திருத்தந்தை பிரான்சிஸ் , வயது முதிர்ந்தவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் , வயது முதிர்ந்தவர்கள் 

குடும்ப வாழ்வில் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பத்திலும், சமுதாயத்திலும், தாத்தா, பாட்டிகளின் விலைமதிப்பில்லா பங்கை, இளையோர் சந்திப்புக்களில் எடுத்துரைத்து வருகிறார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

குடும்ப வாழ்வில், விசுவாசத்தையும், மனித சமுதாயத்தின் மரபுகளையும் அறிவிப்பதில் தாத்தா, பாட்டிகள் முக்கிய பங்காற்றுகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது இன்ஸ்டகிராம் ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.

அன்னை மரியாவின் பெற்றோரான, புனிதர்கள் சுவக்கீன், அன்னம்மாள் திருவிழா சிறப்பிக்கப்பட்ட ஜூலை 26, இவ்வெள்ளி மாலையில், திருத்தந்தை, தனது இன்ஸ்டகிராமை, தாத்தா, பாட்டிகளுக்கு அர்ப்பணித்துள்ளார்.

“இன்று, பல நாடுகளில் தாத்தா, பாட்டிகளின் திருவிழா கொண்டாடப்படுகின்றது. அவர்கள், குடும்ப வாழ்வில், மனித சமுதாயத்தின் மரபுகளையும், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இன்றியமையாததாகிய விசுவாசத்தையும் அறிவிப்பதில் எவ்வளவு முக்கியமானவர்கள்” என்று, பதிவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஜூலை 25, இவ்வியாழன் மாலையில், பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தெல்கந்தோல்போ சென்று, அந்த இல்லத்திலுள்ள அழகிய தோட்டத்தில் செபமாலை செபித்துள்ளார்.

தனது பாப்பிறை தலைமைப்பணி காலத்தில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், கோடை விடுமுறையை பெரும்பாலும் காஸ்தெல்கந்தோல்போ இல்லத்தில் செலவழித்து, அங்கேயே ஞாயிறு மூவேளை செப உரை வழங்கிவந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்குப்பின்பு அங்குச் சென்றுள்ளார்.

தனது செயலர் மற்றும் பேராயர் Georg Ganswein அவர்களுடன் சென்ற, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், காஸ்தெல்கந்தோல்போ இல்லத்திற்கு அருகிலுள்ள, Rocca di Papa அன்னை மரியா திருத்தலம் சென்று செபித்தார். பின்ன்னர், பிரஸ்காத்தி ஆயர் இல்லம் சென்று, இரவு உணவருந்தி, ஏறத்தாழ இரவு 10.30 மணிக்கு வத்திக்கான் திரும்பினார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தற்போது வத்திக்கான் தோட்டத்திலுள்ள Mater Ecclesiae இல்லத்தில் தங்கியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2019, 15:52