ஆபிரகாம் அமைப்பு ஆபிரகாம் அமைப்பு  

நற்செய்தி அறிவிப்பாளர்களாக மாற, கடவுள் மீது நம்பிக்கை

ஆபிரகாம் அமைப்பு துவங்கப்பட்டதன் 30ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் 700 பிரதிநிதிகளை, வத்திக்கான் புனித திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா– வத்திக்கான் செய்திகள்

ஆபிரகாம் அமைப்பு என்ற ஓர் இத்தாலிய அமைப்பு துவங்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்த அமைப்பின் 700 பிரதிநிதிகளை, வத்திக்கான் புனித திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில், செப்டம்பர் 14, இச்சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் இயேசுவைப் பின்செல்வதற்குப் புதிய பாதைகளைத் திறந்துவிடுவதில் நம்மை வியப்படையச் செய்வதை அவர் ஒருபோதும் நிறுத்திக்கொள்வதில்லை என்றுரைத்த திருத்தந்தை, இந்த அமைப்பின், ஆபிரகாம் என்ற சவால் நிறைந்த பெயரே, நற்செய்தி அறிவிப்புப் பாதையில் செல்வதற்குத் தூண்டுகின்றது என்று கூறினார்.

உங்கள் வாழ்வில் ஆண்டவர் எப்படி மற்றும், எந்தச் சூழல்களில் பிரசன்னமாக இருந்தாலும், நாம் ஒருவர் ஒருவரைச் சந்திக்கும் இடங்கள் மற்றும், நேரங்களை அவர் ஒருவர் மட்டுமே அறிந்திருக்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, அவரின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டியது முக்கியம் என்பதையும் வலியுறுத்தினார். 

உங்கள் வாழ்வில், உண்மையான அமைதியை, எவ்வாறு எப்போதும் கண்டுகொள்வது என்பது பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென விரும்புகிறேன், இதுவே, கடவுள் பேசுவதைக் கேட்பதற்குள்ள திறமையின் இரகசியம் என்றும், திருத்தந்தை கூறினார்.

ஆபிரகாமின் விசுவாசம், தனது சொந்த இடத்தையும், வீட்டையும்விட்டு, அறியாத இடத்திற்கு இட்டுச்சென்றது என்றும், நற்செய்தி அறிவிப்பாளர்களாக மாற, கடவுள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் மற்றும், தனது இடத்தைவிட்டு வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என்றும், ஆபிரகாம் அமைப்பினரிடம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஆபிரகாம் அமைப்பு, இறைத்தந்தையைப் புகழும் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு, 1989ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2019, 15:23