மனித வர்த்தகத்திற்கெதிராய் செயல்படும் Talitha Kum குழுவினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் மனித வர்த்தகத்திற்கெதிராய் செயல்படும் Talitha Kum குழுவினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

மனித வர்த்தகத்திற்கெதிரான நடவடிக்கையில் உறுப்பினர்கள் அதிகரிக்க

பெண் துறவு சபைகளின் உலகளாவிய கூட்டமைப்பு (UISG), ஆண் துறவு சபைகளின் கூட்டமைப்பின் (USG) ஒத்துழைப்புடன், 2001ம் ஆண்டிலிருந்து, மனித வர்த்தகத்திற்கெதிராய், Talitha Kum என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

மனித வர்த்தகத்திற்கெதிரான, மிகவும் சிக்கலான மற்றும், கடினமான பணியை ஆற்றிவரும் அருள்சகோதரிகளுக்கு, தனது வாழ்த்தையும், நன்றியையும் தெரிவித்த அதேவேளை, அச்சகோதரிகள், அப்பணியைத் தொடர்ந்து ஆற்றுமாறு ஊக்கப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக அளவில், மனித வர்த்தகத்திற்கெதிராய் செயல்படுவதற்கென Talitha Kum என்ற திட்டம் துவங்கப்பட்டதன் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி, உரோம் நகரில் நடைபெறும் பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும் ஏறத்தாழ 120 பிரதிநிதிகள்,  செப்டம்பர் 26, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து ஆசீர் பெற்றனர்.

இந்த மறைப்பணியில் இதுவரை இணைந்து செயல்படாத ஏனைய இருபால் துறவு சபையினரும், தங்களின் உறுப்பினர்களையும், வளங்களையும் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திட்டத்தின் நடவடிக்கைகளுக்கு கிடைக்கும் தாராளமிக்க மற்றும், தன்னலமற்ற உதவிகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

மேய்ப்புப்பணி பொறுப்பு, தலத்திருஅவைகள் மற்றும், தல ஆயர்களிடம் உள்ளது என்பதால், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்கின்ற இருபால் துறவியர், தங்களின் தலத்திருஅவைகளோடு இணைந்து பணியாற்றுமாறும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைத்துக் கண்டங்களிலும், 90க்கும் அதிகமான நாடுகளில், 52 அமைப்புகளாக, இரண்டாயிரம் பணியாளர்களைக் கொண்டு, மனிதவர்த்தகத்திற்குப் பலியாகிய 15 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்களுக்கும், தடுத்து நிறுத்தல் மற்றும், விழிப்புணர்வு நடவடிக்கைகள் வழியாக, இரண்டு இலட்சத்திற்கு அதிகமான பெண்களுக்கும், Talitha Kum திட்டத்தின்கீழ், அருள்சகோதரிகள் உதவியுள்ளதையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.   

இந்த திட்டத்தின் பொதுப் பேரவை உரோம் நகரில், செப்டம்பர் 21, கடந்த சனிக்கிழமையன்று துவங்கியது. செப்டம்பர் 27, இவ்வெள்ளியன்று நிறைவடையும் இப்பேரவையில், 48 நாடுகளிலிருந்து 86 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். அண்மை ஆண்டுகளில் இப்பணியில் சிறப்பாகப் பணியாற்றிய பத்து அருள்சகோதரிகளுக்கு, இப்பேரவையில் விருதுகளும் வழங்கப்படுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2019, 15:14