடுத்துள்ள செய்தியில் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2019, 14:58