Sheshan அன்னை மரியா Sheshan அன்னை மரியா  

சீனக் கத்தோலிக்கருக்காகச் செபிக்கும் உலக நாள் மே 24

2007ம் ஆண்டில், சீனக் கத்தோலிக்கருக்கு மடல் ஒன்றை எழுதிய, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், சீனக் கத்தோலிக்கருக்காகச் செபிக்கும் உலக நாளை (மே 24) உருவாக்கினார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

Sheshan அன்னை மரியா விழாவைச் சிறப்பிக்கும் சீனாவிலுள்ள கத்தோலிக்கர், தங்களின் அனைத்து சோதனைகள் மற்றும் துன்பங்களின் மத்தியில், நம்பிக்கையை இழக்காமல், விசுவாசத்திற்குச் சான்றுபகருமாறு, அவர்களுக்காகச் செபிப்போம் என, நம் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சகாய அன்னை மரியா விழாவான மே 24, இவ்வெள்ளியன்று, சீனக் கத்தோலிக்கர், தங்களின் Sheshan அன்னை மரியா தேசிய திருத்தலத்தில் விழாக் கொண்டாடியதை முன்னிட்டு, தன் டுவிட்டர் செய்தியில், இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“சீனாவிலுள்ள கத்தோலிக்கர்களுக்காகச் செபிப்போம். அம்மக்கள், உலகளாவிய திருஅவையோடு ஒன்றித்திருந்து, விசுவாசத்திற்குச் சாட்சிகளாக விளங்கவும், காயங்கள் மற்றும் சோதனைகளின் மத்தியில், ஏமாற்றாத எதிர்பார்ப்பில் நம்பிக்கை வைத்து, ஒன்றிப்பில் உறுதியுடன் இருக்கவும், Sheshan அன்னை மரியா உதவுவாராக” என்ற சொற்களை, திருத்தந்தை, தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

மே 19, இஞ்ஞாயிறு, அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியிலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீனாவிலுள்ள கத்தோலிக்கருடன் தனது நெருக்கத்தையும், செபங்களையும் வெளியிட்டு, அவர்களுக்காகச் செபிக்குமாறு, அனைத்துக் கத்தோலிக்கரையும் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள்   திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

2007ம் ஆண்டில், சீனக் கத்தோலிக்கருக்கு மடல் ஒன்றை எழுதிய, முன்னாள்   திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், சீனக் கத்தோலிக்கருக்காகச் சிறப்பு செபம் ஒன்றை எழுதியதுடன், அவர்களுக்காகச் செபிக்கும் உலக நாளையும் உருவாக்கினார். அந்த உலக செபம் நாள், மே 24ம் நாளன்று சிறப்பிக்கப்படும் என்றும், அவர் அறிவித்தார்.

Sheshan அன்னை மரியா திருத்தலம், சீனாவின் ஷங்காய் நகருக்கு அருகில், ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. இங்கு, சீனக் கத்தோலிக்கர், சகாய அன்னை விழாவான மே 24ம் நாளன்று, ஒவ்வோர் ஆண்டும் விழாக் கொண்டாடுகின்றனர்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “மரியா, ஒரு பெண்ணாக, ஓர் அன்னையின் அருளும் கனிவும் நிறைந்தவராக நம்முடன் இருக்கின்றார். நாம் உருவாக்க முயற்சிக்கும் பல பிரச்சனைகளின் அனைத்து முடிச்சுகளையும் அவிழ்க்கிறார், புயல்களின் மத்தியில்  சோர்வுறாது நிமிர்ந்து நிற்பதற்குக் கற்றுத் தருகிறார்” என்று எழுதியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 May 2019, 15:22