ஐ.நா. உலக உச்சி மாநாட்டிற்கு காணொளிச் செய்தி ஐ.நா. உலக உச்சி மாநாட்டிற்கு காணொளிச் செய்தி  

காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு, நேர்மை, பொறுப்பு, துணிவு...

வருங்காலத் தலைமுறைகளுக்கு சிறந்ததோர் வாழ்வை உறுதிசெய்வதற்கும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை வளர்ப்பதற்கும், உலகத் தலைவர்கள் தங்களை அர்ப்பணிக்குமாறு அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் வானொலி

“காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும், காலநிலை மாற்றத்தை ஒருநிலைக்குக் கொண்டுவருதல்” என்ற தலைப்பில், நியு யார்க் ஐ.நா. நிறுவன தலைமையகத்தில், செப்டம்பர் 23, இத்திங்களன்று துவங்கியுள்ள ஐ.நா. உலக உச்சி மாநாட்டிற்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அறுபதுக்கும் அதிகமான உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும் இம்மாநாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், இந்த நம் காலத்தில் அனைவரையும் மிகவும் கவலைப்பட வைக்கின்ற, கடுமையான பிரச்சனைகளில் ஒன்றான, காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு, நேர்மை, கடமையுணர்வு, துணிவு ஆகிய மூன்று மாபெரும் மனிதப் பண்புகள் அவசியம் என்று கூறியுள்ளார்.

காலநிலை மாற்றத்தைத் தடுப்பது குறித்த, பாரிஸ் ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் இசைவு தெரிவித்து நான்கு ஆண்டுகள் ஆகியும், அந்த ஒப்பந்தக் கூறுகள் எட்டப்படுவதற்கு இன்னும் வெகு தொலைவு உள்ளது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

வருங்காலத் தலைமுறைகளுக்கு சிறந்ததோர் வாழ்வை உறுதிசெய்வதற்கும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை வளர்ப்பதற்கும், நாடுகளின் தலைவர்கள்  தங்களை உறுதியுடன் அர்ப்பணிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாறு தலைவர்கள் தங்களை அர்ப்பணிக்கையில், சூழலியல் சீரழிவு, நன்னெறி மற்றும், சமுதாயச் சீரழிவோடு தொடர்புடையது என்பதை ஏற்பது முக்கியம் என்று கூறியுள்ள திருத்தந்தை, நம் நுகர்வுகள் மற்றும் உற்பத்திப் பொருள்கள் பற்றி சிந்தித்து, அவை முன்வைக்கும் கலாச்சார சவாலை துணிவுடன் எதிர்கொள்ளுமாறு கூறியுள்ளார்.  

இவை மனித மாண்புடன் ஒத்திணங்கிச் செல்வதாய் அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவருக்கும், வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2019, 14:45