அமெரிக்க யூதமத அமைப்பின் உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை அமெரிக்க யூதமத அமைப்பின் உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை  

திருத்தந்தை, அமெரிக்க யூதமத அமைப்பினர் சந்திப்பு

நல்ல உடன்பிறப்பு உணர்வு கொண்ட உறவுகளை உருவாக்குவது, ஒரு கொடை, அதேநேரம், அது, கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற அழைப்பு

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

வருங்காலத்தின் முக்கியத்துவத்தை நாம் மனதில் கொண்டிருந்தால், வருங்காலத்தின் அமைதி பற்றி நாம் கனவு கண்டால், சமுதாயத்தில் பெண்களின் பங்களிப்புக்கு நாம் இடமளிக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார்.

அமெரிக்க யூதமத அமைப்பின் நாற்பது உறுப்பினர்களை, மார்ச் 08, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகை, அனைவருக்கும் ஓர் இல்லமாக அமைப்பதில், பெண்களின் ஈடுசெய்ய முடியாத பங்கு  பற்றி, மார்ச் 8ம் நாளாகிய இன்று சில வார்த்தைகள் சொல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்.

பெண்கள் இந்த உலகை அழகுள்ளதாக அமைத்து, அதைப் பாதுகாத்து, அதை உயிரூட்டம் பெறச் செய்கின்றனர் என்றும், அமைதி பெண்களிடமிருந்து பிறந்து, அன்னையரின் கனிவை அது தூண்டிவிடுகின்றது, எனவே, அமைதி பற்றிய கனவு, பெண்கள் பக்கம் நம் எண்ணங்களைத் திருப்புவதால், அது உண்மையாகிறது என்றும் திருத்தந்தை கூறினார்.

யூதர்களுக்கு எதிரான தாக்குதல்

நல்ல உடன்பிறப்பு உணர்வு கொண்ட உறவுகளை உருவாக்குவது, ஒரு கொடை, அதேநேரம், அது, கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற அழைப்பு என்றும் உரையாற்றிய திருத்தந்தை, தற்போது, பல்வேறு நாடுகளில் இடம்பெற்றுவரும், யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

யூதர்களுக்கு எதிரான எந்த ஒரு சிறு தாக்குதல்கூட, மிகப்பெரும் மனிதத் துன்பத்திற்கு இட்டுச்செல்லும் என்பதை வரலாறு நமக்குக் கற்பித்துள்ளது என்றும், ஒரு கிறிஸ்தவரின் யூதர்களுக்கு எதிரான எந்த ஒரு செயலும், அவர் தனது தொடக்கத்தைப் புறக்கணிப்பதாக இருக்கும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

பல்சமய உரையாடல்

காழ்ப்புணர்வு மற்றும் யூதமத விரோத மனநிலைக்கு எதிராகச் செயல்படுவதில், பல்சமய உரையாடல், முக்கிய கருவியாக அமைந்துள்ளது என்றும், செல்வர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையேயுள்ள இடைவெளி, ஒவ்வொரு நாளும் வளர்ந்துவரும் இன்றைய உலகில், வறியோர், நலிந்தோர், நோயாளர், சிறார், மற்றும் வயது முதிர்ந்தோரை நாம் பாரமரிப்பதற்கு அழைப்புப் பெற்றுள்ளோம் என்றும், திருத்தந்தை கூறினார்.

மனித சமுதாயத்திற்கு நாம் ஆற்றும் பணியிலும், நம் கலந்துரையாடலிலும், தாங்கள் முழுவதும் ஈடுபடுத்தப்படுவதற்காக இளையோர் காத்திருக்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, யூத-கிறிஸ்தவ உரையாடலில், வருங்காலத் தலைமுறைகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 March 2019, 15:12