குடும்ப வேளாண்மையில், பெண்களின் பங்களிப்பு குடும்ப வேளாண்மையில், பெண்களின் பங்களிப்பு  

FAO பன்னாட்டு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி

குடும்பங்கள் வேளாண்மையில் ஈடுபடும்போது, அங்கு, பெண்களின் பங்களிப்பு கூடுகிறது என்பதையும், பெண்களின் அறிவுத்திறன், பல பிரச்சனைகளைத் தீர்க்கும் என்பதையும் உணர்த்தும் திருத்தந்தையின் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உறவுகளின் வலைத்தளத்தால் உருவாகும் குடும்பம், மற்றவர்களோடும், நம்மைச் சுற்றியுள்ள உலகோடும் எவ்வாறு வாழ்வது என்பதைச் சொல்லித் தருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனமான FAO, உரோம் நகரில் நடத்திவரும் ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு, திருத்தந்தை வழங்கியச் செய்தி, இந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர், ஹோஸே கிராசியானோ த சில்வா அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

2019ம் ஆண்டு முதல் 2028ம் ஆண்டு முடிய அடுத்த பத்து ஆண்டுகள், குடும்பங்களை விவசாயத்தில் ஈடுபடுத்தும் ஆண்டுகளாக உருவாக்க வேண்டுமென, FAO நடத்தும் இக்கருத்தரங்கின் முயற்சியை, திருத்தந்தை, தன் செய்தி வழியே பாராட்டியுள்ளார்.

"பட்டினியின் முடிவு, உணவு பாதுகாப்பு, முன்னேற்றமடைந்த சத்துணவு, மற்றும் நீடித்திருக்கக்கூடிய வேளாண்மை" என்ற இலக்குகளைக் கொண்டுள்ள 2030ம் ஆண்டு திட்டத்திற்கு, இக்கருத்தரங்கு நல்லதொரு தயாரிப்பு என்று, திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வேளாண்மையில் குடும்பங்கள் ஈடுபடவேண்டும் என்பதை வலியுறுத்தும்போது, அதில், பெண்களின் பங்களிப்பு கூடுகிறது என்பதையும், பெண்களின் அறிவுத்திறன், பல பிரச்சனைகளைத் தீர்க்கும் என்பதையும் நாம் உணர்கிறோம் என்று திருத்தந்தை இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேளாண்மையைக் குறித்தும், குறிப்பாக, வேளாண்மையும், பூமியின் பாதுகாப்பும் எவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது என்பது குறித்தும், இளையோருக்கு கல்வி புகட்டும் தேவை கூடியுள்ளது என்பதையும், திருத்தந்தையின் செய்தி வலியுறுத்துகிறது.

வேளாண்மை, மற்றும் குடும்பம் ஆகியவற்றின் மாண்பை இளையோர் உணரும்படி செய்வது, அனைத்து அரசுகள், மற்றும் உலக நிறுவனங்களின் முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும் என்ற வேண்டுகோளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியில் விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2019, 14:30