திருத்தந்தையின் பல்கேரியா திருத்தூதுப் பயணம் திருத்தந்தையின் பல்கேரியா திருத்தூதுப் பயணம்  

பல்கேரியா, வட மாசிடோனியா திருத்தூதுப் பயணம், ஒரு முன்தூது

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 29வது திருத்தூதுப்பயணத்தில், பல்கேரியத் தலைநகர் சோஃபியாவிலுள்ள புலம்பெயர்ந்தவர் முகாமைப் பார்வையிடுவார், கொல்கத்தா புனித அன்னை தெரேசா அவர்கள் பிறந்த நகரமான Skopjeல், ஏழைகளைச் சந்திப்பார்

மேரி தெரேசா – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 29வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணமாக, மே 5, வருகிற ஞாயிறு முதல், மே 7 வருகிற செவ்வாய் வரை, பல்கேரியா மற்றும் வட மாசிடோனியா நாடுகளுக்குச் செல்கிறார். சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருப்போர், சமுதாயத்தின் பார்வையிலிருந்து ஒதுக்கப்படுவோர் போன்றோரை மிகவும் அன்புகூர்ந்து, அவர்கள் மீது அக்கறை காட்ட வேண்டுமென உலகினரை அடிக்கடி விண்ணப்பித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மூன்று நாள் திருத்தூதுப்பயணத்தில், பல்கேரியத் தலைநகர் சோஃபியாவிலுள்ள புலம்பெயர்ந்தவர் முகாமைப் பார்வையிடுவார், கொல்கத்தா புனித அன்னை தெரேசா அவர்கள் பிறந்த நகரமான Skopjeல், ஏழைகளைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்நாடுகளின் தலைவர்கள், அரசு அதிகாரிகள், ஆர்த்தடாக்ஸ் மற்றும் ஏனைய மதத் தலைவர்களையும் திருத்தந்தை சந்திப்பார். பல்கேரியாவில் வாழ்கின்ற எழுபது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களில்,  பெரும்பான்மையினர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள். வட மாசிடோனியா குடியரசில், ஏறக்குறைய 64 விழுக்காட்டினர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள், 33 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்கரும் பிற கிறிஸ்தவ சபையினரும் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவே.

பல்கேரியா

மே 5, வருகிற ஞாயிறு, உரோம் நேரம் காலை 6.20 மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் காலை 9.50 மணிக்கு, வத்திக்கானிலிருந்து உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திற்குப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில், பல்கேரியாவுக்குச் செல்கிறார். பல்கேரிய குடியரசு என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் இந்நாடு, ருமேனியா, செர்பியா, வட மாசிடோனியா, கிரீஸ், துருக்கி, மற்றும் கருங்கடலை எல்லைகளாகக் கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள, மிகவும் பழமையான வரலாற்றைக் கொண்டிருக்கும் இந்நாட்டில், பல்வேறு இன மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். நான்காம் நூற்றாண்டில், பேரரசர் பெரிய அலெக்சாந்தர் அவர்களும், இயேசு கிறிஸ்துவின் காலத்தில், உரோமைப் பேரரசரும், இந்நாட்டு மக்களிடம் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தனர். கி.பி.681ம் ஆண்டில், முதல் பல்கேரியப் பேரரசு உருவாக்கப்பட்டது. ஏறத்தாழ 1185ம் ஆண்டில், இரண்டாவது பல்கேரியப் பேரரசு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், 1396ம் ஆண்டில் துருக்கிய ஒட்டமான் பேரரசு பல்கேரியாவைக் கைப்பற்றி, ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகள் ஆட்சி செய்தது. இப்பேரரசின் கடுமையான சட்டங்களால் துன்புற்ற பல்கேரிய மக்கள், இப்பேரரசுக்கு எதிராகப் பலமுறை கிளர்ச்சி செய்தனர். 1876ம் ஆண்டில் இரஷ்யப் பேரரசின் உதவியுடன் இடம்பெற்ற, முதல் பல்கேரியப் போருக்குப் பின்னர், ஒட்டமான் பேரரசு பல்கேரியாவை விட்டு விலகியது. ஆயினும், 1908ம் ஆண்டுவரை, தற்போதைய நவீன பல்கேரியா அமைக்கப்படவில்லை. 1800களின் இறுதியில், இந்நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தேசியத் தலைவர்களில் Vasil Levski என்பவரும் ஒருவர்.

போர்களில் பல்கேரியாவின் நிலை

முதல் உலகப் போரில், பல்கேரியா ஜெர்மனியுடன் இணைந்து தோல்வியுற்றது. இரண்டாம் உலகப் போரில் பல்கேரிய நடுநிலை வகிப்பதாகச் சொல்லி, நாத்சி ஜெர்மனி அல்லது சோவியத் யூனியனுடன் இணைய மறுத்தாலும், போரில் அதிகரித்த நெருக்கடிநிலை காரணமாக, 1941ம் ஆண்டு மார்ச் மாதத்தில், பல்கேரியத் தலைவர்கள், ஜெர்மனியுடன்,  மூன்று நாடுகள் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். அதனால் ஜெர்மன் படைகள் பல்கேரியா வழியாக, கிரேக்கத்தை அடைந்தன. எனினும், பல்கேரியா, ஹிட்லரின் விருப்பங்களைப் பின்தொடரவில்லை. பல்கேரியப் படைகள், இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில் பங்குபெற மறுத்தன. அதோடு, யூதர்களை இனப் படுகொலை செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த வதை முகாம்களுக்கு யூதர்களை அனுப்பவும் மறுத்தன. இதனால் அடால்ஃப் ஹிட்லர் அதிக சந்தேகமுற்றார். பல்கேரிய அரசர் மூன்றாம் Tsar Boris அவர்கள், ஹிட்லரிடம் உரையாடிய ஒரு நாளைக்குப் பின்னர் இறந்தார்.

1944ம் ஆண்டில் பல்கேரியத் தலைவர்கள், சோவியத் யூனியனோடு இணைவதற்கு விருப்பம் தெரிவித்தனர். ஆனால் பல்கேரியாவை நம்ப மறுத்த சோவியத் யூனியன், 1947ம் ஆண்டில், பல்கேரியாவில் முடியாட்சியை நீக்கி, கம்யூனிசத்தோடு இணைத்தது. எனவே பல்கேரியா, தனது தலைவர் Todor Zhivkov என்பவரின்கீழ், நாற்பது ஆண்டுகள் சோவியத் யூனியனோடு மிக நெருக்கமாக இருந்து, அதன் விதிமுறைகளைப் பின்பற்றியது. 1989ம் ஆண்டு நவம்பரில் பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட பின்னர், கம்யூனிச கட்சி, தனது ஆட்சியை கைவிட்டது. பல்கேரிய தனது தலைவர்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட்டது. எனினும், புதிய சோஷலிச அரசின்கீழ், பல்கேரியா சில ஆண்டுகள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. அதை நிவர்த்தி செய்ய பல வழிகளை அந்நாடு கையாண்டாலும், தற்போது ஐரோப்பாவில் மிக ஏழை நாடுகளில் ஒன்றாக உள்ளது பல்கேரியா. நிர்வாகத்தில் பிரச்சனைகள், வலுவற்ற நீதிமன்ற அமைப்பு, திட்டமிட்ட குற்றக்கும்பல் போன்ற பெரும் பிரச்சனைகளை தற்போது பல்கேரியா எதிர்கொண்டுள்ளது.   

பல்கேரிய மொழியும், மதமும்

ஸ்லாவிய மொழியைப் போன்ற, பல்கேரியன்  எனப்படும் மொழியே இந்நாட்டில் பேசப்படுகின்றது. இம்மொழி, செர்பியன் மற்றும் இரஷ்ய மொழிகளோடு தொடர்புடையது. பல்கேரியாவில் பயன்படுத்தப்படும் பணத்தின் பெயர் lev என்பதாகும். இந்நாட்டில் வாழ்கின்ற மக்களில் 87 விழுக்காட்டினர் பல்கேரியர்கள், 9 விழுக்காட்டினர், துருக்கியர்கள் மற்றும் 4 விழுக்காட்டினர் சிங்கரிகள். தலைநகரான சோஃபியா, அந்நாட்டின் பெரிய நகரமாகும். தற்போது பல்கேரிய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்திலும், NATO அமைப்பிலும் உறுப்பினராக உள்ளது. அந்நாட்டின் தற்போதைய அரசுத்தலைவர் Rumen Radev. பல்கேரியாவில் ஆண்களின் பணி ஓய்வு வயது 64 ஆகவும், பெண்களின் பணி ஓய்வு வயது 61 ஆகவும் உள்ளன. தலைநகர் சோஃபியா, உலகில், தொழில் தொடங்குவதற்கு, குறிப்பாக, கணனி தொழில்நுட்பத்திற்கு ஏற்ற பத்து சிறந்த இடங்களில் ஒன்றாகும்.   

பல்கேரியாவில், கி.பி.865ம் ஆண்டில் கிறிஸ்தவம் அரசு மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது முதல், அந்நாட்டில், கிறிஸ்தவம், அதிலும், கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவம் செல்வாக்குமிக்கதாய் விளங்குகிறது. ஒட்டமான் ஆட்சி காலத்தில் இஸ்லாம் பரவியது. தற்போது அந்நாட்டில் முஸ்லிம்கள் பத்து விழுக்காட்டினர். மத்திய காலத்திலிருந்து கத்தோலிக்கம் பரவத் தொடங்கினாலும், தற்போது கத்தோலிக்கர் ஏறத்தாழ ஒரு விழுக்காட்டினரே. 19ம் நூற்றாண்டில், பிரிந்த கிறிஸ்தவ சபை பரவத் தொடங்கியது. பல்கேரியாவில் இரு உலகப் போர்களுக்கு இடையில், கத்தோலிக்கத் திருஅவையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவர், புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள். ஆஞ்சலோ ரொங்காலி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், 1925ம் ஆண்டில் அப்போஸ்தலிக்கத் தூதராக பல்கேரியாவுக்கு அனுப்பப்பட்டார். 1931ம் ஆண்டு முதல், 1934ம் ஆண்டு வரை, அந்நாட்டில் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகப் பணியாற்றி, பள்ளிகள், மருத்துவமனைகள், கருணை இல்லங்கள் போன்றவற்றை உருவாக்கி, பல்கேரிய திருஅவையின் மறுசீரமைப்புக்கு உதவினார். இவர் 1934ம் ஆண்டில், சோஃபியாவில் ஒரு குருத்துவ கல்லூரியை நிறுவி, அதை இயேசு சபையினரிடம் ஒப்படைத்தார். அந்நாட்டில், கம்யூனிச ஆட்சியில், 1949ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை சமய சுதந்திரம் நசுக்கப்பட்டது. பின்னர் 1990ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி திருப்பீடத்துடன் தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டன. 2002ம் ஆண்டில் (மே 23-26) புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், பல்கேரியாவுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டார்.

வட மாசிடோனியா

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 29வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தில், மே 7 வருகிற செவ்வாய் காலையில் செல்கின்ற நாடு வட மாசிடோனியா.  இக்குடியரசு, ஐரோப்பாவின் தென்கிழக்கில், பால்கன் தீபகற்பத்தில் அமைந்துள்ளது. முன்னாள் யுக்கோஸ்லாவியாவைச் சேர்ந்த இந்நாடு, 1991ம் ஆண்டு செப்டம்பரில், சுதந்திர தனி நாடாக தன்னை அறிவித்து, மாசிடோனியா என்ற பெயரில் பிரிந்தது. இந்தப் பெயரை வைத்து, கிரீஸ் நாடு பிரச்சனையை கிளப்பியது. ஏனெனில், கிரீஸ் நாட்டில், பெரிய மற்றும் மக்கள்தொகையில் இரண்டாவது இடத்திலுள்ள மாநிலம் மாசிடோனியா.  எனவே இவ்விரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்குப் பின்னர், 2018ம் ஆண்டு ஜூன் மாதம் இவ்விரு நாடுகளும் ஓர் உடன்பாட்டிற்கு வந்தன. அதன்படி, மாசிடோனியா குடியரசு, வட மாசிடோனியா குடியரசு என பெயர் மாற்றம் செய்வதென முடிவு செய்யப்பட்டது. இத்தீர்மானம், 2019ம் ஆண்டு பிப்ரவரியில் அமலுக்கு வந்தது. இந்த Prespa ஒப்பந்தத்திற்காக, வட மாசிடோனியா பிரதமர் Zoran Zaev அவர்களும், கிரீஸ் பிரதமர் Alexis Tsipras அவர்களும் உலக அளவில் பாராட்டப்பட்டனர். இவர்கள், பிப்ரவரி 16ம் தேதி, 'Ewald von Kleist' விருதையும் பெற்றனர். ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களால் நொபெல் அமைதி விருதுக்கும் இவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இக்குடியரசு, 1993ம் ஆண்டில் ஐ.நா.வில் உறுப்பினரானது. வட மாசிடோனியா, விடுதலையைடந்த பின்னர், திருத்தந்தை ஒருவர் அந்நாடு செல்வது இதுவே முதல் முறையாகும்.

வட மாசிடோனியா குடியரசு, வடமேற்கே கோசோவோ, வடகிழக்கே செர்பியா, கிழக்கே பல்கேரியா, தெற்கே கிரீஸ், மேற்கே அல்பேனியா ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் ஆகியவற்றை அதிகமாகக் கொண்டுள்ள இந்நாட்டின் தலைநகர் Skopje. அந்நாட்டின் ஏறத்தாழ 20 இலட்சம் மக்களில், 25 விழுக்காட்டினர் தலைநகரிலே வாழ்கின்றனர். நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் தென் ஸ்லாவிய மக்களாகிய மாசிடோனியர்கள். துருக்கியர்கள், ருமேனியர்கள், செர்பியர்கள், போஸ்னியர்கள், அர்மேனியர்கள், பல்கேரியர்கள் போன்ற நாட்டினரும் இங்கு வாழ்கின்றனர். இந்நாட்டில், பல்கேரியா, பைசான்டைன், செர்பியா ஆகிய பேரரசுகளுக்கு இடையில், நூற்றாண்டுகளாக இடம்பெற்ற போட்டி மோதல்களுக்குப் பின்னர், இந்நாடு, 14ம் நூற்றாண்டின் பாதியிலிருந்து 20ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, ஒட்டமான் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது. 1912 மற்றும் 1913ம் ஆண்டுகளில் நடைபெற்ற பால்கன் போர்களுக்குப் பின்னர், தற்போதைய வட மாசிடோனியா, செர்பியரின்கீழ் வந்தது. முதல் உலகப் போரின்போது (1915–1918) இந்நாட்டை பல்கேரியர்கள் ஆட்சி செய்தனர். போரின் முடிவில், செர்பிய, குரோவேஷிய மற்றும் சுலோவேனியர்கள் கூட்டாட்சியின்கீழ் வந்தது. இரண்டாம் உலகப் போரின்போது மீண்டும் பல்கேரியாவின்கீழ் வந்தது. பின்னர், 1945ம் ஆண்டில், யுக்கோஸ்லாவிய கம்யூனிச கூட்டாட்சியின்கீழ் வந்தது. பின்னர், 1991ம் ஆண்டில், சமாதானமாக, அதிலிருந்து பிரிந்து தனி நாடானது வட மாசிடோனியா.  

மலைகள் நிறைந்த வட மாசிடோனியாவில், 1,100 பெரிய நீர் வளங்கள் உள்ளன. ஏஜியன் கடல், அட்ரியாடிக் கடல், கருங்கடல் ஆகிய மூன்றிலும் நதிகள் கலக்கின்றன.  Vardar நதி மிகவும் முக்கியமானதாகும். இத்தகைய அழகான நாட்டுத் தலைநகரில்தான் புனித அன்னை தெரேசா அவர்கள் பிறந்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த திருத்தூதுப்பயணத்தை, வருகிற செவ்வாயன்று Skopje நகரில் நிறைவு செய்து,  அன்று இரவு 8.30 மணிக்கு உரோம் வந்து சேர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கேரியா மற்றும், வட மாசிடோனியா திருத்தூதுப் பயணம், ஒரு முன்தூது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2019, 15:11