மொசாம்பிக்கில் Scholas Occurrentes அமைப்பின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை மொசாம்பிக்கில் Scholas Occurrentes அமைப்பின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை 

மொசாம்பிக் Scholas Occurrentes அமைப்பினர் சந்திப்பு

புவனோஸ் அய்ரஸ் நகரில், தனது சிறுவயதில், வீட்டருகில் கிடந்த கந்தல் துணிகளால் பந்து செய்து கால்பந்து விளையாடிய அனுபவம் உட்பட, தனது சில இளவயது நிகழ்வுகளைச் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான்

செப்டம்பர் 05, இவ்வியாழன், இந்திய ஆசிரியர் தினம். “ஏறியவர் எங்கோ மேலிருக்க, ஏற்றிவிட்ட ஏணி மட்டும் அதேயிடத்தில் அடுத்தவரை ஏற்றிவிட காத்திருக்கிறது”. எம் அன்பு, வத்திக்கான் வானொலியின் நல்லாசிரியர் பெருமக்களே, மாணவர்களின் வளர்ச்சிக்காக நல்லுள்ளத்துடன் பாடுபடும் உங்கள் எல்லாருக்கும், இந்திய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். இவ்வியாழன், கொல்கத்தா புனித அன்னை தெரேசாவின் விழா. இன்று உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மப்புத்தோ திருப்பீடத் தூதரகத்தில் திருப்பலி நிறைவேற்றினார். அதில், செப்டம்பர் 4, இப்புதனன்று இறைபதம் சேர்ந்த, 96 வயது நிரம்பிய கர்தினால் Roger Etchegaray அவர்களையும், செப்டம்பர் 3, இச்செவ்வாயன்று இறைவனடி சேர்ந்த 100 வயது நிரம்பிய கர்தினால் Jose de Jesus Pimiento Rodriguez அவர்களையும் நினைவுகூர்ந்து, அவ்விருவரின் ஆன்மாக்கள் இறைவனில் இளைப்பாறுவதற்காகச் செபித்தார், திருத்தந்தை. இத்திருப்பலிக்குப் பின்னர், அத்தூதரகத்தில், மொசாம்பிக் நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்படும், Scholas Occurrentes அமைப்பின் பொறுப்பாளர்களும், அவற்றின் உறுப்பினர்கள் பலரும், அதன் இயக்குனர் Enrique Adolfo Palmeyro அவர்கள் தலைமையில் திருத்தந்தையை சந்தித்தனர். இந்த அமைப்பினர் ஆற்றிவரும் பணிகள், குறிப்பாக, விளையாட்டுத் துறையிலும், இளையோரை மனிதப்பண்பில் உருவாக்குவதிலும் ஆற்றிவரும் பணிகளை,  Palmeyro அவர்கள் திருத்தந்தையிடம் விளக்கினார். திருத்தந்தையும், புவனோஸ் அய்ரஸ் நகரில், தனது சிறுவயதில், வீட்டருகில் கிடந்த கந்தல் துணிகளால் பந்து செய்து கால்பந்து விளையாடிய அனுபவம் உட்பட, தனது சில இளவயது நிகழ்வுகளைச் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். அக்குழுவினரை ஆசீர்வதித்த திருத்தந்தை, அங்கிருந்து, 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, Ponta Vermelha அரசுத்தலைவர் மாளிகைக்கு காரில் சென்றார். இம்மாளிகை போர்த்துக்கீசிய காலனி ஆதிக்கத்தில், 1899ம் ஆண்டில் கட்டப்பட்டது.

மொசாம்பிக் நாடு, கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில், இடாய் மற்றும் கென்னத் புயல்களாலும் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நாட்டின் 2400 கிலோ மீட்டர் தூர கடற்கரை, உலகில் கடல்மட்டம் உயரும் ஆபத்தைக் கொண்டுள்ள பகுதிகளில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. உலக வங்கியின் கணிப்புப்படி, 1970களிலிருந்து அந்நாடு, 80 இலட்சம் ஹெக்டேர் காடுகளை இழந்துள்ளது. எனவே, இந்நாட்டில், சூழலியலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குத் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் திருத்தந்தை, இந்நாட்டிலும் அதற்கு அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2019, 15:59