ஸ்காப்பியெ அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை ஸ்காப்பியெ அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை 

வட மாசிடோனியாவில் திருத்தந்தைக்கு வரவேற்பு

திருத்தந்தையே, தங்களின் வார்த்தைகள் செயல்களோடும், செயல்கள், மனித சமுதாயத்தின் உண்மையான தேவைகளுடனும் ஒத்திணங்கிச் செல்கின்றன – வட மாசிடோனிய அரசுத்தலைவர்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

மே 7, இச்செவ்வாய் உள்ளூர் நேரம் காலை 7.50 மணிக்கு, சோஃபியாவிலுள்ள திருப்பீட தூதரகத்தில் தனக்கு உதவிகள் செய்த அனைவருக்கும் நன்றி சொல்லி, விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். விமான நிலையத்தில் பல்கேரிய பிரதமர் திருத்தந்தையை வரவேற்று நன்றி சொல்லி, வட மாசிடோனியாவிற்கு வழியனுப்பி வைத்தார். 55 நிமிடங்கள் விமானப் பயணம் செய்து, வட மாசிடோனியா தலைநகர் Skopje நகர் விமானத்தளத்தை, உள்ளூர் நேரம் காலை 8.15 மணிக்குச் சென்றடைந்தார் திருத்தந்தை. Skopje நகரில் திருத்தந்தை நிகழ்த்திய ஒருநாள் நிகழ்வுகள் அனைத்தும், அந்நகரில், 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி பிறந்த புனித அன்னை தெரேசாவை மையம் கொண்டிருந்தன என்று சொன்னால் மிகையாகாது.

வட மாசிடோனியா அரசுத்தலைவர் Gjorge Ivanov அவர்களும், பிரதமர் Zoran Zaev அவர்களும், விமானத்திற்குள்ளே சென்று திருத்தந்தையை வரவேற்றனர். விமானத்தளத்தில், மரபு ஆடைகளை அணிந்திருந்த இரு சிறார், தட்டுகளில், ரொட்டி, உப்பு மற்றும் தண்ணீர் வைத்து திருத்தந்தையை வரவேற்றனர். பின்னர், காரில் ஏறி, அங்கிருந்து 22.6  கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அரசுத்தலைவரும், பிரதமரும், திருத்தந்தையுடன் சென்றனர். அந்த மாளிகையில் திருத்தந்தைக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன், அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது. முதலில் அங்குள்ள ஓர் அறையில், அரசுத்தலைவர் Gjorge Ivanov அவர்களுடன் தனியே உரையாடிய பின்னர், அதற்கு அருகிலுள்ள வேறோர் அறையில் பிரதமர் Zoran Zaev அவர்களுடனும் தனியே உரையாடினார் திருத்தந்தை. பரிசுப்பொருள்களும் பரிமாறப்பட்டன. அதன்பின்னர் அரசுத்தலைவர் மாளிகையிலுள்ள மொசைக் அறையில், வட மாசிடோனிய, அரசு மற்றும் தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் பிரிதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்தார் திருத்தந்தை. அச்சந்திப்பில் முதலில் அரசுத்தலைவர் Ivanov அவர்கள், மாசிடோனிய குடிமக்கள் அனைவரின் சார்பாக திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார்.

அரசுத்தலைவர் Ivanov

இந்த வரலாற்று சிறப்புமிக்க திருத்தூதுப் பயணம், மாசிடோனியாவிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவில் இடம்பெறுகின்றது. திருத்தந்தையே, இந்நாடு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையவும், இந்நாட்டின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி. மனித வாழ்வின் புனிதம், மனிதரின் ஒருங்கிணைந்த ஆளுமை, பன்மைத்தன்மையின் மாண்பு ஆகியவை பற்றி வலியுறுத்தி வருவதற்கு நன்றி. திருத்தந்தையே, தங்களின் வார்த்தைகள் செயல்களோடும், செயல்கள், மனித சமுதாயத்தின் உண்மையான தேவைகளுடனும் ஒத்திணங்கிச் செல்கின்றன. எனவே, அமைதி, ஒன்றிப்பு, சமத்துவம், சமுதாய நீதி, கருத்து சுதந்திரம், மனச்சான்று மற்றும் சமய சுதந்திரம், நீடித்த வளர்ச்சி, சட்ட விதிமுறைகள் ஆகியவை நோக்கிய தங்களின் முயற்சிகள், இவ்வுலகில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அன்பு, இரக்கம், தாழ்மை மற்றும் சேவையின் உமது பாதையை, மாசிடோனியர்களாகிய நாங்களும் பின்பற்ற வேண்டும்.... இவ்வாறு அரசுத்தலைவர் உரையாற்றினார். பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், வட மாசிடோனியா குடியரசுக்கு, தனது முதல் உரையை வழங்கினார். இச்சந்திப்பை நிறைவு செய்து, அவ்விடத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள புனித அன்னை தெரேசா நினைவிடத்திற்குச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 May 2019, 16:12