மடகாஸ்கரில் திருத்தூதுப் பயண தயாரிப்பு மடகாஸ்கரில் திருத்தூதுப் பயண தயாரிப்பு  

மடகாஸ்கர், மொரீஷியஸ் திருத்தூதுப் பயணம், ஒரு முன்தூது

மடகாஸ்கரின் இயற்கையின் அருங்கொடைகளை, ஒரு பல்லுயிர்ப் பெட்டகம் என்கின்றனர். உலகில் வேறு எங்கும் காண இயலாத 90 விழுக்காட்டிற்கும் அதிகமான வன உயிரினங்களையும், விலங்குகளையும் இத்தீவில்தான் காண முடியும்.

மேரி தெரேசா - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 4, இப்புதன் உரோம் நேரம் காலை 7.20 மணிக்கு, வத்திக்கானிலிருந்து தனது 31வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தை தொடங்குகிறார். செப்டம்பர் 10ம் தேதி வரை திருத்தந்தை மேற்கொள்ளும், இந்த திருத்தூதுப்பயணத்தில், மொசாம்பிக், மடகாஸ்கர், மொரீஷியஸ் ஆகிய மூன்று இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்குச் செல்கிறார். 54 நாடுகளையும், உலக மக்கள் தொகையில் 17 விழுக்காடு, அதாவது 130 கோடி மக்களையும் கொண்டுள்ள ஆப்ரிக்க கண்டத்தில், மிக வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள இரு நாடுகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்லத் தீர்மானித்திருப்பது, அந்நாடுகளிலுள்ள கத்தோலிக்கத் திருஅவையோடு தனது தோழமையுணர்வை வெளிப்படுத்துவதற்காகவே. மேலும், இந்நாடுகள், ஏழ்மை, போர்கள் மற்றும் இயற்கைப் பேரிடர்களாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று நாடுகளிலும் தலைநகரங்களில் மட்டுமே திருத்தூதுப்பயண நிகழ்வுகளை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ். நம்பிக்கை, அமைதி மற்றும் ஒப்புரவின் திருப்பயணியாக மொசாம்பிக் நாடு செல்லும் திருத்தந்தை, மொசாம்பிக் தலைநகர் மப்புத்தோவிலிருந்து, செப்டம்பர் 6, வருகிற வெள்ளியன்று மடகாஸ்கர் நாட்டின் தலைநகர் Antananarivo செல்வார். மடகாஸ்கரில் திருத்தந்தை செலவழிக்கும் 86 மணி நேரங்களில், இரு மறையுரைகள் உட்பட, ஏழு உரைகள் ஆற்றுவார்.

மடகாஸ்கர் தீவு நாடு

இந்தியப் பெருங்கடலிலுள்ள மடகாஸ்கர், முன்னாளில் மலகாசி (Malagasy) குடியரசு என அழைக்கப்பட்டது. மடகாஸ்கர் என்ற பெயர், மத்திய காலத்தில் அங்கு குடியேறிய ஐரோப்பியர்களால் வழங்கப்பட்ட பெயராகும். மடகாஸ்கர், உலகிலேயே நான்காவது பெரிய தீவாகவும், 47வது பெரிய நாடாகவும் அமைந்துள்ளது. இத்தீவு பற்றி, 13ம் நூற்றாண்டில்தான் முதன்முதலில் எழுதப்பட்டுள்ளது. போர்த்துக்கீசிய நாடுகாண் பயணி தியெகோ தியாஸ் என்பவர், 1500ம் ஆண்டில், இந்தியாவுக்குச் சென்ற வழியில், அவரது கப்பல் சேதமடைந்ததால், அவர் அச்சமயத்தில் இத்தீவைக் கண்டு, அதில் இறங்கினார். புனித இலாரன்ஸ் நாளன்று அவர் அங்கு இறங்கியதால், அத்தீவு, முதலில் புனித இலாரன்ஸ் என்றே பெயரிடப்பட்டது. இவர்தான் இத்தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியர். இவர்களுக்கு முன்னதாக, அரேபியர்கள் இத்தீவில் வர்த்தகத்தைத் தொடங்கியிருந்தனர். இத்தீவு நாட்டில் முதன் முதலில்,  ஆஸ்டிரோனிய மக்கள், கி.மு.350க்கும், கி.பி.550க்கும் இடைப்பட்ட காலத்தில், குடியேறி இருக்கலாம் என்று அகழ்வாய்வுகள் கூறுகின்றன. அதற்குப் பிறகு, ஒவ்வொரு குழுக்களாக அங்கு குடியேறியுள்ளனர். தற்போது மலகாசி இனக் குழு, 18 அல்லது அதற்கு அதிகமான கிளை குழுக்களால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நாடு, 18ம் நூற்றாண்டு வரை, சிறு சிறு சமூக-அரசியல் குழுக்களால் ஆளப்பட்டு வந்தது. 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இத்தீவின் பெரும்பகுதி ஒன்றிணைக்கப்பட்டு, மடகாஸ்கர் முடியரசாக, மெரினா பிரபுக்களால் ஆளப்பட்டு வந்தது. 1897ம் ஆண்டில் பிரெஞ்சு பேரரசு இத்தீவை தனது காலனியாக மாற்றியதில், முடியாட்சி முடிவுக்கு வந்தது. பின்னர், 1960ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி பிரான்சிடமிருந்து விடுதலையடைந்தது. இந்நாட்டில், மலகாசி மற்றும், பிரெஞ்சு, ஆட்சி மொழிகளாகும். ஆங்கிலமும் பேசப்படுகின்றது.

மடகாஸ்கரின் புவியியல்

மடகாஸ்கர், இந்திய துணைக் கண்டத்திலிருந்து, ஏறக்குறைய 8 கோடியே 80 இலட்சம் ஆண்டுகளுக்குமுன் பிரிந்தது. இந்நாடு, தன் சுற்றுப்புறங்களில், எண்ணற்ற சிறு சிறு தீவுகளையும் கொண்டுள்ளது. உலகில், மிகவும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் ஒன்றாகவும், ஆப்ரிக்காவில் மிக ஏழை நாடுகளில் ஒன்றாகவும் உள்ள மடகாஸ்கரின் 2 கோடியே 50 இலட்சம் மக்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் ஒரு நாளைக்கு 2 டாலருக்கும் குறைவான ஊதியத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஆயினும், இந்நாட்டின் இயற்கையின் அருங்கொடைகளை, ஒரு பல்லுயிர்ப் பெட்டகம் என்கின்றனர். உலகில் வேறு எங்கும் காண இயலாத 90 விழுக்காட்டிற்கும் அதிகமான வன உயிரினங்களையும், விலங்குகளையும் இத்தீவில்தான் காண முடியும். லெமூர் விலங்குகள், போபாப் மரங்கள், மழைக்காடுகள், பாலைவனம், மலையேற்றம், நீரில் குதித்து விளையாடுதல் என, அத்தீவு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுத்து வருகிறது. மேலும், மடகாஸ்கரில், இரு மாறுபட்ட காலநிலைகள் உள்ளன. நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை, வெப்பம் மற்றும் மழைக் காலமாகவும், மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை வறட்சி மற்றும் குளிர் காலமாகவும் இருக்கிறது. மலைகள், மழைக்காடுகள், பாலைவனங்கள், கடற்கரைகள், பவளப்பாறைகள், வளமான சமவெளிகள், கற்பள்ளத்தாக்குகள் என, பல்வேறு நிலத்தோற்றங்கள் ஒரே தீவுக்குள் இருப்பது மட்டுமல்ல, அருகருகே இருப்பது மடகாஸ்கர் தீவில்தான்.

மடகாஸ்கரில் பல்வேறு இனத்தவர்

மடகாஸ்கரில், போர்த்துக்கீசியர் சென்றதோடு, 1540ம் ஆண்டில் கிறிஸ்தவமும் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நாட்டில், 1993ம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, 41 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். இஸ்லாமியர் 7 விழுக்காட்டினர் மற்றும், இயற்கையை வழிபடுவோர் 52 விழுக்காட்டினர். 19ம் நூற்றாண்டின் இறுதியில் குஜராத் மாநிலத்திலிருந்து குடியேறியவர்களால் இந்து மதம் அறிமுகப்படுத்தப்பட்டது. மடகாஸ்கரிலுள்ள பெரும்பாலான இந்துக்கள், குஜராத் அல்லது இந்தி மொழிகளைப் பேசுகின்றனர். இந்நாட்டில், ஏறத்தாழ 42.5 விழுக்காட்டினர் 15 வயதுக்குட்பட்டவர்கள். 54.5 விழுக்காட்டினர், 15க்கும், 64 வயதுக்கும் உட்பட்டவர்கள்.

மொரீஷியஸ்  

மடகாஸ்கரிலிருந்து திருத்தந்தை செல்லும் மூன்றாவது நாடு மொரீஷியஸ் (Mauritius).  இது, மடகாஸ்கரிலிருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியப் பெருங்கடலில், ஆப்ரிக்க கண்டத்தின் தென்கிழக்கு கடற்கரைப் பகுதியில், ஏறக்குறைய இரண்டாயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தீவு நாடாகிய மொரிஷியஸ், Rodrigues, Agalega மற்றும், St.Brandon தீவுகளையும் கொண்டிருக்கின்றது. இதன் தலைநகரும், பெரிய நகரமுமான போர்ட் லூயிஸ் (Port Louis), முக்கிய மொரீஷியஸ் தீவில் உள்ளது. 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்நாட்டில் வாழ்கின்ற 14 இலட்சம் மக்களில், ஏறத்தாழ 48.5 விழுக்காட்டினர் இந்துக்கள். இவர்களில், தமிழ், தெலுங்கு, மராத்தி, உருது, சீனம் ஆகிய மொழிகள் பேசுவோர் சிறுபான்மையினராகவும், பீஹாரைப் பூர்வீகமாகக் கொண்டவர்களே பெரும்பான்மையினராகவும் உள்ளனர். ஏறக்குறைய 32.7 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள், 17.2 விழுக்காட்டினர் இஸ்லாமியர் மற்றும், 0.7 விழுக்காட்டினர் ஏனைய மதத்தவர். ஆப்ரிக்காவில், மொரீஷியஸ் தீவு நாட்டில் மட்டுமே, இந்துக்கள் பெரும்பான்மையினர். இந்நாடு, சமயச்சார்பற்றது மற்றும், சமய சுதந்திரம் அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்மக்களின் கலாச்சாரம், இவர்களின் பல்வேறு சமய விழாக்களில் வெளிப்படுகின்றது. இவ்விழாக்களில் பல, அரசு விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பில், அதிகாரப்பூர்வ மொழி என எதுவும் குறிப்பிடப்படவில்லையெனினும், ஆங்கிலமே, நாடாளுமன்ற மொழியாகும். ஆயினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரெஞ்ச் மொழியிலும் பேசலாம். அரசியலமைப்பில் சில சட்டங்கள் பிரெஞ்ச் மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. மொரீஷியஸ் பணத்திலுள்ள எழுத்துக்கள், இலத்தீன், தமிழ் மற்றும் தேவனாகிரி மொழிகளில் உள்ளன.

மொரீஷியஸ் தீவில் குடியேற்றம்

மொரீஷியஸ் தீவு நாடு, எரிமலைகளையும், ஏறத்தாழ  முழுவதும், பவளப்பாறைகளையும் கொண்டிருக்கின்றது. நீண்டகாலம் மக்கள் வாழாமல் இருந்த இப்பகுதி, அரேபிய கடல்தொழிலாளர்களுக்கு 10ம் நூற்றாண்டில் அறிமுகமானது. 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்த்துக்கீசியர்கள் இத்தீவைப் பார்வையிட்டிருந்தாலும், அவர்கள் அங்கு குடியேறவில்லை. 1598ம் ஆண்டிலிருந்து, 1710ம் ஆண்டு வரை, அத்தீவு, டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. அச்சமயத்தில், ஆளுனர் Nassau வின் Maurice பெயரால், அத்தீவிற்கு மொரீஷியஸ் என்ற பெயர் சூட்டப்பட்டது. அவர்கள் தொடர்ந்து அத்தீவில் குடியிருக்க இயலாமல், கடல்கொள்ளையரிடம் விட்டுச்சென்றனர். 1721ம் ஆண்டில், பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனி மொரீஷியசை ஆக்கிரமித்தது. 1767ம் ஆண்டில், பிரெஞ்ச் அரசர், அத்தீவின் நிர்வாகத்தை நடத்த ஆரம்பித்தார். பிரெஞ்ச் அதிகாரிகள், ஆப்ரிக்க அடிமைகளை அத்தீவிற்கு கொண்டுவந்து, கரும்புத் தோட்டங்களை உருவாக்கி அதில் வேலை செய்ய வைத்தனர். 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், இங்கிலாந்திற்கும், பிரான்சிற்கும் இடையே நடந்த போரில், 1810ம் ஆண்டில் பிரித்தானியா மொரீஷியஸைக் கைப்பற்றியது. 1835ம் ஆண்டில் அடிமைமுறை முடிவுக்கு வந்ததையடுத்து, ஆப்ரிக்க அடிமைகள் வேலை செய்த இடங்களில், இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் மொரீஷியசுக்கு கொண்டுவரப்பட்டனர். 1920களில், ஏறக்குறைய 5 இலட்சம் இந்தியர்கள், அங்கு கரும்புத் தோட்டங்களில் வேலை செய்தனர்.

1850களில் வளமைபெறத் தொடங்கிய மொரீஷியசில், பிற நாடுகளில் கரும்பு விளைச்சலில் ஏற்பட்ட போட்டிகள், 1869ம் ஆண்டில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது போன்றவற்றால் பொருளாதாரம் மந்தமடையத் தொடங்கியது. ஆயினும், முதல் உலகப் போரில், கரும்பு சக்கரையின் விலை உயர்வால், மீண்டும் பொருளாதாரம் தளைத்தது. ஆயினும், 1945ம் ஆண்டுக்குப்பின் இடம்பெற்ற பொருளாதார, அரசியல் மற்றும், நிர்வாகச் சீர்திருத்தங்கள், அந்நாட்டின் விடுதலைக்கு இட்டுச் சென்றது. 1968ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி, மொரீஷியஸ், காமன்வெல்த் அமைப்பில், சுதந்திர நாடாக மாறியது. 1992ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி, மொரீஷியஸ் குடியரசு நாடாக, அரசுத்தலைவர் அதன் தலைவரானார். இந்நாட்டின் மக்கள் தொகையில், மூன்றில் இரண்டு பகுதியினர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.   

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மொரீஷியஸ் தீவு நாட்டிற்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியிலும், இந்நாடு, வளமையான, கலாச்சார மற்றும், சமய மரபுகளைக் கொண்ட நாடு என்று கூறியுள்ளார். கத்தோலிக்கத் திருஅவை தொடக்கமுதல், தம் மக்களை அனுப்பி, உலகின் பல மொழிகளைப் பேசினாலும், நற்செய்தியின் மொழி அன்பு  என்று குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை. இப்பயணம், நற்செய்தியின் அன்பு மொழியை இந்நாடுகளில் மணம் பரப்பும் என நம்புவோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவு செய்து, செப்டம்பர் 10, வருகிற செவ்வாய், மாலை 7 மணியளவில் உரோம் சம்பினோ விமான நிலையம் வந்து சேர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொசாம்பிக், மடகாஸ்கர், மற்றும், மொரீஷியஸ் நாடுகளில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1988 மற்றும், 1999ம் ஆண்டுகளில் திருத்தூதுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2019, 15:38