கர்தினால் Roger Etchegaray கர்தினால் Roger Etchegaray  

கர்தினால் Etchegaray, உரையாடல் மற்றும் அமைதியின் மனிதர்

இறைவனடி சேர்ந்த, 96 வயது நிரம்பிய பிரெஞ்ச் கர்தினால் Etchegaray, 100 வயதைக் கடந்த கொலம்பியா நாட்டு கர்தினால் Pimiento, இவ்விருவரின் ஆன்மாக்கள் நிறைசாந்தியடைய திருத்தந்தை செபம்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

திருப்பீட நீதி மற்றும், அமைதி அவை, திருப்பீட “கோர் ஊனும்” அவை, இவ்விரண்டின் முன்னாள் தலைவர் கர்தினால் Roger Etchegaray அவர்கள், இறைபதம் எய்தியதை முன்னிட்டு, செபங்கள் நிறைந்த தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மொசாம்பிக் நாட்டில் திருத்தூதுப்பயணத்தை மேற்கொண்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரான்ஸ் நாட்டின் Bayonne, Lescar மற்றும், Oloron மறைமாவட்ட ஆயர் Marc Aillet அவர்களுக்கு அனுப்பியுள்ள இரங்கல் தந்திச் செய்தியில், பிரான்ஸ் திருஅவையிலும், உலகளாவியத் திருஅவையிலும், கர்தினால் எச்சகராய் அவர்கள் ஆற்றியுள்ள பணிகள், பெரிதும் பாராட்டுக்குரியன என்று குறிப்பிட்டுள்ளார்.   

திருப்பீட நீதி மற்றும், அமைதி அவை, திருப்பீட “கோர் ஊனும்” அவை ஆகியவற்றின் தலைவர், கர்தினால்கள் அவையின் உதவித் தலைவர் போன்ற முக்கிய பணிகளை ஆற்றியுள்ள கர்தினால் எச்சகராய் அவர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக, இன்னல்கள் நிறைந்த இடங்களில், திருஅவை வாழ்வில் ஆற்றியுள்ள பணிகள் மிகவும் சிறப்பானவை என்று குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை.

கர்தினால் எச்சகராய் அவர்கள், உரையாடல் மற்றும் அமைதியின் மனிதர் என்றும், ஆழந்த விசுவாச மனிதாரன இவர், மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதில் எப்போதும்  விழிப்புடன் இருந்தவர் என்றும், திருத்தந்தை புகழ்ந்துள்ளார்.

பிரான்சின் Bayonne மறைமாவட்டத்தைச் சார்ந்த கர்தினால் எச்சகராய் அவர்கள், செப்டம்பர் 4, இப்புதனன்று, Cambo-les-Bainsல், தனது 96வது வயதில் இறைபதம் அடைந்தார்.

கர்தினால் Pimiento மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்

மேலும், செப்டம்பர் 3, இச்செவ்வாயன்று இறைவனடி சேர்ந்த, கொலம்பியா நாட்டு கர்தினால் Jose de Jesus Pimiento Rodriguez அவர்களின் ஆன்மா நிறைசாந்தி பெற தான் செபிப்பதாகத் தெரிவிக்கும் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Manizales நகரின் முன்னாள் பேராயரான ஓய்வுபெற்ற கர்தினால் Pimiento அவர்கள், இவ்வாண்டு பிப்ரவரியில், தனது நூறாவது வயதைச் சிறப்பித்தார். கொலம்பியாவில் அமைதி நிலவ, கர்தினால் Pimiento அவர்கள் ஆற்றியுள்ள பணி குறிப்பிடும்படியானது என்று, அந்நாட்டு ஆயர்கள் தங்களின் இரங்கல் செய்தியில் கூறியுள்ளனர்.

இவ்விரு கர்தினால்களின் மறைவோடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 213 ஆகவும், அவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய எண்பது வயதுக்குட்பட்டவர்கள் 118 ஆகவும் மாறியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2019, 16:32