புதன் மறைக்கல்வியுரை 280819 புதன் மறைக்கல்வியுரை 280819 

மறைக்கல்வியுரை : நலமற்றோர் மீது, புனித பேதுருவின் அக்கறை

துவக்ககால திருஅவை, வளர்வதற்கும், உதவி தேவைப்படுவோர்மீது அக்கறை காட்டுவதற்கும் இறைவன் உதவி, பலப்படுத்தினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இத்தாலியின் கோடை காலத்தை முன்னிட்டு, ஜூலை மாதம் முழுவதும் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரைகள் இடம் பெறவில்லை என்பதும், வெப்பம் மிகுதியின் காரணமாக, ஆகஸ்ட் மாதத்தில் புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிலேயே இதுவரை நடந்து வந்தது என்பதும் நீங்கள் அறிந்ததே. திருப்பயணிகளின் கூட்டத்தை கருத்தில் கொண்டும், வெப்பம் குறைந்துள்ளதையொட்டியும் இப்புதன் மறைக்கல்வியுரை வத்திக்கானின் புனித பேதுரு பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றது. திருத்தூதர் பணிகள் குறித்த தன் மறைக்கல்வியுரையின் தொடர்ச்சியாக, இவ்வாரம், உடல்நலமற்றோர், மற்றும், தீய ஆவிகளால் இன்னலுற்றோர் மீது, புனித பேதுரு காட்டிய அக்கறை குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முதலில், திருத்தூதர் பணிகள் நூலின் ஐந்தாம் பிரிவிலிருந்து, ‘மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன............ பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்; எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்துகொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர் (தி.ப. 5:12,15-16)  என்ற பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது.

அன்பு சகோதரர் சகோதரிகளே, திருத்தூதர் பணிகள் குறித்த நம் மறைக்கல்வித்தொடரில் இன்று, துவக்ககால திருஅவையை இறைவன் எவ்வாறு, வளர்வதற்கும், உதவி தேவைப்படுவோர்மீது அக்கறை காட்டுவதற்கும் உதவி, அதனைப் பலப்படுத்தினார் என்பதைக் குறித்து நோக்குவோம். துவக்ககால திருஅவை, தாக்குதல்கள் குறித்த அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டாலும் எத்துணை உயிர்துடிப்புடன் செயல்பட்டது என்பதை புனித பேதுருவின் பணிகளில் நாம் காணமுடிகிறது. இயேசுவைப்போலவே, புனித பேதுருவும், நோயுற்றோர், மற்றும், நலிவடைந்தோரால் மிகவும் ஈர்க்கப்பட்டார். இறைவனின் தூய ஆவியாரால் நிரப்பப் பெற்றவராக, இயேசுவிற்குரிய குணமளிக்கும் பணியை தொடர்ந்து செய்தார் புனித பேதுரு. இருப்பினும் அப்பணி சதுசேயர்களின் பகைமையை ஈட்டித் தந்தது. அவர்களும் இயேசுவின் சீடர்களின் போதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவர்களை சிறையில் அடைத்தனர். அவர்களின் கேள்விக்கு புனித பேதுரு வழங்கிய, “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?” (தி.ப.5:29) என்ற பதில்மொழி, நம் கிறிஸ்தவ வாழ்வுக்குரிய திறவுகோலாக உள்ளது. காலதாமதமின்றி, எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி, இறைவார்த்தைக்கு செவிமடுப்பதையும், இறைவனுக்கு விசுவாசம் உள்ளவர்களாகச் செயல்படுவதையும் இது குறித்து நிற்கின்றது. நம் சகோதர சகோதரிகளுக்கு நாம் சேவையாற்ற முயலும்வேளையில், இறைவன் எப்போதும் நம் அருகிலேயே உள்ளார் என்பதை உணர்ந்தவர்களாக, உள்மன பலத்திற்காக தூய ஆவியாரிடம் இறைஞ்சுவோம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளில் புனித அகுஸ்தீனாரின் திருவிழாவை நாம் சிறப்பிக்கின்றோம் என்பதை நினைவூட்டி, அவரின் புனிதத்துவம், மற்றும், இறையியல் கோட்பாடுகளால் நாம் தூண்டப்படுவோமாக என வேண்டினார். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2019, 11:30