சிஸ்டைன் சிற்றாலய பாடகர்குழு சிஸ்டைன் சிற்றாலய பாடகர்குழு  

சிஸ்டைன் சிற்றாலய பாடகர்குழு திருவழிபாட்டு அலுவலகத்துடன்

சிஸ்டைன் பாடகர்குழுவின் அனைத்து துறைகளையும் வழிநடத்தும் பொறுப்பு, பேரருள்திரு மரினி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் சொந்த விருப்பத்தால் வெளியிடும் ஓர் அப்போஸ்தலிக்க கடிதம் வழியாக, சிஸ்டைன் பாப்பிறை பாடகர் குழுவை, திருத்தந்தையின் திருவழிபாட்டு அலுவலகத்துடன் சனவரி 19, இச்சனிக்கிழமையன்று இணைத்துள்ளார்.

திருத்தந்தையின் திருவழிபாட்டு அலுவலகம், திருத்தந்தையின் திருவழிபாடுகளில் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கின்றது, அதேநேரம், திருத்தந்தையரின் பெருவிழாத் திருவழிபாடுகளில், இந்தப் பாடகர்குழு, நூற்றாண்டுகளாக, வழங்கிவரும் மதிப்புமிக்க கலைநயம்கொண்ட மற்றும் இசை மரபின் பாதுகாவலராகவும், ஊக்குனராகவும், இந்த அலுவலகம் செயலாற்றி வருகின்றது என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.

சிஸ்டைன் பாப்பிறை பாடகர்குழு, திருத்தந்தையரின் பெரிய திருவழிபாடுகளில் நேரிடைத் தொடர்பை எப்போதும் கொண்டிருக்கின்றது எனவும் உரைத்துள்ள திருத்தந்தை, இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளில், திருவழிபாடு பற்றிய Sacrosanctum Concilium என்ற பகுதியில், எண்கள் 28,29 ஆகியவற்றின் அடிப்படையில், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், திருத்தந்தை, அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பேரருள்திரு குய்தோ மரினி

சிஸ்டைன் பாப்பிறை பாடகர்குழுவின் தலைவராக, திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகளுக்குப் பொறுப்பாளரான, பேரருள்திரு குய்தோ மரினி அவர்களை திருத்தந்தை நியமித்துள்ளார்.

சிஸ்டைன் பாடகர்குழுவின் திருவழிபாடுகள், மேய்ப்புப்பணி, ஆன்மீகம், கலை, கல்வி ஆகிய அனைத்து துறைகளையும் வழிநடத்தும் பொறுப்பையும், பேரருள்திரு மரினி அவர்களிடம் ஒப்படைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1969ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், சிஸ்டைன் பாப்பிறை பாடகர்குழுவிற்கு அங்கீகாரம் அளித்தார்.

பேராயர் Guido Pozzo

இச்சனிக்கிழமையன்று, Ecclesia Dei திருப்பீட அவை, இனிமேல் செயல்படாது என அறிவித்து, அந்த அவையின் செயலராகப் பணியாற்றிய பேராயர் Guido Pozzo அவர்களை, சிஸ்டைன் பொருளாதார மேற்பார்வையாளராகவும் திருத்தந்தை நியமித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2019, 15:11