குடும்பத்தைக் குறித்து திருத்தந்தை வெளியிட்டுள்ள  The Pope Video என்ற காணொளி குடும்பத்தைக் குறித்து திருத்தந்தை வெளியிட்டுள்ள The Pope Video என்ற காணொளி 

குடும்பங்கள், மனித முன்னேற்றத்தின் பள்ளிகளாக...

நமது குடும்பங்கள், செபம் மற்றும் அன்பின் வழியே, உண்மையான மனித முன்னேற்றத்தின் பள்ளிகளாக விளங்க நாம் செபிப்போமாக – திருத்தந்தையின் ஆகஸ்ட் மாத செபக்கருத்து

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித முன்னேற்றத்திற்குத் தேவையான பாடங்களைச் சொல்லித்தரும் ஒரு பள்ளியாக குடும்பங்கள் விளங்கவேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் மாதத்திற்குரிய தன் செபக்கருத்தை, ஆகஸ்ட் 1, இவ்வியாழனன்று வெளியிட்டார்.

குடும்பத்தைக் குறித்து திருத்தந்தை வெளியிட்டுள்ள இக்கருத்தை, இயேசு சபையினர் நடத்தும் செபத்தின் திருத்தூதுப் பணிக்குழு, குடும்பத்தில் நிகழும் ஒரு காட்சியாக, The Pope Video என்ற காணொளியில் வடிவமைத்துள்ளது.

இக்காணொளியில், தன் தாயிடம் எதையோ சொல்ல வரும் ஓர் இளம்பெண்ணிடம் அக்கறை காட்டாமல், அந்தத் தாய், தொலைக்காட்சியில், ஒரு நிகழ்ச்சியைக் காண்பதில் ஆர்வம் கொண்டிருப்பதுபோல் முதல் காட்சியும், இரண்டாவது காட்சியில், அதே இளம்பெண், தன் தந்தையைத் தேடிச் செல்லும்போது, அவர், தன் வேலையில் மூழ்கியிருப்பதுபோலும் காட்டப்பட்டுள்ளது.

தொடர்புகள் அற்ற இந்த நிலைக்கு ஒரு மாற்றாக, இந்தக் காணொளியின் இறுதியில், தந்தை, தாய் மற்றும் மகள் மூவரும், மேசையில் அமர்ந்து உணவு உண்பதற்கு முன், இறைவேண்டல் செய்வதுபோல் ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சிகள் இடம்பெறும்போது, பின்னணியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஸ்பானிய மொழியில் தன் கருத்துக்களைக் கூறுகிறார்.

நாம் எத்தகைய உலகை எதிர்காலத்திற்கு விட்டுச்செல்ல விழைகிறோம் என்ற கேள்வியுடன் திருத்தந்தை தன் செய்தியைத் துவக்கி, குடும்பங்கள் நிறைந்த ஓர் உலகை நாம் விட்டுச் செல்வோமாக என்ற விண்ணப்பத்தை எழுப்புகிறார்.

நம் குடும்பங்கள், எதிர்காலத்தைப்பற்றி சொல்லித்தரும் பள்ளிகள், நமக்கு சுதந்திரம் வழங்கும் தலங்கள், மற்றும் மனிதத்தின் மையங்கள் என்பதால், நமது குடும்பங்களைப் பேணிக்காப்போமாக, என்ற கருத்தை, திருத்தந்தை, வலியுறுத்தியுள்ளார்.

குடும்பங்களில் தனிப்பட்ட மற்றும் குடும்ப செபங்களுக்கு தனியொரு இடம் ஒதுக்குவோம் என்று எடுத்துரைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது குடும்பங்கள், செபம் மற்றும் அன்பின் வழியே, உண்மையான மனித முன்னேற்றத்தின் பள்ளிகளாக விளங்க நாம் செபிப்போமாக என்ற சொற்களில், தன் ஆகஸ்ட் மாத செபக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2019, 14:41