"இன்னலின் மடல்கள்" என்ற பெயரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள புதிய நூல் "இன்னலின் மடல்கள்" என்ற பெயரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள புதிய நூல் 

"இன்னலின் மடல்கள்" – திருத்தந்தையின் புதிய நூல்

"இன்னலின் மடல்கள்" என்ற பெயரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள ஒரு நூல், சனவரி 29, இச்செவ்வாயன்று, வெளியானது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"வாழ்வுப் பயணத்தை தகுந்த முறையில் நடத்திச்செல்லும் இரகசியம், இயேசுவை, நம்முடன் பயணிக்க அனுமதிப்பதாகும். நம் வாழ்க்கையை வழிநடத்தும் பணியை அவரிடம் ஒப்படைக்கவேண்டும்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, சனவரி 30 இப்புதனன்று வெளியாயின.

மேலும், "இன்னலின் மடல்கள்" என்ற பெயரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள ஒரு நூல், சனவரி 29, இச்செவ்வாயன்று, வெளியானது.

இயேசு சபையினரின் "La Civiltà Cattolica" நிறுவனமும், Ancora என்ற பதிப்பகமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்நூலில் காணப்படும் இரு பிரிவுகள், "நேற்றைய இன்னல்களில்", மற்றும், "இன்றைய இன்னல்களில்" என்று தலைப்பிடப்பட்டுள்ளன.

1758ம் ஆண்டிற்கும் 1831ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், இயேசு சபை ஒடுக்கப்பட்ட இன்னலை மையப்படுத்தி, அன்றைய காலக்கட்டத்தில் இயேசு சபையின் உலகத் தலைவர்களாக இருந்த அருள்பணி Lorenzo Ricci மற்றும், அருள்பணி Jan Roothaan ஆகிய இருவரும் எழுதிய எட்டு மடல்கள், இந்நூலின் முதல் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இம்மடல்களைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டீனா நாட்டில், இயேசு சபை துறவியாகப் பணியாற்றிய வேளையில், 1987ம் ஆண்டு, எழுதிய சிந்தனைகளின் தொகுப்பும், இந்நூலின் முதல் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

தற்போதைய திருஅவை சந்திக்கும் பிரச்சனைகளில், சிறியோருக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் என்ற மிக முக்கியமான பிரச்சனையைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள மடல்கள், "இன்றைய இன்னல்களில்" என்ற இந்நூலின் இரண்டாம் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வலுவற்ற நிலையில் இருக்கும்போது, இறைவனின் இரக்கத்தை நம்பி, அவரிடம் குறைகளை எடுத்துச் சொல்வது, அருள்தரும் வாய்ப்பாக அமையும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2019, 15:10