திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை உரையாற்றுகிறார் திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை உரையாற்றுகிறார் 

சிறியோர்க்கெதிரான பாலியல் முறைகேடுகளை ஒழிக்க அர்ப்பணம்

திருஅவைக்குள்ளும், திருஅவைக்கு வெளியேயும் காணப்படும் எதிர்த்து உறுதியுடன் போராட வேண்டும்

மேரி தெரேசா - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 24, இஞ்ஞாயிறு நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில் முக்கியமான உரையொன்றும் ஆற்றினார். சிறியோர்க்கெதிரான பாலியல் முறைகேடுகள் என்ற தீமையை ஒழிப்பதற்கான நேரம் வந்துள்ளது. பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட, அவற்றிற்குப் பயன்படுத்தப்பட்ட மற்றும் மறக்கப்பட்ட சிறியோர் எங்கெங்கு இருந்தாலும், அவர்கள் சொல்வதைக் கேட்பது, கண்காணிப்பது, பாதுகாப்பது மற்றும் அவர்களைப் பராமரிப்பது, திருஅவையின் நோக்கமாகும். இந்த இலக்கை எட்டுவதற்கு, சிறியோரின் கொடுமையான அனுபவங்களைப் பல்வேறு ஆதாயங்களுக்காக, அடிக்கடி பயன்படுத்துகிற பத்திரிகைகளின் செயல்கள் மற்றும் கருத்தாக்க விவாதங்கள் தன்னைப் பாதிப்பதற்கு அனுமதிக்காமல், அவற்றை விஞ்சி திருஅவை செயல்பட வேண்டும்.

உலகளாவிய சூழல்

இந்தக் கூட்டம், பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட சிறியோரின் துன்பங்களின் தன்மையையும், இவை, வரலாற்றில், அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் சமுதாயங்களில் பரவியுள்ளன என்பதையும், நாம் மீண்டும் உணரச் செய்துள்ளது. பாலியல் முறைகேடுகள், குறிப்பாக, குடும்பங்களில் அதிகளவில் இடம்பெறுவதால், இவை, பலநேரங்களில் வெளிப்படையாகச் சொல்லப்படாமல் உள்ளன. அதனால், உலகில் இவை எந்த அளவிற்குப் பரவியுள்ளன என்பதன் உண்மையான கருத்தை இன்றும்கூட அறிவது கடினமாக உள்ளது. நம் சமுதாயங்களைப் பாதித்துள்ள இந்த கொள்ளைநோயின் கடுமை மற்றும் அது எந்த அளவிற்குப் பரவியிருக்கும் என்பதை அறிவதற்கு, ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஓசியானியா ஆகிய பகுதிகளிலிருந்து கிடைத்திருக்கின்ற புள்ளிவிபரங்களை நோக்குவது நல்லது. என்னைப்பொருத்தவரை, இந்த விவரங்கள்கூட ஓரளவுதான் என நினைக்கிந்றேன். உடல் அளவில், பாலியல் முறையில், மற்றும் மனத்தை வன்முறைக்கு உட்படுத்தும், இக்குற்றத்தை முதலில் செய்பவர்கள், பெற்றோர், உறவினர், சிறுமிகளை மனைவிகளாகக் கொண்டிருக்கும் கணவன்கள் மற்றும் ஆசிரியர்கள் என நினைக்கிறேன். 2017ம் ஆண்டில், யுனிசெப் அமைப்பு, 28 நாடுகளில் எடுத்த ஆய்வின்படி, பத்து சிறுமிகளில் ஒன்பது பேர், தாங்கள் அறிந்த அல்லது தங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களால், பாலியல் வன்செயலில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, ஏறக்குறைய எல்லா இடங்களிலும், எல்லாரையும் பாதிக்கின்ற ஓர் உலகளாவிய பிரச்சனையை நாம் எதிர்கொள்கின்றோம். இருந்தபோதிலும், நம் சமுதாயங்களைக் கடுமையாய்ப் பாதிக்கும் இந்த தீமை, திருஅவைக்குள் இடம்பெறும்போது, அது எந்த விதத்திலும் அதன் கொடூரத்தன்மை குறைவானதாக இல்லை. உண்மையில், இந்த உலகளாவிய பிரச்சனையின் கொடூரம், திருஅவையில் மிகப் பயங்கரமானது மற்றும் அவமானமாக உள்ளது. ஏனெனில், இது, திருஅவையின் நன்னெறி அதிகாரம் மற்றும் அறநெறி நம்பகத்தன்மையோடு முழுவதும் ஒத்துச்செல்லாதது. திருஅவை இந்த தீமைக்கு எதிராகப் போராட அழைக்கப்படுவதாக உணர்கின்றது. ஏனெனில், திருஅவை, சிறியோர்க்கு நற்செய்தி அறிவித்து, அவர்களை, பசிவெறியுடன் அலைகின்ற ஓநாய்களிடமிருந்து பாதுகாக்கவேண்டிய தனது மறைப்பணியின் மையத்தையே இது அசைக்கின்றது. ஒரு முறைகேடு, தன்னிலே, ஒரு தீச்செயல் என்பதால், திருஅவையில், ஒரு முறைகேடு எழுந்தாலும், அது, மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டும். சிறியோர்க்கெதிரான பாலியல் முறைகேடுகள், அதிகாரத்தை எப்போதும் தவறாகப் பயன்படுத்துவதின் விளைவு என்பதால், இப்பிரச்சனையில் அதிகாரமும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். படைகளில் சேர்க்கப்படும் சிறார், பாலியல் தொழில் ஈடுபடுத்தப்படும் சிறார், பசியால் வாடும் சிறார், மனித வர்த்தகத்திற்குப் பலியாகுவோர், புலம்பெர்ந்த சிறார், கைவிடப்பட்ட சிறார் மற்றும் பலரும் இத்தகைய பாலியல் முறைகேடுகளை எதிர்கொள்கின்றனர்.

தீய ஆவியின் வெளிப்பாடு

அதிகாரத்தைக் கடவுளாகப் போற்றுதல், பணம், தற்பெருமை, இறுமாப்பு ஆகிய சிலைவழிபாட்டிற்குப் பலியாக்கப்படும் கொடுமைக்கு முன்னால், பட்டறிவால் தரும் விளக்கங்கள் மட்டும் போதாது. இந்த விளக்கங்கள் இக்குற்றத்திற்கு அர்த்தம் தருவதற்குத் திறனற்றவை. எனவே, இக்குற்றம் வலியுறுத்துகின்ற உள்ளார்ந்த அர்த்தம் என்னவாக இருக்கும் என நாம் கண்டுபிடிக்க வேண்டும். இது தீய ஆவியின் வெளிப்பாடே. இந்த தீமையை ஒழிப்பதற்கு, நம் பொது அறிவு, அறிவியல் மற்றும் சமுதாயம் ஆகியவை வழங்கும் எல்லா நடைமுறைகளையும் எடுப்பதோடு, இதற்கு நம் ஆண்டவர் நமக்குக் கற்றுத்தந்துள்ள தாழ்ச்சி, தன்னையே குறைகூறுதல், செபம் மற்றும் தவம் ஆகிய ஆன்மீக வழிகளைக் கைக்கொள்ள வேண்டும். உலக நலவாழ்வு அமைப்பு, சிறியோரின் பாதுகாப்புக்கான திருப்பீட அவை, சிறியோரின் பாதுகாப்பு கூட்டம் ஆகியவை பரிந்துரைத்துள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில், உருவாக்கப்பட்டுள்ள நடைமுறைகளில், குறிப்பாக, எட்டு கூறுகளில் திருஅவை கவனம் செலுத்த உள்ளது.

எட்டு பரிந்துரைகள்

சிறியோரைப் பாதுகாப்பதற்கு முதலிடம் அளித்தல், திருப்பொழிவு பெற்றோரின் இந்தக் குற்றம் மற்றும் பாவச் செயலின் தீவிரத்தன்மையை ஏற்று செயல்படல், நேர்மையானத் தூய்மைப்படுத்தலைத் துவக்குதல், கற்பெனும் புண்ணியம் குறித்து, குருத்துவ மற்றும் துறவற பயிற்சியில் இருப்பவர்களுக்கு நன்முறையில் கற்பித்தல், இத்தீமைகளுக்கு எதிரான சட்டங்களை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆயர் பேரவைகள் ஆராய்தல், பாதிக்கப்பட்டவருடன் உடன்செல்லுதல், டிஜிட்டல் உலகில் பாலியல் முறைகேடுகள் சார்ந்த இலக்கியங்கள் மற்றும் படங்களுக்கு, பயிற்சி நிலையிலுள்ளோர் அடிமையாகாமல் இருப்பதை உறுதிசெய்தல், உலக அளவில் பாலியல் சுற்றுலாக்களை எதிர்த்தல் ஆகியவற்றில் திருஅவை கவனம் செலுத்தவுள்ளது. இத்தகைய குற்றங்களை யார் செய்திருந்தாலும், அவர்களை நீதியின்முன் கொண்டு வருவதற்குத் தேவையான எல்லா முயற்சிகளையும் திருஅவை எடுக்கும். சிறியோர் பாதிக்கப்படும் எந்த விவகாரத்திலும் திருஅவை ஒருபோதும் மௌனம் காக்காது மற்றும் அதன் கடுமையை உணராமல் இருக்காது.

அருள்பணியாளர், துறவியருக்கு திருத்தந்தை நன்றி

அதேநேரம், பெரும்பாலான அருள்பணியாளர்கள், தங்களின் கன்னிமைக்குப் பிரமாணிக்கமாய் இருப்பதுடன், சில அருள்பணியாளர்களால் அவமானங்கள் ஏற்பட்ட கடினமான இடங்களில், இன்றும் மறைப்பணியாற்றி வருகின்றனர். எனவே தங்களையொத்த சிலரின் வெட்கத்துக்குரிய நடவடிக்கைகள் மத்தியில், ஆண்டவருக்கு முழுவதும் பிரமாணிக்கமாகப் பணியாற்றுகின்ற அருள்பணியாளர்கள் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்கின்ற துறவறத்தார் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். தங்கள் மேய்ப்பர்களின் நன்மைத்தனத்தை நன்கு அறிந்து, அவர்களுக்காகத் தொடர்ந்து செபித்து ஆதரவாக இருக்கின்ற விசுவாசிகளுக்கும் திருத்தந்தை நன்றி தெரிவித்தார்.

தூய்மைப்படுத்தலுக்கு வாய்ப்பு

தூய்மைப்படுத்தலுக்குரிய ஒரு வாய்ப்பாக, இந்த தீமையை எடுத்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருத்தந்தை, எந்தவொரு வேதனை நிறைந்த சூழலிலும் ஆண்டவர் ஒருபோதும் கைவிடுவதில்லை, நம்மைத் தொடர்ந்து காக்கிறார் என்ற நம்பிக்கையில் இறைமக்கள் வாழ்வதையும் குறிப்பிட்டார். தனிப்பட்ட மற்றும் குழுவாக மனமாற்றம் அடைதல், கற்றுக்கொள்வதில் தாழ்ச்சி, மிகவும் நலிந்தவர்க்கு உதவுதல், அவர்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு, புனித தாய்த் திருஅவையின் மக்களும், முழு உலகமும் அர்ப்பணிப்பதன் வழியாக, பாதிக்கப்பட்டவர்க்கு, மிகச் சிறந்த பதில்களை அளிக்க இயலும். மேலும், சிறியோர்க்கெதிரான பாலியல் மற்றும் ஏனைய முறைகேடுகள் என்ற வெறுக்கத்தக்க குற்றங்களை, இப்பூமியிலிருந்து அகற்றுவதற்கு, அனைத்து அதிகாரிகளும், தனிநபர்களும் முயற்சிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உருக்கமுடன் கேட்டுக்கொண்டார். இதுவே, குடும்பங்களிலும், நம் சமுதாயங்களின் பல்வேறு அமைப்புகளிலும் மறைந்துள்ள பல பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோள் என்றும் திருத்தந்தை கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 February 2019, 15:50