31 வெவ்வேறு பூர்வீக இன மக்களின் பிரதிநிதிகளை திருத்தந்தை சந்தித்தபோது 31 வெவ்வேறு பூர்வீக இன மக்களின் பிரதிநிதிகளை திருத்தந்தை சந்தித்தபோது 

படைப்பைப் பாதுகாப்பதற்கு அனைவருக்கும் பொறுப்பு

‘பூர்வீக இன மக்களின் மொழிகளைப் பாதுகாப்போம்’ என்ற தலைப்பில், பூர்வீக இனத்தவரின் உலக நாள் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பது, நம் அனைவரின் கடமை என்பதை, பூர்வீக இன மக்கள் நினைவுபடுத்துகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 9, இவ்வெள்ளியன்று, ஐ.நா.வின் பூர்வீக இனத்தவரின் உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, அம்மக்களை மையப்படுத்தி, ஹாஸ்டாக்குடன் (#IndigenousPeoplesDay) டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

“கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள தம் படைப்பைப் பாதுகாப்பதற்கு, நம் எல்லாருக்கும் பொறுப்பு உள்ளது என்பதை, பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும், மூதாதையரின் அறிவுடன், பூர்வீக இன மக்கள், நமக்கு நினைவுறுத்துகின்றனர்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில் இடம்பெற்றிருந்தன.

பூர்வீக இனத்தவரின் உலக நாள்

2019ம் ஆண்டை, பூர்வீக இனத்தவரின் மொழிகளின் ஆண்டாக, ஐ.நா. நிறுவனம் கடைப்பிடித்து வருகின்றது. உலகெங்கும் பேசப்படும் ஏழாயிரம் மொழிகளில், பெரும்பாலானவை பூர்வீக இன மக்களால் பேசப்படுகின்றன. 2016ம் ஆண்டில் வெளியான அறிக்கையில், பூர்வீக இனத்தவரின் ஏறத்தாழ 2,680 மொழிகள் அழியும் ஆபத்தில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இம்மக்கள், ஐந்தாயிரம் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டவர்கள். உலக மக்கள் தொகையில் 5 விழுக்காட்டினராகவுள்ள பூர்வீக இனத்தவர், உலகிலுள்ள வறியவர்களில் 15 விழுக்காட்டினராகவும் உள்ளனர்.

பூர்வீக இனத்தவரின் உலக நாள், 1982ம் ஆண்டில் முதன்முதலாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2019, 15:30