தேர்ந்தெடுக்கப்பட்ட இளையோர் பிரதிநிதிகளுடன் மதிய உணவருந்திய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்ட இளையோர் பிரதிநிதிகளுடன் மதிய உணவருந்திய திருத்தந்தை 

இளையோர் பிரதிநிதிகளுடன் மதிய உணவருந்தல்

இந்தியாவுக்கு திருத்தூதுப்பயணம் மேற்கொள்வது குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக திருத்தந்தை கூறியதாக இந்திய இளையோர் பிரதிநிதி தெரிவித்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 26, சனிக்கிழமையன்று காலையில் சாந்தா மரியா லா அந்திகுவா பேராலயத்தின் திருப்பலி பீடத்தை அர்ச்சித்த திருப்பலியை நிறைவேற்றியபின், அங்கிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள, சான் ஹோசே உயர் குருத்துவ பயிற்சி இல்லத்திற்கு இளையோர் பிரதிநிதிகளுடன் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு, திருத்தந்தை, அவருடன் பயணம் செய்தவர்கள், மற்றும், 10 இளையோர் பிரதிநிதிகள் ஆகியோருக்கு மதிய உணவு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது.

34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் பங்குகொள்ள உலகெங்கிலுமிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான இளையோரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 10 பிரதிநிதிகளுள் இந்தியாவிலிருந்து ஒருவரும் இடம் பெற்றிருந்தார். கேரள மாநிலத்திலிருந்து உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் பங்குபெற்ற Bedwin Taitus என்ற இந்த இளைஞரிடம், திருத்தந்தையுடன் அமர்ந்து மதிய உணவை அருந்தியதைப் பற்றி எம் நிருபர் கேட்டபோது, அவருக்கு என்ன சாப்பிட்டோம் என்பது சரியாக நினைவில்லையாம், ஆனால், நிச்சயமாக அது சுவையான பானமா நாட்டு பாரம்பரிய உணவுதான் என்றும், திருத்தந்தையை உற்று நோக்குவதிலும், அவரோடு உரையாடுவதிலும் நேரத்தைச் செலவிட்டாதால், உணவு குறித்து தான் கவனம் செலுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். திருத்தந்தையுடன் உணவு உண்டபோது, உணவு, தனக்கும், ஏனைய பிரதிநிதிகளுக்கும், இரண்டாம் பட்சமாகவே இருந்தது என்கிறார் Bedwin Taitus.

இந்தியாவுக்கு திருத்தந்தை திருத்தூதுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் அவருடன் உரையாடல் இடம்பெற்றதாகவும், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக திருத்தந்தை கூறியபோது, தான் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும் அந்த இந்திய இளையோர் பிரதிநிதி தெரிவித்தார். கேரள மாநிலம் குறித்தும் திருத்தந்தை அறிந்து வைத்திருக்கிறார் என்பதை அறிந்தபோது தனக்கு மேலும் மகிழ்ச்சி ஏற்பட்டதாக உரைத்த Bedwin  அவர்கள், மற்றவர்களின் துன்பங்கள் குறித்து திருத்தந்தை அறிந்து வைத்திருக்கிறார் என்பதை தான் கண்டபோது, அது ஆச்சரியமாக மட்டுமல்ல, பேருவகை தருவதாகவும் இருந்தது என்றார்.

மற்றவர்களின் குரல்களுக்கு செவிமடுப்பதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எடுத்துக்காட்டு நம் அனைவருக்கும் நல்லதொரு பாடமாக உள்ளது என்பதை திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் இடைக்கால இயக்குனர், அலெசாந்த்ரோ ஜிசோத்தியும் எடுத்துரைத்துள்ளார்.

தங்கள் குரல் செவிமடுக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய கால இளைஞர்களின் ஏக்கமும், விண்ணப்பமுமாக உள்ளது. அந்த குரலுக்கு திருத்தந்தை செவிமடுத்துவருவதை நம்மால் பல்வேறு நிகழ்வுகளிலும், இந்த பிரதிநிதிகளுடன் இணைந்த மதிய உணவருந்தலிலும் காணமுடிந்தது என்கிறார் ஜிசோத்தி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2019, 15:39