Vatican News
மடகாஸ்கரில் ஆயர்களுடன் திருத்தந்தை மடகாஸ்கரில் ஆயர்களுடன் திருத்தந்தை  (© Vatican Media)

ஆயர்கள், விசுவாசம் மற்றும், நம்பிக்கை விதைகளைப் விதைப்பவர்கள்

மடகாஸ்கர் நாட்டு தலைநகர் அந்தானனரிவோவிலுள்ள, Andohalo பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு ஆயர்களுக்கு ஆற்றிய உரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

என் அன்பு சகோதர ஆயர்களே, “அமைதி மற்றும் நம்பிக்கையை விதைப்பவர்” என்பது, இந்த எனது திருத்தூதுப்பயணத்திற்குத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறையாட்சிப்பணியை பிரதிபலிக்கின்றது. உண்மையில் நாம் விதைப்பவர்கள். பொதுவாக விதைப்பவர்கள், நம்பிக்கையில்தான் விதைக்கிறார்கள்.  விதைகள் முளைத்து, வளர்ந்து ஏராளமான தானியங்களைத் தருவதற்கு, தங்கள் சொந்த முயற்சி மற்றும், அர்ப்பணத்தோடு,  வேறுபல கூறுகளும் அதற்கு உதவுகின்றன என்பதை, விதைப்பவர் விதைக்கையிலேயே அறிந்திருக்கின்றார். அவர் சோர்வடைந்தாலும், விதைப்பதைக் கைவிடுவதில்லை. அதிலுள்ள வரையறைகளை அவர் அறிந்துள்ளார். நம்பிக்கையோடு காத்திருக்கிறார் அவர். அதேநேரம், தனது பராமரிப்பிலுள்ள வயலைக் கைவிட அல்லது, அதை அடுத்தவரிடம் அளிப்பதற்கு சோதனை வந்தாலும், அந்த வயலை அன்புகூர்வதை அவர் ஒருபோதும் நிறுத்துவதில்லை. அவர், தான் தொடும் நிலம் சிறந்த பலன்களைத் தருவதற்குத் தயாராகுகின்றது என்பதை அறிந்திருக்கிறார். ஆயர்களாகிய நாமும், விதைப்பவர் போன்று, இப்பூமியில், விசுவாசம் மற்றும், நம்பிக்கை விதைகளைப் பரப்ப வேண்டும். அவ்வாறு ஆற்றுகையில், விதையைச் சேதப்படுத்துவது அல்லது தடைசெய்வதை நம்மால் தெளிவாக அறிந்து, உணர முடியும்.

மக்களின் மாண்பைப் பாதுகாக்கும் கடமை

ஆயர்களாகிய நீங்கள் அக்கறைகொண்டுள்ள பல காரியங்களில் ஒன்றாக, ஒருமைப்பாட்டிலும், வளமையிலும் நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் முயற்சி செய்கையில், உங்கள் சகோதரர், சகோதரிகளின் மாண்பைப் பாதுகாக்கும் உங்களின் பொறுப்புணர்வில் விழிப்பாய் இருக்கின்றீர்கள் என்பதை அறிவேன். மத வேறுபாடின்றி, சமுதாயத்தின் அனைத்து குடிமக்களும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு, ஒரு மேய்ப்பரால் புறமுதுகு காட்ட இயலாது. இந்த சவால்களை எதிர்கொள்வதில், திருஅவைக்கும், அரசுக்கும் இடையே தேவைப்படும், விவேகம், மற்றும், தனித்தியங்கும் ஒத்துழைப்பு, ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. திருஅவைகளுக்கு தூய ஆவியார் சொல்வதற்கு எப்போதும் கவனமுடன் செவிசாய்த்திருங்கள்.

மேய்ப்புப்பணியின் கடமை

மனிதரைப் பாதுகாப்பது, மேய்ப்புப்பணியில் மற்றுமோர் கடமையாக உள்ளது. ஏழைகளே, நற்செய்தியைப் பேறுவதில் சலுகை பெற்றவர்கள். எனவே, ஏழைகள், சிறியோர், விளிம்புநிலையில் உள்ளோர், சிறார், உரிமை மீறல்களுக்குப் பலியாகுவோரைப் பாதுகாப்பதற்கு நாம், முக்கிய கடமையைக் கொண்டுள்ளோம். இந்த பெரிய தளத்தில் ஆற்றப்படும் பணிக்கு, கிறிஸ்தவப் பொறுமையோடு காத்திருத்தல் தேவை. ஒரு மேய்ப்பர், ஒவ்வொன்றையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. புதிய முயற்சிகளுக்கு அவர் நிறைய இடமளிக்க வேண்டும். காரியங்கள், அவற்றின் நல்லதொரு காலத்தில், பக்குவம் அடைய வழிவிட வேண்டும்.

மேய்ப்புப்பணியில் தேர்ந்துதெளிதல்

ஆயர்களாகிய நீங்கள் உங்கள் பணிகளில் எதிர்கொள்ளும் மகிழ்வுகள் மற்றும், சவால்களில், அருள்பணியாளர்கள், உங்களை தந்தையராகப் பார்க்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். அறுவடை காலம்வரை பொறுமையோடு காத்திருக்கும் விவசாயிகள், அறுவடை காலத்தில் தனது பணியாளர்களின் தன்மையைச் சீர்தூக்கிப் பார்க்கிறார். நீங்களும், மேய்ப்பர்கள் என்ற முறையில், துறவற மற்றும், அருள்பணியாளர்க்குரிய இறையழைத்தல்களைத் தேர்ந்துதெளிவது, உங்களின் முக்கிய பணியாக உள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியிலுள்ள திருஅவைகளோடு கொடைகளையும், ஒத்துழைப்பையும் பகிர்ந்துகொள்வதில், உடன்பிறந்த உணர்வுகொண்ட உரையாடல் தேவைப்படுகின்றது. கிறிஸ்தவ உணர்வில், சூழலியலைப் பாதுகாக்கவும் வேண்டும். அன்னை மரியா, அருளாளர் Victoire Rasoamanarivo ஆகிய இரு பெண்களும் இப்பேராலயத்தைப் பாதுகாக்கின்றனர். இவர்களின் உதவியை உங்களுக்காக மன்றாடுகிறேன். எனக்காகச் செபிக்க மறவாதீர்கள்.

இவ்வாறு, அந்தானனரிவோவிலுள்ள, Andohalo பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு ஆயர்களுக்கு உரையாற்றினார்.  

07 September 2019, 15:08