திருத்தந்தையின் அக்டோபர் செபக் கருத்து திருத்தந்தையின் அக்டோபர் செபக் கருத்து 

கத்தோலிக்கரில் திருத்தூதுப்பணி விழிப்புணர்வு ஏற்பட...

தற்போது, ஆப்ரிக்கா, ஆசியா, ஓசியானியாத் தீவுகள் மற்றும், அமெரிக்காவில், 1,109 இடங்களில், திருஅவை இன்னும் பிறக்க வேண்டியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கர், திருத்தூதுப்பணி பற்றிய விழிப்புணர்வை மீண்டும் தூண்ட வேண்டும் மற்றும், இயேசுவையும், அவரின் மரணத்தையும், உயிர்ப்பையும் அறிவிக்கும் சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் மாத செபக் கருத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

பிறக்கவிருக்கும் அக்டோபர் மாதம், சிறப்பு மறைபரப்பு மாதமாகச் சிறப்பிக்கப்படுவதை குறிப்பிட்டு, இம்மாதச் செபக் கருத்து பற்றி, செப்டம்பர் 30, இத்திங்களன்று காணொளியில் பேசியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் திருத்தூதுப்பணியில் புதிய உந்துதல் ஏற்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்கள் அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும், திருஅவையின் வாழ்விலும், மேய்ப்புப்பணி நடவடிக்கைகளிலும் திருத்தூதுப் பணி, புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடன் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என திருத்தந்தை, அச்செய்தியில் கூறியுள்ளார்.

தூய ஆவியாரின் உயிராற்றல், திருஅவையில் புதிய திருத்தூதுப்பணி வசந்தத்தைத் தூண்டும்படியாக... என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அக்டோபர் மாத செபக் கருத்தாகும்.

கத்தோலிக்கத் திருஅவையின் திருத்தூதுப் பணி பற்றி அறிவித்துள்ள பாப்பிறை மறைப்பணி கழகங்கள் அமைப்பு, தற்போது, ஆப்ரிக்கா, ஆசியா, ஓசியானியாத் தீவுகள் மற்றும், அமெரிக்காவில், 1,109 இடங்களில், திருஅவை இன்னும் பிறக்க வேண்டியுள்ளது மற்றும், திருத்தூதுப்பணித் தளங்கள் என அழைக்கப்படும் இவற்றிற்கு சிறப்பு கவனம் தேவைப்படுகின்றது என்று கூறியுள்ளது.

உலகளாவிய திருஅவையில், 37 விழுக்காட்டுப் பகுதி திருத்தூதுப்பணித் தளங்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 September 2019, 15:49