ஐக்கிய அரபு அமீரகத்தில் திருத்தந்தை திறந்துவைத்த கிறிஸ்துவின் சிலை மற்றும் குரான் பக்கங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் திருத்தந்தை திறந்துவைத்த கிறிஸ்துவின் சிலை மற்றும் குரான் பக்கங்கள் 

அமீரகத்தில் திறந்து வைக்கப்பட்ட கிறிஸ்துவின் திருவுருவம்

ஐக்கிய அரபு அமீரகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் திரு உருவத்தையும், திருக்குர்ஆன் நூலின் நான்கு பக்கங்களையும், அருங்காட்சியகப் பொருள்களாகத் திறந்துவைத்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், கிறிஸ்துவின் திரு உருவத்தையும், திருக்குர்ஆன் நூலின் நான்கு பக்கங்களையும், அருங்காட்சியகப் பொருள்களாகத் திறந்துவைத்தார்.

அமீரகத்தின் வாரிசு இளவரசர், Sheikh Mohammed bin Zayed Al Nahyan அவர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்ட இவ்விரு முக்கியப் பொருள்களும், அபு தாபியில் அமைக்கப்பட்டுள்ள Louvre அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"கிறிஸ்து தன் காயங்களைக் காட்டுகிறார்" என்ற பெயரில் உள்ள ஒரு திரு உருவம், 16ம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டில் வடிவமைக்கப்பட்ட சிலையாகும். ஒரு சராசரி மனிதரின் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இச்சிலை, கிறிஸ்து, முள்முடி தாங்கி, தன் காயங்களைக் காட்டியவண்ணம் நிற்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது.

800 மற்றும் 1000மாம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட, 'நீல திருக்குர்ஆன்' என்ற நூலின் நான்கு பக்கங்கள், தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.

2017ம் ஆண்டு, நவம்பர் மாதம் திறக்கப்பட்ட Louvre Abu Dhabi அருங்காட்சியகத்தில், பல அரிய கலைப்பொருள்களும், சமயம் சார்ந்த பொருள்களும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2019, 15:07