பல்கேரியா அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை உரையாற்றுகிறார் பல்கேரியா அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை உரையாற்றுகிறார் 

பல்கேரிய அரசுத் தலைவர் மாளிகையில் திருத்தந்தையின் உரை

புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் முதல் அமர்வுகளில் தலைமை தாங்கியபோது, கிறிஸ்தவ சபைகளுக்கிடையே ஒன்றிப்பை வளர்ப்பதில், முழு ஊக்கமும், ஆதரவும் அளித்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

பல கலாச்சாரங்களும், நாகரீகங்களும் சந்திக்கும் இடம், கிழக்கு ஐரோப்பாவுக்கும் தெற்கு ஐரோப்பாவுக்கும் இணைக்கும் பாலம், அண்மை கிழக்கு நாடுகளுக்கு வாயில், தொன்மைமிக்க கிறிஸ்தவ வேர்களைக் கொண்ட நாடு, பன்மைதன்மைகளை மதித்து, அவற்றை, பிரிவினைகளின் ஆதாரமாக நோக்காமல், வளர்ச்சியின் வாய்ப்பாகக் கருதும் பூமி என பல்வேறு பெருமைகளைக் கொண்ட பல்கேரியா நாட்டில், திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சிந்தனை சுதந்திரத்திற்காகப் போராடி, பல்வேறு துன்பங்களை, அரசின்கீழ் அனுபவித்த Atanas Burov அவர்களின் பெயர்கொண்ட இந்த வளாகத்தில், அரசுத் தலைவர், அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும், என் வாழ்த்துக்களையும் நன்றியையும் வெளியிடுகின்றேன்.

மனித மாண்பை மதிக்கும் பல்கேரிய மக்கள்

அனைத்து கிறிஸ்தவ சபைகளின் அங்கத்தினர்கள், யூத மற்றும் இஸ்லாம் சமூகத்தினரை வாழ்த்தும் அதேவேளையில், அனைத்து மதத்தினரையும் இன்முகத்துடன் வரவேற்று, அதன் வழியாக இணக்க வாழ்வுக்கும், கலாச்சார வளர்ச்சிக்கும், மனித மாண்பு மதிக்கப்படுவதற்கும் உதவும் பல்கேரிய மக்களைப் பாராட்டுகிறேன்.

திருப்பீடப் பிரதிநிதி ரொங்காலி

2002ம் ஆண்டு மே மாதம் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் இந்நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதையும், ஏறத்தாழ 10 ஆண்டுகள் பேராயர் ஆஞ்சலோ ஜூசப்பே ரொங்காலி அவர்கள் இந்த சோஃபியா நகரில் திருப்பீடப் பிரதிநிதியாக பணியாற்றியதையும் இத்திருத்தூதுப் பயணம் மீண்டும் நினைவுக்குக் கொணர்கிறது. கிறிஸ்தவர்களிடையே உடன்பிறந்த உணர்வுகொண்ட ஒத்துழைப்பிற்காக  சோர்வின்றி பணியாற்றிய புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், தான் துவக்கிய 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் முதல் அமர்வுகளில் தலைமை தாங்கியபோது, கிறிஸ்தவ சபைகளுக்கிடையே ஒன்றிப்பை வளர்ப்பதில், முழு ஊக்கமும், ஆதரவும், அளித்தார். இறைபராமரிப்புடன் கூடிய இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, 1968ம் ஆண்டு முதல், அதாவது, ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒவ்வோர் ஆண்டும் புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியஸ் விழாவின்போது, இந்நாட்டின் உயர்மட்டக் குழு ஒன்று வத்திக்கானிற்கு பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஐரோப்பாவின் இணை பாதுகாவலர்களான இவ்விரு புனிதர்கள்தான் சிலாவிய மக்களுக்கு நற்செய்தி அறிவித்ததுடன், அவர்களின் கலாச்சார வளர்ச்சிக்கும் உதவியவர்கள்.

பல்கேரியா வழங்கும் பாதுகாப்பு

எதிர்காலத்தின் மீது நம்பிக்கையிழந்து, அண்மைக் காலங்களில், 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், புதிய வேலைவாய்ப்புக்களைத் தேடி குடிபெயர்ந்துள்ளதும், மக்கள் பிறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளதும், பல கிராமங்களும், நகர்களும், மக்களற்ற இடங்களாக மாறியுள்ளதைக் காட்டுகிறது. அதேவேளை, போர்கள், மோதல்கள், கொடிய வறுமை போன்றவற்றிலிருந்து தப்பித்து, பணக்கார ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல விரும்பும் ஏனைய நாடுகளின் மக்கள், தாங்கள் கடந்து செல்வதற்குகந்த பாதுகாப்பான இடமாக, பல்கேரியாவை கருதி, பயன்படுத்துகின்றனர்.

நாட்டை விட்டு குடிபெயர விழையும் இளையோரின் சூழல்களைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு நல்வாழ்வை அமைத்துக் கொடுக்க முனையும் அரசியல் தலைவர்களின் முயற்சியையும் அறிந்திருக்கிறேன். அதே வேளை, உங்கள் உதவியை நாடி, வெளியிலிருந்து, உங்கள் கதவுகளைத் தட்டும் மக்களுக்கு, உங்கள் இதயங்களைத் திறந்துவிடுங்கள். பல்வேறு கலாச்சாரங்களுக்கும், இனங்களுக்கும், நாகரீகங்களுக்கும், மதங்களுக்கும் பாலமாகச் செயல்படும் இந்நாட்டின் மக்களை, கடவுள் ஆசீர்வதிப்பாராக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 May 2019, 11:54