உரோம் நகரின் Gesu' கோவிலில் புனித இக்னேசியஸ் பீடத்தில் விளக்கேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2013 உரோம் நகரின் Gesu' கோவிலில் புனித இக்னேசியஸ் பீடத்தில் விளக்கேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2013 

இறைவனின் புகழால் ஈர்க்கப்பட்ட புனித இக்னேசியஸ்

"லொயோலாவின் புனித இக்னேசியஸ், ஓர் இளம் படைவீரராக, தன்னுடைய புகழைப்பற்றி சிந்தித்தார். ஆனால், அதன்பின், அவர் இறைவனின் புகழால் ஈர்க்கப்பட்டார். அது அவர் வாழ்வுக்கு பொருள் தந்தது" - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூலை 31 இப்புதனன்று, கொண்டாடப்பட்ட லொயோலாவின் புனித இக்னேசியஸ் திருநாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்புனிதரின் வீரப்பண்புகளையும், புனிதத்தையும் இணைத்து டுவிட்டர் செய்தியொன்றை பதிவு செய்தார்.

"இன்று நாம் நினைவுகூரும் லொயோலாவின் புனித இக்னேசியஸ், ஓர் இளம் படைவீரராக, தன்னுடைய புகழைப்பற்றி சிந்தித்தார். ஆனால், அதன்பின், அவர் இறைவனின் புகழால் ஈர்க்கப்பட்டார். அது அவர் வாழ்வுக்கு பொருள் தந்தது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் வெளியிடப்பட்டன.,

புனித இக்னேசியஸ் – வாழ்க்கை குறிப்புகள்

1491ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டின் வட பகுதியில், செல்வம் மிக்க ஒரு குடும்பத்தில் 13வது குழந்தையாகப் பிறந்து, Íñigo López de Loyola என்ற இயற்பெயருடன் வாழ்ந்த புனித இக்னேசியஸ், வீர சாகசங்கள் செய்வதில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

1521ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டின் பாம்பலோனா என்ற கோட்டையை, பிரெஞ்சு படையினரின் தாக்குதலிலிருந்து காக்கும் பணியில் இக்னேசியஸ் ஈடுபட்டிருந்தபோது, அவரது கால், பீரங்கி குண்டால் தாக்கப்பட்டது.

லொயோலா கோட்டையில் அவர் சிகிச்சை பெற்ற வேளையில் மனம் மாறி, துறவு வாழ்வை மேற்கொண்டார். மன்ரேசா என்ற குகையில் தங்கி, ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்ட வேளையில், தன் அனுபவங்களை தொகுத்து வைத்தார். இத்தொகுப்பு, 1548ம் ஆண்டு ஓர் ஆன்மீக வழிகாட்டியாக வெளியிடப்பட்டது.

இக்னேசியஸ் அவர்கள், தன் நண்பர்கள் ஆறு பேருடன் இணைந்து உருவாக்கிய ஒரு துறவுக் குழு, 'இயேசு சபை' என்ற பெயருடன், 1540ம் ஆண்டு முதல் உலகெங்கும் பணியாற்றி வருகிறது. இந்த துறவுக்குழுமத்தின் முதல் தலைவராக, 1541ம் ஆண்டு, புனித இக்னேசியஸ் தெரிவு செய்யப்பட்டார்.

1556ம் ஆண்டு, ஜூலை 31ம் தேதி, உரோம் நகரில் இறையடி சேர்ந்த இக்னேசியஸ் அவர்கள், 1609ம் ஆண்டு அருளாளராகவும், 1622ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி புனிதராகவும் உயர்த்தப்பட்டார். 1922ம் ஆண்டு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், இப்புனிதரை, ஆன்மீகப் பயிற்சிகளுக்கு பாதுகாவலராக அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 July 2019, 15:05