Akamasoa நட்பு கிராமத்தில் திருத்தந்தை Akamasoa நட்பு கிராமத்தில் திருத்தந்தை 

AKamasoa கிராமத்தினரிடம் - ஏழ்மை தவிர்க்க இயலாதது அல்ல

ஏழ்மைக்கும், சமுதாயப் புறக்கணிப்புக்கும் எதிரான போராட்டத்திற்கு ஆதரவு வளர, Akamasoa கிராமம் எடுத்துக்காட்டாய் அமையும். நம்பிக்கை, கல்வி, கடின உழைப்பு, அர்ப்பணம் ஆகியவை, ஒவ்வொரு மனிதரின் மாண்புக்கு இன்றியமையாதவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

Akamasoa கிராமம், ஏழை மக்கள் மத்தியில் கடவுளின் பிரசன்னத்தின் வெளிப்பாடாக உள்ளது. பெருமெண்ணிக்கையில் என்னைச் சந்திக்க வந்திருக்கும் உங்கள் எல்லாரின் முகங்களில் மகிழ்வைக் காண்கிறேன். இது, ஏழைகளின் அழுகையை ஆண்டவர் கேட்டுள்ளார், நன்றி ஆண்டவரே எனச் சொல்ல வைக்கின்றது. ஏழ்மை தவிர்க்க இயலாதது அல்ல என்று உரக்கச் சொல்வோம். இந்த கிராமம், துணிச்சல் மற்றும் ஒருவர் ஒருவருக்கு உதவியதன் நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளின் கடின உழைப்பின் பிரதிபலிப்பு இந்த கிராமம். Akamasoa இளையோரே, வறுமைக்குக் காரணமானவைகளுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்திவிடாதீர்கள். உங்களுக்குள்ளே முடங்கிப்போகும் அல்லது, எளிதான வாழ்வை அமைக்கும் சோதனையால் ஆட்கொள்ளப்பட அனுமதிக்காதீர்கள். இந்த கிராமத்தின் இளையோர் சார்பாக அளித்த சாட்சியங்களுக்கு நன்றி. ஆண்டவர் அளித்துள்ள கொடைகள், உங்கள் மத்தியில் மலர்வதற்கு அனுமதியுங்கள். பிறரன்புப் பணியில் தாராளமாகச் செயல்பட ஆண்டவரின் உதவியைக் கேளுங்கள். Akamasoa கிராமம், வருங்காலத் தலைமுறைக்கு வெறும் எடுத்துக்காட்டாய் மட்டும் திகழாமல், தற்போதைய, மற்றும், வருங்காலத் தலைமுறைகள்மீது ஆண்டவர் கொண்டிருக்கும் அன்பிற்கு சாட்சியாகத் தொடர்ந்து விளங்கட்டும். இந்தக் கிராமத்தின் கதிர்கள், மடகாஸ்கர் எங்கும், உலகெங்கும் பரவச் செபிப்போம். இதன் வழியாக, ஏழ்மைக்கும், சமுதாயப் புறக்கணிப்புக்கும் எதிரான போராட்டத்திற்கு ஆதரவு வளர,  இக்கிராமம் எடுத்துக்காட்டாய் அமையும். நம்பிக்கை, கல்வி, கடின உழைப்பு, அர்ப்பணம் ஆகியவை, ஒவ்வொரு மனிதரின் மாண்புக்கு இன்றியமையாதவை. நீங்கள் நம்பிக்கையின் இறைவாக்குச் சான்றுகளாகத் திகழுங்கள். கடவுள் உங்களைத் தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக. எனக்காகச் செபிக்க மறவாதீர்கள்.

இவ்வாறு திருத்தந்தை Akamasoa கிராமத்தினருக்கு ஊக்கமளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2019, 10:56