திருத்தந்தை, செர்பிய அரசுத்தலைவர் Vučić சந்திப்பு திருத்தந்தை, செர்பிய அரசுத்தலைவர் Vučić சந்திப்பு  

திருத்தந்தை, செர்பிய அரசுத்தலைவர் Vučić சந்திப்பு

செர்பியா, ஐரோப்பாவோடு ஒன்றிணைவதற்கு, திருப்பீடமும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அளித்துவரும் ஆதரவுக்கு, செர்பிய அரசுத்தலைவர் நன்றி தெரிவித்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

செர்பியா குடியரசின் அரசுத்தலைவர் Aleksandar Vučić அவர்கள், செப்டம்பர் 12, இவ்வியாழன் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

அச்சந்திப்பிற்குப்பின், திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும், சந்தித்து கலந்துரையாடினார், செர்பிய அரசுத்தலைவர் Vučić.

இச்சந்திப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்ட, திருப்பீட தகவல் தொடர்பகம், திருப்பீடத்திற்கும், செர்பியாவுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டு கத்தோலிக்கர் செர்பியா முழுவதற்கும், குறிப்பாக, சமுதாயநலனுக்கு ஆற்றிவரும் பணிகள் போன்றவை பற்றிய பகிர்தல்கள் இடம்பெற்றன என்று கூறியுள்ளது.

மேலும், செர்பியாவின் நிலைமை, ஐரோப்பிய ஒன்றிணைப்பு நடவடிக்கைகள், உலகளாவிய அமைதிப் பணியில், மக்களுக்கிடையே ஒத்துழைப்பை ஊக்குவித்தல், ஒப்புரவுப் பாதையில் மதங்கள் ஆற்றவேண்டிய பணிகள் போன்ற விவகாரங்கள் பற்றிய கலந்துரையாடல்களும் இச்சந்திப்புகளில் இடம்பெற்றன.

மத்திய மற்றும், தென்கிழக்கு ஐரோப்பா சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது செர்பியா. இந்நாட்டில் 84.5 விழுக்காட்டினர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2019, 16:04