புனித ஜான் மரிய வியான்னி புனித ஜான் மரிய வியான்னி 

அருள்பணியாளர்களின் பணிகளுக்கு திருத்தந்தை நன்றி

புனித ஜான் மரிய வியான்னி அவர்கள், இறைவனடி சேர்ந்ததன் 160ம் ஆண்டு நிறைவையொட்டி, அப்புனிதரின் திருவிழாவன்று, உலகின் அனைத்து அருள்பணியாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

தங்களின் இறையழைப்பிற்கு ஆகட்டும் என்று மொழிந்துள்ளதற்காக, அருள்பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி மடல் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், களைப்படைந்த நேரங்களிலும்கூட, மகிழ்வுடன் தங்களை அர்ப்பணித்து மறைப்பணியாற்றிவரும் அருள்பணியாளர்களை ஊக்குவித்துள்ளார்.

ஆகஸ்ட் 04, இஞ்ஞாயிறன்று, புனித ஜான் மரிய வியான்னி அவர்கள், இறைவனடி சேர்ந்ததன் 160ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்பட்டதையொட்டி, அப்புனிதரின் திருவிழாவான இன்று, உலகின் அனைத்து பங்குத்தந்தையருக்கு மட்டுமல்ல, எனது சகோதர அருள்பணியாளர்களாகிய உங்கள் எல்லாருக்கும் இக்கடிதத்தை எழுதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் தற்போதைய சூழலில், தியாகங்களைச் செய்யும் பல அருள்பணியாளர்களைப் பாராட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட சமுதாயங்களின் அன்றாட வாழ்வில் ஒன்றாகக் கலந்து பணியாற்றும்பொருட்டு, அனைத்தையும் துறந்து வந்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இக்கடிதம், உலகின் அனைத்து அருள்பணியாளர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் பற்றி குறிப்பிட்டு, அவர்களின் தியாகம்நிறைந்த பணிகளுக்கு நன்றி சொல்லி, அவர்களை உற்சாகப்படுத்துவதாக அமைந்துள்ளது.

பாலியல் முறைகேடுகள் குறித்த விவகாரத்தில் பல அருள்பணியாளர்கள் துன்பங்களை அனுபவித்துள்ள சூழலில், தனது பல மேய்ப்புப்பணி பயணங்களில், அருள்பணியாளர்களின் அவமானச் செயல்களால் ஏற்பட்டுள்ள கெட்டபெயர் மற்றும், திருஅவைக்கு ஏற்படுத்தியுள்ள இழப்புகள் குறித்து கேட்டறிந்தேன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை.

திருப்பொழிவு செய்யப்பட்டுள்ள பணியாளர்களால் நடத்தப்பட்டுள்ள, பாலியல் மற்றும், அதிகார முறைகேடுகள் ஆகியவற்றுக்குப் பலியாகி இருப்பவர்களின் வேதனைகள் பற்றியும், இந்த முறைகேடுகளுக்குப் பாராமுகமாய் இருந்தவர்கள் பற்றியும் அறிந்தேன் என்று எழுதியுள்ள திருத்தந்தை, திருஅவையில் சீர்திருத்தம் இடம்பெறுவதற்கு உறுதியுடன் தன்னை அர்ப்பணித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

தங்களின் இறையழைப்பிற்கு என்றும் நன்றியுள்ளவர்களாய், நேர்மறை  எண்ணங்களோடு வாழவும், கவலை மற்றும் மனத்தளர்ச்சியில் வீழ்ந்துவிடாதிருக்கவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு மட்டுமே நமக்குத் தரவல்ல, இரக்கம் மற்றும் பரிவன்பிற்குச் சாட்சிகளாக வாழ்கின்ற மனிதர்களாக விளங்குமாறு கேட்டுக்கொண்டார்.

அன்னை மரியாவின் வார்த்தைகள் வழியாக கடவுளைப் புகழுமாறு இக்கடிதத்தின் மூன்றாவது பிரிவில் விண்ணப்பித்துள்ள திருத்தந்தை, இறையன்னையின் கனிவிலும், பாசத்திலும் ஆறுதலைக் கண்டடையுமாறும், அருள்பணியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2019, 15:10