மூவேளை செப உரையின்போது - 100319 மூவேளை செப உரையின்போது - 100319 

எத்தியோப்பிய விமான விபத்து – திருத்தந்தையின் செபங்கள்

எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளாகி, 157 பேர் உயிரிழந்ததையொட்டி, திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியொன்றை, கர்தினால் பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தானும், வத்திக்கானில் பணியாற்றும் திருப்பீட அதிகாரிகள் அனைவரும் இணைந்து, இவ்வாரத்தில், தங்கள் ஆண்டு தியானத்தை மேற்கொள்ளவிருப்பதைக் குறித்து, தன் மூவேளை செப உரையின் இறுதியில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களுக்காக செபிக்கும்படி மக்களிடம் விண்ணப்பித்தார்.

மார்ச் 10, இஞ்ஞாயிறு மாலை முதல், மார்ச் 15 வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும் இந்த ஆண்டு தியானத்தை, பிளாரன்ஸ் நகரில் உள்ள சான்மினியாத்தோ அல் மோந்தோ துறவு மடத்தின் தலைவர், புனித பெனடிக்ட் துறவு சபையைச் சேர்ந்த அருள்பணி பெர்னார்தோ ஜியான்னி அவர்கள் வழிநடத்துகிறார்.

உரோம் நகருக்கருகே அரிச்சா எனுமிடத்தில் அமைந்துள்ள, தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில், நடைபெறும் இத்தியானத்தில் இதனை வழிநடத்தும் அருள்பணி ஜியான்னி அவர்கள் உட்பட, 66 பேர் கலந்துகொள்கின்றனர். 

மேலும், எத்தியோப்பியா நாட்டின் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி, 157 பேர் உயிரிழந்ததையொட்டி, திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியொன்றை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ளார்.

எத்தியோப்பியாவின் அட்டிஸ் அபாபா நகரிலிருந்து கென்யாவின் நைரோபி நகர் நோக்கிச் புறப்பட்ட எத்தியோப்பிய விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்திற்குள்ளாகி, விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 March 2019, 15:51