வட மாசிடோனியாவிற்கு காணொளிச் செய்தி வழங்கும்  திருத்தந்தை வட மாசிடோனியாவிற்கு காணொளிச் செய்தி வழங்கும் திருத்தந்தை 

வட மாசிடோனியா மக்களுக்கு திருத்தந்தை வாழ்த்து

Skopjeல் பிறந்து வளர்ந்த புனித அன்னை தெரேசா அவர்கள், இறையருளால், ஏழைகளிலும் ஏழைகளுக்கு, வசதியும் மாண்பும் வழங்கி, உலகில் கிறிஸ்தவ பிறரன்பின் துணிச்சலான மறைப்பணியாளராக மாறினார் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

எக்காலத்தையும்விட, இக்காலத்தில், ஐரோப்பாவிற்கும், உலகம் அனைத்திற்கும் அதிகமாகத் தேவைப்படுகின்ற சந்திப்பு கலாச்சாரம் மற்றும் உடன்பிறந்த உணர்வு கலாச்சாரத்தின் விதைகளை, வட மாசிடோனியா மக்கள் மத்தியில் விதைப்பதற்காக, அந்நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்கிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மே 7, வருகிற செவ்வாயன்று வட மாசிடோனியா குடியரசுக்கு, ஒருநாள் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதையொட்டி, மே 4, இச்சனிக்கிழமையன்று, அக்குடியரசின் மக்களுக்கு காணொளிச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியின் வழியாக, வட மாசிடோனியா மக்கள் மற்றும் திருஅவை மீது எனக்குள்ள பாசத்தை வெளிப்படுத்துகிறேன் என்று, அச்செய்தியில் பேசியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வட மாசிடோனியா, சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர், அக்குடியரசுடன் நட்பையும், தூதரக உறவுகளையும் உருவாக்குவதற்கு திருப்பீடம் விரும்பியது என்று கூறியுள்ளார்.

இக்குடியரசில், பல்வேறு இன, கலாச்சார மற்றும், மதத்தினர் ஒன்றிணைந்து வாழ்வதால், இதன் முகம் அழகாக இருக்கின்றது என்றும், ஒன்றிணைந்து வாழ்வதென்பது எப்போதும் எளிதல்ல என்றும் உரைத்துள்ள திருத்தந்தை, உங்கள் மண்ணின் மகளாகிய மாபெரும் புனிதர் அன்னை தெரேசாவின் பரிந்துரையை, உங்களுக்காக மன்றாடுகிறேன் என்று கூறியுள்ளார்.

Skopjeல் பிறந்து வளர்ந்த புனித அன்னை தெரேசா அவர்கள், இறையருளால், ஏழைகளிலும் ஏழைகளுக்கு வசதியும் மாண்பும் வழங்கி, உலகில் கிறிஸ்தவப் பிறரன்பின் துணிச்சலான மறைப்பணியாளராக மாறினார் என்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு நண்பர்களே, நம் சந்திப்பை செபத்தோடு தயார் செய்வோம், அதனால், இப்பயணம், உங்கள் நாட்டினர் அனைவருக்கும், அமைதி மற்றும் நன்மை நிறைந்த கனிகளைக் கொண்டுவரும் என, தனது காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2019, 14:38