மடகாஸ்கர் நாட்டு அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், மற்றும், குருத்துவ பயிற்சி மாணவர்களுடன் திருத்தந்தை மடகாஸ்கர் நாட்டு அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், மற்றும், குருத்துவ பயிற்சி மாணவர்களுடன் திருத்தந்தை 

கடவுளின் உயிருள்ள பிரசன்னத்தின் அடையாளங்களாக..

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Antananarivo புனித மிக்கேல் கல்லூரியில், மடகாஸ்கர் நாட்டு அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், மற்றும், குருத்துவ பயிற்சி மாணவர்களைச் சந்தித்து உரையாற்றினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உங்களின் அமோக வரவேற்பிற்கு நன்றி. உடல்நலம், பல ஆண்டுகளாக உழைத்து களைத்த சுமை, அல்லது சில வசதிகள் இல்லாமையால், இந்நிகழ்வில் கலந்துகொள்ள இயலாமல் இருக்கின்ற அருள்பணியாளர்கள், துறவியர் ஆகியோரை முதலில் நினைக்கின்றேன். அவர்கள் எல்லாருக்காகவும் சிறிதுநேரம் அமைதியாகச் செபிப்போம். இவ்வாறு சொல்லி, தனது உரையைத் தொடங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

இறைமக்களுடனே இணைந்திருங்கள்.

இயேசு பேருவகையடைந்து, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” என்றார் (லூக்.10,21).

அன்பு அருள்பணியாளர்களே, துறவியரே, குருத்துவ மாணவர்களே, மடகாஸ்கரில் எனது திருத்தூதுப்பயணத்தை நிறைவுறச்செய்யும் இந்நேரத்தில், லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ள இயேசுவின் சொற்களே எனது இதயத்தில் ஒலிக்கின்றன. உங்களின் சாட்சியங்களைக் கேட்டபோது எனது மகிழ்ச்சி உறுதிப்படுகின்றது. பிரச்சனைகளாக நீங்கள் காணும் பொருள்களைக்கூட, வாழ்கின்ற திருஅவையின் அடையாளங்களாகப் பார்க்கின்றீர்கள். ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் பிரசன்னத்தின் அடையாளமாக வாழவும் முயற்சி எடுக்கின்றீர்கள். சகோதரி சூசான்னா தன் பகிர்வில் கூறியது போல, ஒவ்வொரு நாளும் மக்களுக்கு நெருக்கமாக இருக்க முயற்சிக்கின்றீர்கள். மக்களிடமிருந்து விலகிவிடாமல், எப்போதும், இறைமக்களுடனே இணைந்திருங்கள்.

மறைப்பணி மரபு

கடந்த காலத்தில் இயேசு கிறிஸ்துவுக்காக தங்கள் வாழ்வையளிக்க அஞ்சாமல் இருந்தவர்களை நன்றியோடு நினைக்கின்றேன். துறவற மறைப்பணியாளர்கள் மட்டுமன்றி, பொதுநிலையினரும் மடகாஸ்கரில் நற்செய்தியைக் கொணர்ந்தார்கள். அடக்குமுறை நடந்த துன்பம்நிறை காலங்களில் பல மறைப்பணியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறிய சூழலில், பொதுநிலையினரே விசுவாசச் சுடரைக் காத்தவர்கள். இவர்கள் விட்டுச்சென்ற மரபை நீங்களும் பின்பற்றி, மற்றவருக்கும் அதை விட்டுச் செல்லுங்கள்.

தலத்திருஅவையின் சவால்

உங்களை, இயேசு நற்செய்தி பணிக்கு அனுப்பிய 72 சீடர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். தங்களின் பைகளை நிறைத்துக்கொண்டு வந்த அவர்கள், தாங்கள் கண்டதையும், கேட்டதையும் பகிர்ந்துகொண்டார்கள். நீங்களும், இந்த தீவின் பல்வேறு பகுதிகளுக்குத் துணிச்சலுடன் சென்று, நற்செய்தியின் ஒளியைக் கொணர்வதில் சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள். பலர், வாழ்வுக்கும், மேய்ப்புப்பணிக்கும் அத்தியாவசிமாகத் தேவைப்படும், தண்ணீர், மின்சாரம், சாலைகள், தொடர்பு சாதனங்கள், பணம் ஆகியவை இன்றி, கடினமான சூழல்களில் வாழ்கின்றீர்கள். மக்கள் மத்தியிலே நீங்கள் இருப்பதற்கும், அடிக்கடி இன்னல் நிறைந்த சூழல்களை எதிர்கொண்டாலும், கடினமாக உழைப்பதற்கும் நன்றி.

நறுமணமிக்க நற்செய்தி ஆர்வம்

உங்களின் நற்செய்தி அறிவிப்பு ஆர்வத்தை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள். மறைப்பணிக்குச் செல்கையில் கடவுளைப் புகழ்வதை ஒருபோதும் நிறுத்தி விடாதீர்கள். இப்பணியில், தோல்விகள் மற்றும், வெற்றிகள் பற்றி நாம் அடிக்கடி பேசும் சோதனைக்கும், அதேநேரம், நமது சொந்த வரலாற்றை மறுக்கும் நிலைக்கும் உட்படுகிறோம். உங்கள் மக்களின் வரலாறு மகிமையானது. ஏனெனில், அவர்களின் தியாகம், நம்பிக்கை, அன்றாட போராட்டம், வேலையில் பிரமாணிக்கம் போன்றவற்றைக் கொண்டது வரலாறு.

இயேசுவின் பெயரால் ஆற்றப்டும் மறைப்பணியில் கிடைக்கும் மகிழ்வை மற்றவரோடு பகிர்ந்துகொள்ளுங்கள். வாழ்வின் போராட்டங்களை செபத்தாலும், ஆண்டவரைப் புகழ்வதாலும் வெல்லுங்கள். இறையழைத்தலில் வளர்ந்துவருகையில், நடக்கும் உள்மனப் போராட்டங்களை, நற்செய்திகூறும் படிப்பினைகள் மற்றும், ஏழ்மைப் பண்பால் வெல்லுங்கள். உங்கள் மறைப்பணி மகிழ்வு, திருடப்பட்டுவிடாமல் இருப்பதில் கவனம் செலுத்துங்கள். ஆண்டவரின் உயிருள்ள பிரசன்னத்தின் சாட்சிகளாக என்றும் திகழுங்கள். எனக்காகச் செபிக்கவும் மறக்க வேண்டாம்.

இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  மடகாஸ்கர் நாட்டு அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும், குருத்துவ பயிற்சி மாணவர்களுக்கு உரையாற்றினார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2019, 16:32