பத்திரிகையாளர்களுடன் விமானத்தில் திருத்தந்தை பத்திரிகையாளர்களுடன் விமானத்தில் திருத்தந்தை 

பஹாமாசில் கடும்புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக செபம்

பஹாமாசில் Dorian கடும்புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபித்தார். இப்புயல், இந்நாட்டு வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய தேசியப் பேரிடர்களில் ஒன்று என்று பஹாமாஸ் பிரதமர் Hubert Minnis அவர்கள் கூறியுள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 04, இப்புதன் காலையில், மொசாம்பிக், மடகாஸ்கர், மற்றும், மொரீஷியஸ் நாடுகளுக்கென, தனது 31வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பஹாமாசில் Dorian கடும்புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகச் செபித்தார்.

மொசாம்பிக் தலைநகர் மப்புத்தோ நகருக்கு, A330 ஆல் இத்தாலியா விமானத்தில் பயணம் செய்த திருத்தந்தை, தன்னுடன் பயணம் மேற்கொள்ளும், பன்னாட்டு செய்தியாளர்களை வாழ்த்தியதுடன், தற்போது பஹாமாசைத் தாக்கிவரும் Dorian கடும்புயல் பற்றிக் குறிப்பிட்டு, அதில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நினைத்துச் செபித்தார். இப்புயலில், ஏறத்தாழ 13 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

விமானத்தில் செய்தியாளர் சந்திப்பு

இந்த நீண்ட விமானப் பயணம் நிறையப் பலன்களைத் தரும் என நம்புவோம் என்றுரைத்த திருத்தந்தை, தனது எண்பதாவது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் EFE எனப்படும் இஸ்பானிய செய்தி நிறுவனத்திற்குத் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதோடு, இத்திருத்தூதுப் பயணத்தை முடித்து திரும்பும் விமானப் பயணத்தில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில், இந்நிறுவனத்தின் செய்தியாளர்கள் கூடுதலாகக் கேள்விகள் கேட்பதற்கு வாய்ப்புப் பெறுவார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.

மேலும், 153 திருத்தூதுப் பயணங்களில் பணியாற்றிய, "Televisa" ஊடகத்திற்கு, வத்திக்கான் பற்றிய செய்திகள் வழங்கும் குழுவின் தலைவர் Valentina Alazraki அவர்கள், இப்பயணத்தில் கலந்துகொள்ளாதது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, பல்வேறு வகைகளில் உரிமைகள் மீறப்பட்ட பெண்கள் பற்றி வலந்தீனா அவர்கள் எழுதிய நூலையும் சுட்டிக்காட்டினார் என்று திருப்பீட தகவல் தொடர்பாளர் Matteo Bruni அவர்கள் கூறினார். தனது 50 வது பிறந்த நாளைச் சிறப்பித்த, இஸ்பானிய செய்தியாளர் கிறிஸ்டினாவுக்கும் திருத்தந்தை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

திருத்தந்தையின் மொசாம்பிக், மடகாஸ்கர், மற்றும், மொரீஷியஸ் நாடுகளுக்கான, திருத்தூதுப்பயணம், ஆப்ரிக்காவிற்கு அவர் மேற்கொள்ளும் நான்காவது பயணமாகவும், 31வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணமாகவும் அமைகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2019, 15:43