இறுதித் திருப்பலியில் மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இறுதித் திருப்பலியில் மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

இளையோர் நாள் இறுதித் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

நற்செய்தியின் உண்மைகளை நடைமுறைப்படுத்த, இளையோர் முன்வரும் வேளையில், நாசரேத்தில் எழுந்த கேள்விகள் நம்மிடையிலும் எழுகின்றன. இந்த இளையோர் நாம் காண வளர்ந்தவர்கள்தானே? என்பன போன்ற கேள்விகளை நாமும் கேட்கிறோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார். (லூக்கா 4:20-21)

அன்பு நண்பர்களே, இயேசுவின் பணிவாழ்வு இச்சொற்களுடன் ஆரம்பமானது.  குழந்தைப்பருவம், மற்றும் இளமைப்பருவத்தைக் கழித்த நாசரேத்து ஊரின் தொழுகைக்கூடத்தில் அவரது பணிவாழ்வு துவங்கியது. "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்ற சொற்கள் வழியே, எதிர்காலக் கனவுகளை, நிகழ்கால நிகழ்வுகளாக இயேசு மாற்றினார்.

கடவுளின் 'இப்போது' என்ற கருத்து, இயேசுவில் இரத்தமும், சதையும் கொண்ட ஒரு நிகழ்வாக மாறியது. இயேசு கூறியதை நம்புவதற்கு அங்கிருந்த சிலர் மறுத்தனர் "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?" (லூக்கா 4:22) என்று கூறினர். நம் மத்தியிலும், இவ்வாறு நிகழலாம். கடவுள் இவ்வளவு அருகில் இருக்கமுடியும், இவ்வளவு எளிமையானவராக, அறிமுகமானவராக இருக்கமுடியும் என்பதை நாம் நம்புவதில்லை.

கடவுளை, தூரத்தில் வைத்துப் பார்க்க விழைந்த நாசரேத்து மக்களைப்போல் நாமும் நடந்துகொள்கிறோம். கடவுள் தம்மை ஒளிமிகுந்த ஒரு காட்சியாக, வானதூதராகக் காட்ட விழையாமல், நாம் தினசரி காணக்கூடிய ஓர் எளிய மனிதப் பிறவியாகக் காட்ட விழைந்தார்.

நற்செய்தியின் உண்மைகளை நடைமுறைப்படுத்த, இளையோர் முன்வரும் வேளையில், நாசரேத்தில் எழுந்த கேள்விகள் நம்மிடையிலும் எழுகின்றன. இந்த இளையோர் நாம் காண வளர்ந்தவர்கள்தானே? இவர்கள், மரியா, யோசேப்பின் பிள்ளைகள் தானே? நம் வீதிகளில் விளையாடி, நம் வீட்டுச் சன்னல் கண்ணாடிகளை உடைத்தவர்கள்தானே? என்ற கேள்விகளை நாமும் கேட்கிறோம். இவ்வாறு கேட்பதன் வழியே, இளையோர் மேற்கொள்ள விழையும் நற்செய்திப் பணிகளின் வேகத்தைக் குறைக்க முயல்கிறோம்.

அன்பு இளையோரே, நாசரேத்தில் நிகழ்ந்தது, உங்கள் நடுவிலும் நிகழலாம். உங்கள் அழைப்பு, பணி ஆகியவை, நீங்கள் வாழும் இன்றையப் பொழுதோடு தொடர்பின்றி, ஏதோ பிற்காலத்தில் நிகழப்போவதாக நீங்கள் நினைக்கலாம்.

இளமை என்பது, காத்திருக்கும் காலம் என்று நீங்கள் எண்ணக்கூடும். அவ்வாறு நீங்கள் காத்திருக்கும்போது, உங்கள் எதிர்காலத்தை முற்றிலும் பாதுகாப்பாக மாற்றுவதாகச் சொல்லி, ஒரு கற்பனை உலகை உங்களுக்காக மற்றவர்கள் உருவாக்கக்கூடும்.

அண்மையில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில் ஒரு முக்கிய பலனை அடைந்தோம். இருவேறு தலைமுறையினருக்கிடையே மனம் திறந்த உரையாடலும், கவனமுடன் செவிமடுத்தலும் நடைபெற்றால், இரு தலைமுறைகளும் மிகுந்த பலனடைய முடியும் என்பதை உணர்ந்தோம். நாளையத் தலைமுறையினருடன் பணியாற்றுவதற்கு, இன்றே நாம் துவங்கலாம்.

இளையோரே, நீங்கள் தூரத்து எதிர்காலம் அல்ல. நீங்களே, கடவுளின் 'இப்போது'. கடவுள் உங்களைக் குறித்து கண்டுள்ள கனவை நனவாக்க இதுவே தகுந்த தருணம். இன்று துவங்கும் உங்கள் பணியின் மீது முழு ஈடுபாடு கொள்ளுங்கள். இறையடியார், பேத்ரோ அருப்பே (Pedro Arrupe) அவர்கள் கூறியுள்ளதுபோல், நீங்கள் எதன்மீது அன்பு கொள்கிறீர்களோ, அதுவே, உங்கள் பணியாக மாறும்.

இன்று, இப்போது, ஒவ்வொரு செயல்பாட்டிலும் இயேசு பிரசன்னமாகியிருக்கிறார். இயேசு உங்களுக்காக நிர்ணயித்துள்ள பணி, இன்றே துவங்குகிறது. இந்தப் பணி உங்கள் வாழ்வாக மாறட்டும்!

'ஆம்' என்று சொன்ன அன்னை மரியா, இந்நாள்களில் நம்முடன் சிறப்பான முறையில் உடன் நடந்தார். அந்த அன்னையின் 'ஆம்' என்ற சம்மதம், தூய ஆவியாரை உங்கள் மீது பொழியச் செய்யும் கதவாக விளங்கட்டும்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2019, 15:18