மூவேளை செப உரையின்போது - 070719 மூவேளை செப உரையின்போது - 070719 

வன்முறைகளுக்குப் பலியான மக்களுக்காக செபிக்க...

தங்களையே பாதுகாக்க இயலாத புலம்பெயர்ந்தோர் உயிரிழக்கவும், காயமடையவும் காரணமான லிபியா தாக்குதல்கள் குறித்து அனைத்துலக சமுதாயம் அமைதி காக்கக் கூடாது - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

லிபியா நாட்டில், புலம்பெயர்ந்தோர் தங்கியிருந்த தடுப்பு முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் உயிரிழந்தோர் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டு, அவர்களுக்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

ஜூலை 7, இஞ்ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்தோருக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில், இத்தாக்குதல்கள் பற்றி பேசிய திருத்தந்தை, தங்களையே பாதுகாக்க இயலாத புலம்பெயர்ந்தோர் உயிரிழக்கவும், காயமடையவும் காரணமான இத்தாக்குதல்கள் குறித்து அனைத்துலக சமுதாயம் அமைதி காக்கக்கூடாது என்பதை வலியுறுத்திக் கூறினார்.

லிபியாவில் உயிரிழந்த புலம் பெயர்ந்தோருக்காகச் செபித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆப்கானிஸ்தான், மாலி, புர்கினா பாசோ மற்றும் நைஜர் ஆகிய நாடுகளில் வன்முறைகளுக்குப் பலியான மக்கள் குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.

கிறிஸ்தவ செபம் என்பது, ஒவ்வொருவரும், அவரவர் தேவைகளுக்காக மட்டும் செபிப்பதல்ல, மாறாக, அனைவருக்காகவும் செபிப்பதை உள்ளடக்கியது என்ற கருத்தையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் பகிர்ந்துகொண்டார்.

லிபியாவின் Tripoliக்கு கிழக்கேயுள்ள Tajoura எனுமிடத்தில் அமைந்திருந்த புலம்பெயர்ந்தோர் முகாமில், ஜூலை மாதம் 3ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில், குறைந்தது 53 பேர் உயிரிழந்தனர், மற்றும் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2019, 13:10