திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்கும் மொராக்கோ மன்னர் 6ம் முகமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்கும் மொராக்கோ மன்னர் 6ம் முகமது 

மன்னர் 5ம் முகமது நினைவிடம்

மன்னர் 5ம் முகமதுவின் நினைவிடத்தில், மன்னர் ஐந்தாம் முகமதுவின் கல்லறையும், 1983ம் ஆண்டில், தன் 48 வயதில் இறந்த அவரது மகன், இளவரசர் மௌலாய் அப்தெல்லா அவர்களின் கல்லறையும் உள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏறத்தாழ ஒருமணி நேரம் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியை முடித்தபின், மன்னர் 5ம் முகமதுவின் சமாதி இருக்கும் நினைவிடம் நோக்கி நடந்து சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.  மன்னர் 5ம் முகமது அவர்கள், 1927 முதல் 1953ம் ஆண்டு வரை சுல்தானாக மொராக்கோவில் செயல்பட்டார். 1953ம் ஆண்டு முதல் 55ம் ஆண்டு வரை, பிரான்ஸ் அரசால் ஏமாற்றப்பட்டு, முதலில் பிரான்சின் கோர்சிகா தீவுக்கும், பின்னர் மடகாஸ்கருக்கும் எடுத்துச் செல்லப்பட்டார். இரண்டு ஆண்டுகள் மொராக்கோவிற்கு வெளியே வாழ்ந்த  மன்னர் 5ம் முகமது, தன் நாட்டிற்கு திரும்பி வந்ததும், மீண்டும் சுல்தானாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், 1957ல் மன்னராக முடிசூடி, 1961ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி அவர் இறக்கும்வரை மொராக்கோவில் ஆட்சி புரிந்தார். ரபாட் நகரில் எழுப்பப்பட்டுள்ள அவரின் சமாதியுடன் கூடிய நினைவகம், ஏறத்தாழ பத்தாண்டுகளில் பல்வேறு கலைஞர்களின் உதவியுடன் கட்டப்பட்டுள்ளது. 1500 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவகம், இத்தாலிய வெள்ளை பளிங்கு கற்களைக் கொண்டு எழுப்பப்பட்டு, அதன் கூரைப் பகுதி, பிரமிடு வடிவில், பச்சை நிறத்தில் கட்டப்பட்டுள்ளது.

மொராக்கோ நாட்டின் தேசியக் கொடியில் சிகப்பு நிறத்தின் நடுவே பச்சை வண்ண நட்சத்திரத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கும் வகையில், இந்த நினைவுக் கட்டிடத்தின் கூரைக்கும் பச்சை வண்ணம் தரப்பட்டுள்ளது. இந்த பிரமிடு வடிவ கூரையின் உட்பகுதி தங்க இழைகளால் அழகுபடுத்தப்பட்டுள்ளது.  இந்த நினைவகத்திற்குள் மன்னர் ஐந்தாம் முகமதுவின் கல்லறையும், 1983ம் ஆண்டில், தன் 48 வயதில் இறந்த அவரது மகன், இளவரசர் மௌலாய் அப்தெல்லா அவர்களின் கல்லறையும் உள்ளன.

இந்த நினைவிடத்தை சனிக்கிழமை மாலையில் சந்திக்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 March 2019, 15:28