வத்திக்கான் செய்தித் துறையின் புதிய உதவி இயக்குனர், முனைவர் Cristiane Murray வத்திக்கான் செய்தித் துறையின் புதிய உதவி இயக்குனர், முனைவர் Cristiane Murray  

வத்திக்கான் செய்தித் துறையின் உதவி இயக்குனர் நியமனம்

வத்திக்கான் செய்தித் துறையின் உதவி இயக்குனராக, முனைவர் Cristiane Murray என்ற பெண்மணியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 25, இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் செய்தித் துறையின் உதவி இயக்குனராக முனைவர் Cristiane Murray என்ற பெண்மணியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 25, இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.

Cristiane Murray அவர்கள், 1962ம் ஆண்டு, பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோவில் பிறந்து, அந்நகரில் உள்ள கத்தோலிக்க பாப்பிறை பல்கலைக் கழகத்தில் வர்த்தக மேலாண்மைத் துறையில் பட்டம் பெற்றார்.

1995ம் ஆண்டு வத்திக்கான் வானொலியில் தன் பணிகளைத் துவக்கிய Murray அவர்கள், போர்த்துகீசியம், இத்தாலியம், இஸ்பானியம், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை அறிந்தவர்.

ஜூலை 18, கடந்த வியாழனன்று வத்திக்கான் செய்தித்துறையின் இயக்குனராக, முனைவர் மத்தேயோ ப்ரூனி அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நியமித்துள்ளதையடுத்து, இந்த வாரம் வியாழனன்று, இந்நியமனம் இடம்பெற்றுள்ளது.

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

மேலும், இயேசுவின் சாட்சியாக தன் உயிரை வழங்கிய திருத்தூதரான புனித யாக்கோபு திருநாளான, ஜூலை 25ம் தேதி, ஆண்டவரின் சாட்சிகளாக வாழ்வதை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டிருந்தார்.

"'ஆண்டவரே, நீரே என் வாழ்வு' என்று ஒவ்வொருநாளும் அவரிடம் சொல்லும் சாட்சிகளை இயேசு தேடிக்கொண்டிருக்கிறார்" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

ஜூலை 25, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,060 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 81 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2019, 14:00