திருத்தூது மன்னிப்பு அவையினருக்கு உரை வழங்கிய திருத்தந்தை திருத்தூது மன்னிப்பு அவையினருக்கு உரை வழங்கிய திருத்தந்தை 

திருத்தூது மன்னிப்பு அவையினரைச் சந்தித்த திருத்தந்தை

இரக்கம், மன்னிப்பு போன்ற மனிதத் தேவைகளை உணர்வதற்கும், கடைபிடிப்பதற்கும் நேரமின்றி, மிக வேகமாகச் செல்லும் இவ்வுலகில், திருத்தூது மன்னிப்பு அவையின் பணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவனின் மன்னிப்பை அடைய விழையும் விசுவாசிகள், மீட்பை சுவைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் 'இரக்கத்தின் அருள்பணி'யை மேற்கொள்வது, திருத்தூது மன்னிப்பு அவையின் முக்கிய நோக்கமாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த இவ்வவையின் உறுப்பினர்களிடம் கூறினார்.

திருத்தூது மன்னிப்பு அவை உரோம் நகரில் ஏற்பாடு செய்திருந்த 30வது கல்வித் தொடரை நிறைவு செய்திருந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்களையும், இத்தொடரை வழிநடத்தியவர்களையும் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிப்பு அவை நீண்ட காலமாக திருத்தந்தையருக்கு உதவி வந்துள்ளதைப் பாராட்டிப் பேசினார்.

இரக்கம், மன்னிப்பு போன்ற மனிதத் தேவைகளை உணர்வதற்கும், கடைபிடிப்பதற்கும் நேரமின்றி, மிக வேகமாகச் செல்லும் இவ்வுலகில், திருத்தூது மன்னிப்பு அவையின் பணிகள் இன்னும் உயர்ந்த முக்கியத்துவம் பெறுகின்றன என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

நான்காவது அருளடையாளமான ஒப்புரவு அருளடையாளம், அருள்பணியாளர்கள் அனைவரையும் தூய்மைப்படுத்தும் அருளடையாளம் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிப்பு பெற்ற அருள்பணியாளர், மற்றவர்களுக்கு மன்னிப்பை வழங்கும் பணியாளராக மாறுகிறார் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

ஒப்புரவு அருளடையாளத்தின் வழியே, கல்லான இதயத்தைக் களைந்துவிட்டு, சதையாலான இதயத்தை பெறுகிறோம் (எசே. 11,19) என்றும், மனம் திருந்திய மகனாக, தந்தையின் இல்லம் திரும்புகிறோம் (லூக்கா 15,11-32) என்றும் திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இன்றைய உலகில் ஒப்புரவு அருளடையாளம் சரியான வழிகளில் புரிந்துகொள்ளப்படாமல் இருந்தாலும், ஒப்புரவினால் உருவாகும் நன்மைகளை, ஓர் அருளடையாளம் என்ற முறையிலும், சட்டங்கள் வழியிலும் இத்தனை நூற்றாண்டுகள் காத்து வந்திருப்பது, திருஅவையின் ஞானத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதை தன் உரையில் தெளிவுபடுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒப்புரவு அருளடையாளத்தைத் தேடி வரும் விசுவாசிகளுக்கு தாராள மனதுடன் செவிமடுத்து, அவர்களை, புனிதத்தின் பாதையில் வழிநடத்துவது, அனைத்து அருள்பணியாளர்களின் மிக முக்கியமான கடமை என்பதை, தன் உரையின் இறுதியில் வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, இந்தப் புனிதப் பணியின் வழியே ஒவ்வொருவரும் தங்களையே புனிதமாக்கவும், பிறரைப் புனிதமாக்கவும் இறைவன் துணைபுரியவேண்டும் என்று தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 March 2019, 14:06