"சுரங்கத் தொழிலும், பொது நலனும்" என்ற தலைப்பில், வத்திக்கானில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுடன்.... "சுரங்கத் தொழிலும், பொது நலனும்" என்ற தலைப்பில், வத்திக்கானில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுடன்.... 

பூர்வீகஇன சமுதாயங்கள் மீது சிறப்பு கவனம் அவசியம்

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை வருங்காலத் தலைமுறைகள் வாழ்வதற்கேற்ற இடமாக அமைக்க வேண்டும் என்ற இலக்கை, ஒருபோதும் மறவாமல் செயல்பட வேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

வருங்காலத் தலைமுறைகள் வாழ்வதற்குரிய ஒரு பூமிக்கோளத்தை விட்டுச்செல்வது, முதலும், முக்கியமுமாக, நம் அனைவரையும் சார்ந்து உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட ஏறத்தாழ அறுபது பிரதிநிதிகளிடம் கூறினார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, "சுரங்கத் தொழிலும், பொது நலனும்" என்ற தலைப்பில், வத்திக்கானில் நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை, மே 3, இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியின் வருங்காலம், நம் குழந்தைகளின் வருங்காலம், மற்றும் வருங்காலத் தலைமுறைகளைப் பாதிக்கும் விவகாரங்கள் குறித்து, மிகுந்த அக்கறையுடன் இந்தக் கருத்தரங்கில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றது குறித்து  பாராட்டிய திருத்தந்தை, நமது இப்பூமியை வாழ்வதற்கேற்ற இடமாக அமைக்க வேண்டும் என்ற இலக்கை ஒருபோதும் மறவாமல் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இந்தக் கருத்தரங்கில், பல்வேறு கிறிஸ்தவ சபைகள் மற்றும் மதங்களின் பிரதிநிதிகளும், சுரங்கத்தொழில் நிறுவனப் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளித்தது குறித்து நன்றியும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பொது நலனுக்காகச் சுரங்கத் தொழில் என்ற தலைப்பில் இந்தப் பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றுள்ளதால், அதையொட்டிய மூன்று கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்த,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து பொருளாதார நடவடிக்கைகள் போன்று இருக்கின்ற சுரங்கத் தொழில், முதலில், முழு மனிதக் குடும்பத்தின் நலனுக்காக ஆற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வருகிற அக்டோபர் மாதத்தில், அமேசான் குறித்த ஆயர்கள் மாமன்றம் நடைபெறவிருப்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, பூர்வீக இன குழுக்கள் மற்றும் அவர்களின் பாரம்பரியக் கலாச்சாரங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுமாறும், மிகவும் நலிந்த இந்த மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட்டு, அவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு மனிதரும் கடவுளின் கண்களில் விலையேறப்பெற்றவர்கள், சமுதாயத்தில் எந்நிலையில் இருந்தாலும், அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் புனிதமானவை மற்றும் தவிர்க்க முடியாதவை, சுரங்கத் தொழில்களில் மனிதரின் நலன் மற்றும் பாதுகாப்பு மீது அக்கறை காட்டப்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 May 2019, 14:39