துறவற சபை அருள்சகோதரிகளுடன் மடகாஸ்கரில் திருத்தந்தை பிரான்சிஸ்  துறவற சபை அருள்சகோதரிகளுடன் மடகாஸ்கரில் திருத்தந்தை பிரான்சிஸ்  

எல்லாரும் உங்கள் செபங்களை நம்பியிருக்கின்றனர்

மடகாஸ்கர் நாட்டின் அந்தானனரிவோவில், காலணி அணியாத ஆழ்நிலை தியான கார்மேல் துறவற சபை இல்லத்தில், அந்நாட்டு அடைபட்ட துறவற சபை அருள்சகோதரிகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய உரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அன்புள்ள, அன்னை இயேசுபிறப்பு அறிவிப்பின் மதலேன் அவர்களே, அன்புச் சகோதரிகளே, தாங்கள் எனக்கு அளித்த இனிய வரவேற்பும், கனிவான வார்த்தைகளும் இந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆழ்நிலை தியான துறவற சபை அருள்சகோதரிகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன. உங்களின் இருப்புக்கும், பற்றுறுதியான வாழ்வுக்கும், இயேசு கிறிஸ்துவுக்கு அளித்துவரும் சுடர்விடும் சாட்சியத்திற்கும் நன்றி. இந்த நாட்டில் ஏழ்மை இருக்கலாம், அதேநேரம், இயற்கை வளம், மனித மற்றும் ஆன்மீக அழகு அதிகமாக இருக்கின்றன. மடகாஸ்கரில் உள்ள திருஅவை, ஆண்டவரின் கண்களிலும், ஏன் அகில உலகின் கண்களிலும், மிக அழகானதாக அமைந்துள்ளது. உங்கள் எல்லாருக்கும் நன்றி. இப்பொழுது நாம் செபித்த மூன்று திருப்பாடல்களுமே (தி.பா.119,81-88, 60,63), சோதனை மற்றும் ஆபத்துக்களில், பாடல் ஆசிரியரின் மனவேதனையை வெளிப்படுத்துகின்றன. இவற்றில், திருப்பாடல் 119ல் நாம் செபித்த எட்டு வரிகள் பற்றிய சிந்தனைகளை, இப்போது உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த  திருப்பாடலின் ஆசிரியர், செபத்தில் நீண்டகாலம் அருமையான அனுபவம் பெற்றவர் எனத் தெரிகிறது. நாம் செபித்த வரிகளில், “ஏங்குகிறேன்” என்ற சொல்லாடல், பல இடங்களில், இரு பொருள்களில் காணப்படுகின்றது.

“ஏங்குகிறேன்”

“ஏங்குகிறேன்” என்பது, ஒருவர் கடவுளைச் சந்திப்பதற்கு மிகுந்த ஆவல்கொண்டு செபிக்கின்றார் என்பதை எடுத்துரைக்கின்றது. இதற்கு அடைபட்ட துறவு இல்லங்களில் வாழ்வோராகிய நீங்கள் சிறந்த சான்றுகள். நொடிப்பொழுதில் மறைந்துபோகும் பொருள்களுடன், பேரின்ப வீட்டிற்கான நம் ஆவலைத் திருப்திப்படுத்த நாம் தொடர்ந்து சோதிக்கப்படுகிறோம். கடல்பயணிக்கு, பெரிய அலைகள் நிறைந்த கடலில் வழிகாட்டும் கலங்கரை விளக்கம் தேவைப்படுவதுபோல், நீங்கள் இவ்வுலகிற்குத் தேவைப்படுகின்றீர்கள். இருள்நிறைந்த இரவு வழியாக பயணம் செய்யும் மனிதருக்கு, நீங்கள் வழிகாட்டும் கைவிளக்காக இருங்கள். விடியற்கால விண்மீன்களாக, விடியலை அறிவிக்கும் விண்மீன்களாக இருங்கள். உங்களின் தோற்றமாற்ற வாழ்வாலும், மௌனத்தில் எளிமையாகச் சிந்திக்கும் சொற்களாலும், வாழ்வும், உண்மையும், வழியுமானவரை எமக்குக் காண்பியுங்கள்.

நம்பிக்கையே ஏழைகளின் சொத்து

அடுத்து “ஏங்குகிறேன்” என்ற சொல்லாடல், நீதிமான்களை அழிப்பதற்குத் தேடும் செருக்குற்றதன்மை பற்றியும் சொல்கிறது. உங்களது துறவு இல்லங்கள், வேதனையாலும், துயரத்தாலும் கசங்கிப்போயுள்ள மக்கள் வருகின்ற இடமாக எப்போதும் அமைவதாக. இன்று நம்மோடு, தம் பிள்ளைகளை இழந்த இரு அன்னையர் உள்ளனர். உங்களைச் சுற்றியுள்ள மக்கள் எப்போதும் கடும் ஏழ்மையில் வாழ்பவர்கள், பலவீனர்கள், மற்றும், எண்ணற்ற வழிகளில் புண்பட்டு, துன்புற்றுள்ளவர்கள். எனினும், அவர்களின் விசுவாசம் பெரிது. இத்துன்பங்கள், இவர்களின் மகிழ்வையும் நம்பிக்கையையும் வற்றச் செய்கின்றன. விசுவாசமும், நம்பிக்கையுமே ஏழைகளின் மாபெரும் சொத்து. இவர்களுக்கு நம்பிக்கை அறிவிக்கப்பட்டு, அதில் அவர்கள் உறுதிப்படுத்தப்பட்டு, அதில் வாழ்வதற்கு உதவ வேண்டியது எவ்வளவு முக்கியமானது.

அன்புச் சகோதரிகளே, நீங்கள் இன்றி திருஅவையும், மடகாஸ்கரின் மனித விளிம்புநிலையில் வாழ்வோரும், நற்செய்தி அறிவிப்போர், குறிப்பாக, ஆபத்தான சூழல்களில் நற்செய்தி அறிவிப்போரும் எப்படி வாழ முடியும்? அவர்கள் எல்லாரும் உங்கள் செபங்களை நம்பியிருக்கின்றனர். எனது மடகாஸ்கர் பயணத்தில் என்னிதயத்திலுள்ள கருத்துக்களுக்காகச் செபியுங்கள். அனைத்து மக்களின் இதயங்களிலும், நற்செய்தியின் ஆர்வம் மலர இணைந்து செபிப்போம்.

இவ்வாறு, அந்தானனரிவோ ஆழ்நிலை தியான துறவு இல்லத்தில் தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2019, 15:01