கர்தினால்களுடன் திருத்தந்தை கர்தினால்களுடன் திருத்தந்தை 

அக்டோபர் 5, மாலை 4 மணிக்கு புதிய கர்தினால்கள்...

அமேசான் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம், வத்திக்கானில், அக்டோபர் 6ம் தேதி தொடங்கி, 27ம் தேதி வரை நடைபெறும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“அன்பின் உண்மையான முகம் இரக்கம். அதைச் செயல்படுத்துகையில், நாம் இயேசுவின் சீடர்களாக மாறுகிறோம் மற்றும், அது இறைத்தந்தையின் இதயத்தையே காட்டுகின்றது” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 27, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்துள்ளார்.

மேலும், அக்டோபர் 5, சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், புதிய கர்தினால்களுக்கு, தொப்பியும், மோதிரமும், அவர்களுக்குரிய சிறப்பு பதவியும் வழங்கப்படும் திருவழிபாட்டை நிறைவேற்றுவார்.

அக்டோபர் 6, ஞாயிறு காலை பத்து மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், அமேசான் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தைத் துவங்கி வைக்கும் திருப்பலியை நிறைவேற்றுவார்.

அமேசான் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம், அக்டோபர் 27ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெறும். இதில், கலந்துகொள்ளும் 185 மாமன்ற பிரதிநிதிகளில், பெரும்பாலானவர்கள் ஆயர்கள் மற்றும், அருள்பணியாளர்கள். இவர்கள் அமேசான் பருவமழைக் காடுகளைக் கொண்ட, பிரேசில், ஈக்குவதோர், வெனெசுவேலா, சுரினாம், பெரு, கொலம்பியா, பொலிவியா, கயானா மற்றும் ப்ரெஞ்ச் கயானா நாடுகளைச் சேர்ந்தவர்கள். 

ஐ.நா. நிறுவனத்தின் முன்னாள் பொதுச் செயலர் பான் கி மூன் அவர்களும் இம்மான்றத்தில் கலந்துகொள்வார். ஐ.நா. நிறுவன பொதுச் செயலர் ஒருவர், உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்குகொள்வது இதுவே முதன்முறையாகும்.

இதில் கலந்துகொள்ளும் 25 வல்லுனர்களில், 20 பேர் அருள்பணியாளர்கள், இருவர் அருள்சகோதரிகள், மூன்று பொதுநிலையினரில் ஒருவர், ஆண் மற்றும், இருவர் பெண்கள். இவர்களில் பலர் இறையியலாளர்கள், அமேசான் பகுதியில் மறைப்பணியாற்றுகின்றவர்கள் மற்றும், படைப்பைப் பாதுகாப்பதில் கத்தோலிக்க அணுகுமுறையைக் கடைப்பிடிப்பவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2019, 15:05